PUBLISHED ON : மே 22, 2010

* எனக்கு மூன்று ஆண்டுகளாக ரத்தக்கொதிப்பு உள்ளது. நான் தினமும் 45 நிமிடம் யோகா பயிற்சி செய்கிறேன். இருப்பினும் ரத்தஅழுத்தத்தின் அளவு 150/100 ஆக உள்ளது. இதை மாத்திரை இன்றி குறைக்க முடியுமா?
-எஸ்.சிவசாமி, திண்டுக்கல்
ரத்தக்கொதிப்பு என்பது ஒரு வாழ்க்கை முறை வியாதி. இவ்வியாதியை உணவு கட்டுப்பாடு, உப்பை நன்கு குறைப்பது, சர்க்கரையை தவிர்ப்பது, எண்ணெய் பலகாரங்களை தவிர்ப்பது, தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது, மனதை நிம்மதியாக வைப்பது போன்றவற்றால் கட்டுப்பாட்டில் வைக்கலாம். இவை அனைத்தையும் செய்தாலும்பலருக்கு ரத்த அழுத்த அளவு அதிகமாகவே உள்ளது. இது இந்த வியாதியின் தீவிரத்தையும், ஆதிக்கத்தையுமே காட்டுகிறது. இவை அனைத்தும் செய்த பின்பும், ரத்தஅழுத்தம் கூடுதலாக இருந்தால் அவசியம் மருந்து எடுத்தாக வேண்டும். தற்போதுள்ள நவீன மருந்துகள் மிக எளிதாக ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பதுடன், பக்க விளைவின்றியும் பார்த்துக் கொள்கின்றன. இந்த மருந்துகளை தொடர்ந்து சில ஆண்டுகள் எடுக்க வேண்டி வரும். வியாதியின் தன்மை கட்டுப்பாட்டில் வந்த பிறகு, மாத்திரைகளை குறைக்க முடியும். யோகாவை பொறுத்தவரை இதுரத்தஅழுத்த அளவை 10 முதல் 15 மி.மீ., வரை குறைப்பதாக நவீன ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆனால் யோகா மட்டுமே போதுமானதல்ல. நடைப் பயிற்சிதான் இருதயத்துக்கும், ரத்தஅழுத்தத் திற்கும் உகந்தது.
எனக்கு 65 வயதாகிறது. நான்கு மாதங்களாக கால் மூட்டு பகுதியில் வீக்கமும், வலியும் ஏற்படுகிறது. எலும்பு டாக்டர் வலிமாத்திரையை தந்தார். இதனால் எனக்கு இருதய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா?
-ஆர். பானுமதி, மதுரை
உங்கள் வயதில் வரும் மூட்டு வலிக்கும், இருதயத் துக்கும் சம்பந்தமே கிடையாது. உங்கள் மூட்டுவலிக்கு மூட்டு தேய்மானமே காரணமாக இருக்க அதிகவாய்ப்பு உள்ளது. சிறுவயதில் வரும் "ருமாட்டிக் பீவர்' (Rheumatic Fever) என்ற மூட்டுவலிதான், நேரடியாக இருதயத்தை பாதிக்கும் தன்மை படைத்தது. எனவே உங்கள் எலும்பு டாக்டர் கூறுவது போல, மாத்திரையை எடுத்துக் கொண்டு, பிசியோ தெரபிஸ்ட் பயிற்சியையும் செய்வது நல்லது.
எனது உறவினரின் வயது 65. இரண்டு மாதங்களுக்கு முன் பைபாஸ் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்துள்ளார். அவரிடம் அதிர்ச்சிகரமான தகவலை கூறலாமா?
-என்.நாகராஜன், ராமநாதபுரம்
இருதய நோயாளிகள் எப்போதும் மனதை நிம்மதியாக வைத்துக் கொள்வது மிகமுக்கியம். மனதை பல்வேறு காரணங்களால் பதட்டம் அடையச் செய்தால், அது இருதயத்தை பல வகைகளில் தாக்க வாய்ப்புள்ளது. இதனால் இருதய துடிப்பு அதிகரிப்பு, ரத்த அழுத்தம் கூடுதல், இருதய ரத்தநாளத்தில் சுருக்கம் ஏற்படும். இருதய பாதிப்பும் அதிகமாக இருக்கும். இது மருந்து மாத்திரை, பைபாஸ் சர்ஜரி, பலூன் சிகிச்சை மூலம் என எவ்வகையில் சிகிச்சை செய்தவராக இருந்தாலும் பொருந்தும். இருந்தாலும் ஒரு அதிர்ச்சி தரத் தக்க செய்தியை சொல்ல, பக்குவமாக கொஞ்சம், கொஞ்சமாக கூறுவதே நல்லது.
எனக்கு நான்கு ஆண்டுகளாக ரத்தக் கொதிப்பு உள்ளது. இதற்காக, "Amlodipine மற்றும் Atorva Statin' என்ற மாத்திரைகளை எடுத்து வருகிறேன். எனக்கு சில மாதங்களாக ஈறுகள் வீக்கமாக உள்ளது. பல்டாக்டரிடம் காண்பித்தபோது, நீங்கள் எடுக்கும் மாத்திரைகளாலும் ஏற்பட்டிருக்கலாம் என்கிறார். நான் என்ன செய்வது?
கே.சிதம்பரம், பெரியகுளம்
ஈறுகள் வீக்கம் மிக அரிதாக "Amlodipine" மாத்திரையை எடுப்பவர்களுக்கு வரக்கூடும். இதை ஒரு பெரிய பக்கவிளைவாக கருதாமல், உங்கள் இருதய டாக்டரிடம் கலந்து பேசி, அதற்கு பதில் வேறு மாத்திரைகளை எடுப்பது நல்லது. இந்த மாத்திரைகளை நிறுத்திய சில மாதங்களில் ஈறுவீக்கம் குறைந்துவிடும். "Atorva Statin' மாத்திரையால் ஈறுவீக்கம் வராது.
டாக்டர் விவேக்போஸ், மதுரை

