தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/தோல் கண்டார் தோலே கண்டார்!

தோல் கண்டார் தோலே கண்டார்!

தோல் கண்டார் தோலே கண்டார்!


PUBLISHED ON : டிச 23, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 23, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தோல், முடி, நகம் மற்றும் அவை சார்ந்த நோய்களை ஆய்ந்து பயில்வதே

தோலியல். பெரும்பான்மையான தோல், முடி, நக நோய்கள், நம் உடலின் அகச் சூழலும்,

நாம் வாழும் புறச் சூழலும் சார்ந்தவை என்பதால், தோலியலை தோல், முடி, நகம்

என்ற எல்லைக்குட்படுத்துவது முறையாகாது.

உண்ணும் உணவும், உடுத்தும் உடையும், குளிக்கும் மற்றும் குடிக்கும் நீரும், சூரியனும், சூரியக் குடைக்குட்பட்ட அனைத்தும், இன்னும் பலவும், அவை தொன்று தொட்டு பழக்கத்தில் மற்றும் புழக்கத்தில் உள்ள பொருட்களாக இருப்பினும், நவ நாகரீக உலகில், மனிதனால் உருவாக்கப்பட்ட பல்வேறு வேதிப் பொருட்களாக இருப்பினும், ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒரு சூழலில், தோல், முடி, நகங்களை பெருமளவு பாதிக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

புறச்சூழலில் உள்ள பல்வேறு விதமான வேதிப் பொருட்கள், தாவரங்கள், உயிரினங்கள், ஒட்டுண்ணிகள், நுண்கிருமிகள், கதிர்வீச்சு, தட்பவெப்பம், காற்று, மாசு, காற்றின் ஈரப்பதம், இன்னும் பிற எண்ணிலடங்கா தீமைகள் குறித்த விரிவான, தெளிவான அறிவாண்மை, ஒரு தோலியல் மருத்துவருக்கு மிக அவசியம்.

அகச்சூழல் முக்கியம்

ஒரு தோல் நோயாளியின் தொழில் மற்றும் பழக்க வழக்கங்கள் குறித்து, அவருடைய தோல் மருத்துவர் துல்லியமாக அறிந்திருக்க வேண்டும். அது மட்டுமின்றி, தோல், முடி, நக நோயாளிகளின் தனிப்பட்ட வாழ்க்கை முறையில் கடைப்பிடிக்கும் வழிபாட்டு முறைகள் முதல், பாலியல் பழக்கங்கள் வரை அனைத்தும், தோல் மருத்துவருக்கு தெரிந்திருக்க வேண்டும். உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசாமை வேண்டும் என்பது, தோல் மருத்துவத்தில் முற்றிலும் உண்மை.

தோல் மருத்துவத்தில், தோல், முடி, நக பாதிப்புகளில், புறச் சூழல் எவ்வளவு முக்கியமோ, அதைவிட அதி முக்கியமானது அகச் சூழல்.

உடலின் உள்ளுறை நோய்களும், உள்ளுறுப்புகளின் பாதிப்புகளும், அவற்றுக்காக நாம் உட்கொள்ளும் மருந்துகளும், பல நேரங்களில், பல சந்தர்ப்பங்களில், தோல், முடி, நகங்களில் தனித்துவமான பாதிப்புகளையும், அறிகுறிகளையும் ஏற்படுத்தக்கூடியவை என்ற நுண்ணிய விழிப்புணர்வு தோல் நோயாளிக்கும், தோல் மருத்துவருக்கும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

தோல் கண்டார்; தோலே கண்டார் என்று ஒருதோல் மருத்துவர் இருக்கலாகாது. தோல் நோயாளியின் அகச் சூழலையும், புறச் சூழலையும் கவனத்தில் கொண்டு, தோலையும், தோல் நோய்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.

தோலும், முடியும், நகமும், அகம் காட்டும் கண்ணாடி மனநல மருத்துவத்திற்கு அடுத்தபடியாக, தோல் மருத்துவத்தில் தான், மனத்தின் பாதிப்பு மிகப் பெருமளவு காணப்படுகிறது.

தோலும், முடியும், நகங்களும் உருவ அமைப்பில் பெரும்பங்கு வகிப்பதாலும், சமூகத்தில் தோல் நோய்கள் அருவருக்கத்தக்கதாக உருவகப்படுத்தப்படுவதாலும், தோல் நோய்கள் தாங்கொணாத துயரத்தையும், மன உளைச்சலையும், தோல் நோயாளிகள் மனதில் ஏற்படுத்துகின்றன.

பாதிப்பு அதிகரிக்கும்

தோல் நோய்கள், சுத்தமின்மையாலும், ஒழுக்கக் கேட்டினாலும், பாவத்தின் பயனாகவும் ஏற்படுகின்றன என்ற, தொன்று தொட்டு வரும் மூடக் கருத்துகள், தோல் நோயாளிகளின் உற்றார், உறவினர் உட்பட, சமூகத்தில் பலரால் பரப்பப்பட்டு, தோல் நோயாளிகளைக் கொல்லாமல் கொல்கின்றன.

ஆகக் கூடி மன உளைச்சல், தோல் நோய்களின் பாதிப்புகளை உச்சத்துக்கு கொண்டு செல்கிறது.

பெரும்பாலான நேரங்களில், ஒரு தோல் மருத்துவர், மன நல மருத்துவராக மாற வேண்டிய சூழல் அவசியமாகிறது. கட்டுக் கடங்காத மன அழுத்தத்தை கட்டவிழ்த்து விட்டு, லேசாக்கி உள்ள உறுதியை ஊக்குவிக்கும் பணியை ஒரு தோல் மருத்துவர் செய்வது, மருந்துகள் ஆற்றும் பணியை விட மகத்தான சேவை என்றால் அது மிகையன்று.

உடலும், மனமும் ஒரு சேர்ந்த அகமும், உணவும், உடையும், உறைவிடமும், வாழ்வியலும் ஒரு சேர்ந்த புறமும், தோல், முடி, நக நலனுக்கு எத்தனை பலம் என்பதை, தோல் நோயாளிகளும், மருத்துவரும் ஒரு சேர உணர்ந்து தெளிந்தால், தோல், முடி, நக நோய்கள் இனி மெல்லச் சாகும் என்பது, இனியதொரு செய்தி.

இனி வரும் அத்தியாயங்களில், தோல், முடி, நகம் கட்டமைப்பு, இயக்கம், வேதி மாற்றங்கள், அரும் பணிகள், அவற்றில் வரும் குறைபாடுகள், நோய்கள் குறித்து விரிவாக அறிவோம், தெளிவோம்.

டாக்டர் எஸ்.முருகுசுந்தரம்

மருத்துவ இயக்குனர், சென்னை தோல் மருத்துவ மையம், சென்னை.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us