PUBLISHED ON : ஆக 07, 2022

உலகம் முழுதும் கடந்த ஆண்டு மட்டும் நேரடியாகவும், 'ஆன்லைன்' வாயிலாகவும், 27.34 டிரில்லியன் டாலர் பணம், 'ஷாப்பிங்'கிற்கு மட்டும் செலவு செய்யப்பட்டு உள்ளது. இதில், நம் நாட்டில் மட்டும் 883 பில்லியன் டாலர்கள். உண்மையில் ஷாப்பிங் செய்வதற்கும், மருத்துவ அறிவியலுக்கும் நேரடி தொடர்பு உள்ளது.
உடை, பரிசுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு சாதனம் என்று எதுவாக இருந்தாலும் புதிதாக பார்த்து, பலவற்றிற்கும் நடுவில் நமக்கு பிடித்ததை தேர்வு செய்யும் போது, மனது ரிலாக்ஸ் ஆகி, மூளையில் மகிழ்ச்சியை தரக்கூடிய 'டோபமைன்' என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரக்கிறது.
நேரடியாகச் சென்று ஷாப்பிங் செய்யும் போது மட்டுமல்ல; ஆன்லைனில் 'ஆர்டர்' செய்யும் போது, தேர்வு செய்த பொருள் பற்றிய தகவல்கள் வரும் போதெல்லாம் டோபமைன் சுரக்கிறது. இவ்வளவு ஏன், எதுவுமே வாங்க வேண்டாம். வெறுமனே ஷாப்பிங் இணையதளங்களைப் பார்த்து, என்னவெல்லாம் புதிதாக வந்திருக்கிறது என்று தேடும் போது கூட, இந்த ஹார்மோன் சுரப்பதாக கூறுகின்றனர் விஞ்ஞானிகள். அதனால் தான், 'லாக் டவுன்' சமயத்தில் பலருக்கும் மனதை உற்சாகமாக வைத்திருக்க கைகொடுத்தது இணையதளம்.
- கஸ்சியூமர் சைக்காலஜி