PUBLISHED ON : டிச 08, 2024

மாறி வரும் பருவநிலையை எதிர்கொள்ள நம் உடலுக்கு குறிப்பிட்ட காலம் ஆகலாம். இந்த இடைப்பட்ட நேரத்தில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், தொற்றுகள் நம்மை பாதிக்கவே செய்யும்.
இதில் பொதுவானது, இருமல், சளி. தொடர்ந்து இரண்டு நாட்கள் வெயில் அடித்து, எதிர்பாராமல் ஒரு நாள் மழை பெய்யும் போது, உடல் வெப்பநிலையை குறைத்து விடுமா என்றால், நிச்சயம் கிடையாது. பதிலாக அதிகரிக்கும்; தொற்று பாதிப்பும் கூடும்.
இந்த சூழலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்ய, முதலில் நம் உடலில் உள்ள கழிவுகளை முற்றிலும் வெளியேற்ற வேண்டும். இதற்கு தடையாக இருப்பது மன அழுத்தம். அடுத்தது உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம்.
எல்லா நேரமும் அதிக மசாலா, எண்ணெய், மைதா நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், பசை போன்று குடலில் ஒட்டிக் கொள்ளும்; கழிவுகள் வெளியேறாது; தொற்று பாதிப்பை அதிகரிக்கும்.
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சுலபமான வழி, தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
வைட்டமின் சி நிறைந்த நெல்லி, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு முடிந்த அளவு சாப்பிடலாம்.
இதில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். பல மருந்துகள் தயாரிக்க அடிப்படை மூலப்பொருளான இதை, நேரடியாக எடுத்துக் கொண்டால் இன்னும் நல்ல பலன் தரும். பழம் சாப்பிட்டால் சளி அதிகரித்து, தொண்டை கரகரப்பாக உள்ளதாக சொல்வார்கள். அதிக சளி இருந்தால்,
இப்பழங்கள் சாப்பிட்டால் உள்ளிருக்கும் கபம் எளிதாக வெளியேறும். இது சளி அதிகரிப்பதைப் போன்று தோன்றும். வெந்நீரும் குடிக்கலாம். எந்தப் பருவத்திலும் இந்தப் பழங்களை சாப்பிடலாம்.
டாக்டர் யோ. தீபா, இயற்கை மருத்துவர், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரி, சென்னை044-26222515salshaayaan@gmail.com