கனவு தவிர்...நிஜமாய் நில்! - அடர்த்தி குறையும் அபாயம்!
கனவு தவிர்...நிஜமாய் நில்! - அடர்த்தி குறையும் அபாயம்!
PUBLISHED ON : அக் 20, 2019

ஒவ்வோர் ஆண்டும், 35 வயது மேலுள்ளவர்களுக்கு, எலும்புகளின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். இரு பாலருக்கும், 30 வயது வரை, எலும்புகளின் வளர்ச்சி இருக்கும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, முழு வளர்ச்சியுடன் இருக்கும். 35 வயதிற்கு மேல், எலும்புகளில் வளர்ச்சி இருக்காது; வலிமை குறையத் துவங்கும்.
கால்ஷியம் உற்பத்தியை துாண்டுவதில், 'ஈஸ்ட்ரோஜென்' ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் சுரக்கும், 'ஈஸ்ட்ரோஜென்' மாதவிடாய் நிற்கும் பருவத்தில் அல்லது நின்ற பின் குறைவதால், எலும்புகளின் வலிமை குறைகிறது. இதனால், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு, எலும்புகள் எளிதில் உடையக் கூடிய, 'ஆஸ்டியோபோரோசிஸ்' வருவதற்கான வாய்ப்பு, ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கு, நான்கு மடங்கு அதிகம். குறிப்பிட்ட வயதிற்கு முன்பே, மாதவிடாய் நின்றவர்கள், பல காரணங்களால், கர்ப்பப்பை, கருக்குழாய்களை அகற்றியவர்களுக்கும், எலும்புகளின் வலிமை குறையும் வாய்ப்பு அதிகம்.
தசைகளின் வலிமை குறைவாக உள்ள பெண்கள், உடற்பயிற்சி செய்யாதவர்கள், ஒல்லியான உடல் வாகு கொண்டவர்களுக்கு, இந்த பிரச்னை வரும் அபாயம் அதிகம். இந்தப் பிரச்னை இருப்பவர்கள், தடுமாறி விழுந்தாலே, எலும்புகள் உடைந்து விடும். தசைகள் வலிமை இழப்பதால், முதுகு வலி, எலும்புகளில், தசைகளில் வலி வரும்
நடைப்பயிற்சி, 'ஜாகிங்', சைக்கிள் ஓட்டுவது என, ஏதாவது உடற்பயிற்சியை தினமும், 30 நிமிடங்கள் செய்வது, எலும்புகள், தசைகளின் வலிமைக்கு உதவும்.
ரத்தப் பரிசோதனை செய்து, கால்ஷியம், விட்டமின் - டி பரிசோதனை செய்து, அளவைத் தெரிந்து கொள்ள வேண்டும். எலும்புகளின் அடர்த்தியை தெரிந்து கொள்ள, அதற்கான பரிசோதனை உள்ளது; அதையும் செய்ய வேண்டும். குறைபாட்டிற்கு ஏற்றாற் போல, கால்ஷியம், விட்டமின் - டி மாத்திரைகளை தருவோம். 'ஆஸ்டியோபோரோசிஸ்' தீவிரமாக இருந்தால், அதற்கென பிரத்யேகமாக, மாதம் ஒரு முறை சாப்பிடும் மாத்திரைகள், ஆண்டிற்கு ஒரு முறை போடும் ஊசிகள் உள்ளன. இதனால், பிரச்னையின் தீவிரம் குறைந்து, எலும்புகள் உடைவது போன்ற அபாயங்களை தவிர்க்கலாம்.
இதை, 'சைலண்ட் டிசீஸ்' என, சொல்வோம். எதிர்பாராமல் எலும்புகள் உடையும் போது வருகிறவர்களை பரிசோதித்தால், பிரச்னை தீவிரமாக இருப்பது தெரிய வரும்.
50 வயதுக்கு மேல், மாதவிடாய் முடிந்த அல்லது முடியும் பருவத்தில் இருக்கும் பெண்கள் அனைவரும், 'ஆஸ்டியோபோரோசிஸ்' பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பரம்பரையாக இந்தப் பிரச்னை வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். பால், பால் பொருட்கள், பச்சை காய்கறிகள், கடல் உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும். மாதவிடாய் முடிந்து வரும் பெண்களில், சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு, அசைவ உணவு பழக்கம் இருப்பவர்களைக் காட்டிலும், இந்தப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
டாக்டர் அரவிந்தன் செல்வராஜ்,
செயல் இயக்குனர்,
காவேரி மருத்துவமனை,
சென்னை.
