PUBLISHED ON : மார் 23, 2014

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் 93 வயது தாய், வீட்டில் தவறி விழுந்ததால், இடுப்பு மூட்டு முறிந்தது. ஊன்றுகோல் உதவியுடன் நடந்தவரால் இப்போது அடிப்படை செயல்களைக் கூட செய்ய இயலவில்லை. அவரை நடக்க வைக்க முடியுமா?
இடுப்பு மூட்டு முறிவு ஏற்படுவது சரியாக சிகிச்சை அளிக்கப்படா
விட்டால், வாழ்க்கையின் தன்மையை மிகவும் பாதிக்கும். நவீன தொழில்நுட்பத்தில் இதை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யலாம். சிலருக்கு இடுப்பு மூட்டு மாற்று சிகிச்சை தேவைப்படும். வயது முதிர்வு என்பதால் அறுவை சிகிச்சை முடியாதது அல்ல. அவர்கள் இருதயம், நுரையீரல் மற்றும் இதர உறுப்புகளின் செயல்பாடுகளை ஆராய்ந்து, அதை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அறுவை சிகிச்சை செய்தால் வெற்றி வீதம் அதிகமாகும். மீண்டும் உங்கள் தாயார் விரைவில் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பலாம்.
என் 24 வயது மகனுக்கு வாரத்தில் 4 முறை தோள்மூட்டு விலகுகிறது.
எந்த விபத்தும் இல்லாமல், தோள்மூட்டு விலகுவதற்கு, சிகிச்சை ஏதும் உண்டா?
மிக எளிதாக தோள்மூட்டு விலகுகிறது என்றால், உங்கள் தோள்மூட்டின் கிண்ணம் பகுதியில் உள்ள எலும்பு முறிந்து வடிவமும், சீர்குலைந்து இருக்கலாம். பிசியோதெரபி, மாவுக்கட்டு, மருந்துகள் போன்ற வகையில், இதை சரிசெய்ய முடியாது. அறுவை சிகிச்சை முறையில் கண்டிப்பாக சரிசெய்யலாம். ஆனால் பெரும்பாலோருக்கு மூட்டு நுண்துளை சிகிச்சையில் தீர்வு காண முடியும்.
எனது 45 வயது தந்தைக்கு, வாகன விபத்தில், இடது முழங்காலுக்கு கீழே எலும்பு முறிந்துள்ளது. அடிபட்ட 2ம் நாளே கால் முழுவதும் பெரிய கொப்புளங்கள் வந்துள்ளன. வலியால் காலை அசைக்க முடியவில்லை. இதை சரிசெய்ய இயலுமா?
எலும்பு முறிந்தபின், கொப்புளங்கள் ஏற்பட்டால் அதை பிரஸ்ஸர் பிளிசர்ஸ் என்பர். இது எலும்பு முறிவின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. எலும்பு முறிவை சரிசெய்ய அறுவை சிகிச்சை முறைகள் தேவைப்படலாம். ஆனால் முதல் சிகிச்சையாக, காலை உயர்த்தி வைப்பது, ஐஸ்கட்டி வைப்பது, மேலும் கொப்புளங்களில் உள்ள நீரை அகற்றுவது போன்றவற்றை செய்வர். வீக்கம் முழுவதுமாக குறைய, சிலசமயங்களில் 14 நாட்கள் கூட ஆகிவிடலாம். வீக்கம் குறைந்தபின்தான், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் கால் முழுமையாக குணமடையும்.- டாக்டர் கே.என்.சுப்ரமணியன்,
மதுரை. (93442 46436)

