PUBLISHED ON : அக் 13, 2024

பெற்றோருக்கு அதிக பதற்றத் தையும், பயத்தையும் ஏற்படுத்தும் பொதுவான விஷயங்களில் ஒன்று குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல்.
இந்த பதற்றமே பல நேரங்களில் தவறான சிகிச்சைக்கும், அவசியமே இல்லாமல் மருந்துகள் தருவதற்கும், அதனால் ஏற்படும் பின்விளைவுகளை எதிர்கொள்வதற்கும் வழி செய்கிறது.
தொற்று பாதிப்பு உட்பட பல்வேறு உடல் கோளாறுகளின் வெளிப்பாடே காய்ச்சல். உடலின் இயல்பான வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட், அதாவது 37 டிகிரி செல்ஷியஸ்.
உடல் வெப்பநிலையை மூளையின் அடிப்பகுதியில் உள்ள 'ஹைப்போதாலமஸ்' சீராக நிர்வகிக்கிறது.
வெளிப்புற அல்லது உடல் உள்செயல்பாடுகளில்ஏற்படும் தாக்கங்களை எதிர்கொள்ள வசதியாக, இயல்பான உடல் வெப்பநிலையில் இருந்து ஒன்றிரண்டு டிகிரியை தேவையான நேரங்களில், ஹைப்போதாலமஸ் அதிகரிக்கச் செய்யும். இதனால்,ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எல்லா குழந்தைகளுக்கும் காய்ச்சல் ஏற்படுவது இயல்பு.
காய்ச்சல் இருந்தால், குழந்தைகள், பெரியவர்கள்யாராக இருந்தாலும் அசவுகரியத்தை தரும். 'மெட்டபாலிசம்' எனப்படும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும். இதனால், அதிக அளவில் ஆக்ஸிஜன் உடலுக்கு தேவைப்படும். கார்பன் - டை - ஆக்சைடு உற்பத்தியும் அதிகமாகும். இதயம், ரத்த நாளங்கள், சுவாச மண்டலம் வழக்கத்தை விடவும் அதிகமாக வேலை செய்யும்.
பால்பற்கள் முளைக்கும் தருணத்தில்,குழந்தைகளுக்கு காய்ச்சல் வரும் என்பது பொதுவான நம்பிக்கை. இதற்கு மருத்துவ, அறிவியல் ரீதியில் எந்த ஆதாரமும் இல்லை.
குழந்தைப் பருவத்தில் தரப்படும் சில தடுப்பு ஊசி மருந்துகள் காய்ச்சலை ஏற்படுத்தலாம்.
சிகிச்சை அவசியமா என்பதை தெர்மாமீட்டர் காட்டும் உடல் உஷ்ண அளவை வைத்து முடிவு செய்ய இயலாது.
மாறாக காய்ச்சலுடன் இருக்கும் குழந்தையின் நடவடிக்கை குழந்தை பயத்துடன் இருப்பது, நீண்டகாலமாக நோய் பாதிப்பு, நீர்ச்சத்து குறைபாடு,104 டிகிரி செல்ஷியசிற்கு மேல் உடல் உஷ்ணம், தலையில் பலத்த அடி, தொடர்ந்து இதய செயலிழப்பு போன்றவை காய்ச்சலுடன் இருந்தால் உடனடியாக டாக்டரிடம் காட்ட வேண்டும்.
இதுதவிர, விளையாடாமல் இருப்பது, பசி இல்லாதது, பழுப்பு நிறத்தில் சிறுநீர் கழிப்பது, குழந்தையின் இயல்பான நடவடிக்கை, தோற்றத்தில் மாற்றம், தோலில் தடிப்புகள், சிறிய கொப்புளங்களை அழுத்தும்போது வெள்ளையாக மாறாதது, பழுப்பு நிறக்கட்டிகள், விழுங்குவதில் சிரமம், அதிக அளவில் எச்சில் ஊறுவது, மூக்கில் இருக்கும் சளியை சுத்தம் செய்த பின்னும் சுவாசிக்க சிரமப்படுவது, வெளிறிய கண்கள், மூர்க்கத்தனமாக நடப்பது, எரிச்சல் அடைவது போன்ற அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
காய்ச்சலை குறைக்கும் மாத்திரைகள்
காய்ச்சலை குறைப்பதில் பாதுகாப்பான மருந்துபாராசிட்டமால். குழந்தையின் உடல் எடையில் 1 கிலோவிற்கு, 10 - 15 மில்லி கிராம் என்ற அளவில், 4 - 6 மணி நேரத்திற்கு ஒருமுறைதரலாம். ஒரு நாளில் ஐந்து மாத்திரைகளுக்கு மேல், மருந்தாக இருந்தால் ஐந்து முறைக்கு மேல் தரக்கூடாது. காய்ச்சலால் குழந்தைக்கு அசவுகரியம் இருந்தால் மட்டுமே தர வேண்டும். மாத்திரை கொடுத்த, 30 - 60 நிமிடத்தில் மாற்றம் தெரியும். முழுமையாக குணம் தெரிய 3 - 4 மணி நேரம் ஆகலாம். அதிகபட்சம் ஆறு மணி நேரம் கூட ஆகலாம்.
அதிகப்படியான டோஸ் பாராசிட்டமால் தரும்போது, கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம். எனவே, டாக்டர் பரிந்துரைத்த மாத்திரை, டானிக் அட்டையின்மீது குறிப்பிடப்பட்டுள்ள அளவில் மட்டுமே தர வேண்டும்.
ஐபுபுரோபென் என்ற மாத்திரை, பாராசிட்டமால் மாத்திரைக்கு மாற்றாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.இதை 6 மாதம் - 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குத் தரலாம்.
மாற்று மருத்துவ முறைகளுடன் சேர்த்து, பாராசிட்டமால், ஐபுபுரோபென் தருவது நல்லதல்ல.
காய்ச்சல் இல்லாமல், வேறு காரணங்களால் உடல் உஷ்ணம் அதிகமாக இருந்தால், உடம்பை ஈரத் துணியால் அடிக்கடி துடைப்பது, அதிகப்படியான சூட்டால் உள்ளுறுப்புகள் பாதிப்படையாமல் பாதுகாக்க உதவும்.
உடலை துடைப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன், 'ஆன்டிபைரேட்டிக் ஏஜென்ட்ஸ்' என்று சொல்லப்படும் காய்ச்சலை தணிக்கும் மருந்துகளை கொடுத்த பின், உடலை துடைத்தால் தான் முழுமையான பலன் தெரியும்.
டாக்டர் எஸ்.பாலசுப்ரமணியன்,
குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்,
காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனை, சென்னை
044 - 4200 1800 sbsped@gmail.com