PUBLISHED ON : ஆக 07, 2022

தினமும் நாம் எடுத்துக் கொள்ளும் திரவத்தின் அளவை விட, உடலில் இருந்து அதிக திரவம் வெளியேறும் போது, நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. குழந்தைகளை இது அதிகம் பாதிக்கிறது; உயிரிழப்பையும் ஏற்படுத்தலாம்.
குழந்தைகளின் மொத்த உடல் எடையில் 70 சதவீதம் தண்ணீர் உள்ளது. அதிக வளர்சிதை மாற்றம், தாகத்தை வெளிப்படுத்த தெரியாத நிலையால், நீர்ச்சத்து குறைவால், தாதுக்கள் இழப்பு ஏற்பட்டு, மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன.
பொதுவான காரணிகள்
ரத்தத்தில் திரவ அளவு குறைவதால், உப்பு, சர்க்கரை, தாதுக்களின் வழக்கமான அளவு குறைவது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, நீண்ட நேரம் வெப்பத்தில் இருப்பது, வைரஸ், பாக்டீரியா தொற்றுகள், அதிக வியர்வை, அதிக சிறுநீர் கழித்தல், காய்ச்சல். சில சமயங்களில் குழந்தைகளிடம் அறிகுறிகள் வேறு விதமாகவும் இருக்கலாம். அழும் போது கண்ணீர் வராதது, அதிக தூக்கம், எரிச்சல், சோர்வு.
வியர்வை, சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் திரவ இழப்பை தெரிந்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து குறைபாட்டால், தாதுக்கள் இழப்பும் சேர்ந்தே ஏற்படும். காய்கறிகள், பழங்கள், இறைச்சி சாப்பிடுவதால், இழந்த தாதுக்களை பெறலாம்.
குழந்தைகளுக்கும் இதே நிலை தான் வரும். அவ்வப்போது சிறு சிறு துளிகள் தண்ணீர் கொடுத்து, குழந்தையின் உடல் நீரளவை சீராக வைக்கலாம். பழங்கள் அல்லது எலுமிச்சை சாறு பிழிந்து தரலாம்.
உடற்பயிற்சி செய்வதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன், தண்ணீர் குடிக்க வேண்டும்; உடற்பயிற்சி செய்யும் போது, அரை கப் குடிக்கலாம். உடற்பயிற்சிகளை முடித்த பின் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம். இதனால், இதயத் துடிப்பு, உடல் வெப்பநிலையில் சமநிலையை உறுதி செய்யலாம், இது, செயல்திறனை மேம்படுத்தும்.
உப்பு, சர்க்கரை கரைசல் என்று கூறப்படும், 'ஓரல் ரீ ஹைட்ரேஷன் சொல்யூஷன்' - ஓ.ஆர்.எஸ்., இது, உலகெங்கிலும் உள்ள நீர்ச்சத்து குறைபாட்டிற்கான சிகிச்சையாக உலக சுகாதார மையம் பரிந்துரைக்கிறது. இந்த உப்பு, சர்க்கரை கலவை நீரிழப்பைத் தடுக்கிறது. இழந்த உப்புகளை ஈடு செய்கிறது. குழந்தைப் பருவ வயிற்றுப்போக்கு இறப்புகளைக் குறைக்க, உலக அளவில் மிகப் பெரிய வரமாக இது கருதப்படுகிறது.
டாக்டர் வைபவ் சுரேஷ்
நோய் தடுப்பு நிபுணர்,
சென்னை