PUBLISHED ON : அக் 13, 2024

குறைப்பிரசவத்தில் குழந்தை பிறப்பதற்கு, தாய்க்கு உயர் ரத்த அழுத்தம், தொற்று பாதிப்பு, சர்க்கரைக்கோளாறு, பிறவியிலேயே குறையுடன் கரு உருவாவது, ஒரே பிரசவத்தில் இரட்டைக்குழந்தைகள் என்று பல காரணங்கள் உள்ளன.
சிலருக்கு மரபியல் ரீதியிலேயே கர்ப்பப் பையின்வாய் நீளம் குறைவாக இருக்கும். இதனாலும் குறைப்பிரசவம் ஏற்படலாம்.
இதுபோன்ற காரணங்களை பல ஆண்டுகளாக பார்த்து வந்த நாங்கள், சமீப ஆண்டுகளில் அதிர்ச்சியான ஒரு காரணத்தைப் பார்க்கிறோம். 30 வாரத்தில் வழக்கமாக செய்ய வேண்டிய ஸ்கேன் பரிசோதனையில், கர்ப்பப்பை வாய் கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தாயின் உயிரைக் காப்பாற்ற உடனடியாக சிசரியன் செய்து குழந்தையை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
சிலருக்கு வயிறு, நிணநீர் கட்டிகளில் பரவி, 'ஸ்டேஜ் - 4' என்ற நான்காவது நிலையில் கேன்சர் பாதிப்பு இருப்பதையும் பார்க்கிறோம்.
குறைப் பிரசவத்திற்கு கேன்சர் ஒரு காரணமாக இருப்பது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.
கர்ப்பப்பை வாய் கேன்சருக்கு, சர்வேரிக்ஸ், கார்டாசில் போன்ற தடுப்பூசிகள் உள்ளன. இந்த ஊசியை போட்டால் கேன்சர் வரும் அபாயம் 90 சதவீதத்திற்கு மேல் குறையும்.
எல்லா பெண் குழந்தைகளுக்கும், 10 - 14 வயதிற்குள் கர்ப்பப்பை வாய் தடுப்பூசியை போடுவது நல்லது. 10 வயதில் போட்டால் இரண்டு டோஸ் போதும். தாமதமாக போடும்போது மூன்று டோஸ் போட வேண்டும். இதைவிட அதிக பாதுகாப்பு தரும் கார்டாசில் - 9 என்ற தடுப்பூசி சமீபத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.
என்னிடம் வரும் டீன் ஏஜ் பெண்கள், அவர்களின் பெற்றோரிடம் இந்த தடுப்பூசியைபோட வேண்டியதன் அவசியத்தை சொல்கிறேன்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி என்பது, 5 வயது வரை மட்டும் தான். அதற்குப்பின், இன்னும் பல நோய்களுக்கு தடுப்பூசி என்ற ஒன்று இருப்பதே தெரிவதில்லை.
ஒரு டீன் ஏஜ் பெண் வந்தால், அந்த நேரத்தில் என்ன பிரச்னை உள்ளதோ அதை மட்டும் கவனித்து, மருந்து எழுதி அனுப்பி விடுகிறோம். பிரிவென்டிவ் ஹெல்த் பற்றி பேசுவதற்கான வாய்ப்பு அந்த அளவுக்கு கிடைப்பதில்லை. எல்லா டாக்டர்களும் தங்களிடம் வரும் டீன் ஏஜ் பெண்களுக்கு இதைப்பற்றி சொல்ல வேண்டும்.
டாக்டர் தீபா ஹரிஹரன்,
பச்சிளங் குழந்தைகள் சிறப்பு மருத்துவர்,
இயக்குனர், என்.ஐ.சி.யு., சூர்யா மருத்துவமனை, சென்னை
044 - 2376 1750 bicu_deepa@yahoo.co.in