தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சில சந்தேகங்கள்... சில பதில்கள்

சில சந்தேகங்கள்... சில பதில்கள்

சில சந்தேகங்கள்... சில பதில்கள்


PUBLISHED ON : ஆக 01, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 01, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூல நோயால் உடலில் தடிப்பு ஏற்படுமா?



ஜி.ஜி.கார்த்திக், மதுரை:

என் வயது 20; பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். திக்குவாய் பிரச்னையால், மற்றவர்களிடம் அதிகமாக உரையாட முடியாமல் தவிக்கிறேன். இதற்கு மருந்து அல்லது உடற்பயிற்சி உள்ளதா? எனக்கு அடுத்த ஆண்டு, 'கேம்பஸ் இன்டர்வியூ' உள்ளது. எனவே இக்குறையை போக்க என்ன வழி?

வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற பிரபலமானவர்கள் திக்குவாய் உள்ளவர்களாகவே இருந்தனர். அவர்கள் புகழ் உச்சிக்குச் செல்ல, இந்தப் பிரச்னை தடையாக இருந்ததே இல்லை. எனினும், இப்பிரச்னையுள்ள பெரும்பாலானவர்கள், தங்கள் திறமையை வெளிக் கொணர்வதில்லை. வேலைக்கான நேர்முகத் தேர்வில் தோல்வியைச் சந்திக்கின்றனர். நேரடித் தேர்வில் பங்கு பெறும் போது, படபடப்பான மனநிலையில் அதிகமாகத் திக்குகின்றனர்.

நாக்கில் பிரச்னை உள்ளதால் தான் திக்குவாய் ஏற்படுகிறது என்பது தவறான கருத்து. எனவே, இதற்கு அறுவை சிகிச்சையும் பலன் தராது. படபடப்பின் காரணமாக திக்குவாய் ஏற்படுவதால், ஆல்ப்ராக்சோலம், வாலியம் போன்ற மருந்துகளும், மன அழுத்த நீக்க மாத்திரைகளும், துவக்க நிலையில் பயன்படுத்தலாம். எனினும், இவை முழு அளவில் பயன் தராது. சொல்லப் போனால், திக்குவாய் நீக்க மருந்துகளே கிடையாது.

பேச்சுப் பயிற்சியாளர்கள் மூலம், இக்குறையை சரி செய்யலாம். இதற்கென பிரத்யேக பயிற்சிகள் அளிக்கின்றனர். இதனால், தகவல் தொடர்புத் திறனும் பெருகி, சுய விழிப்புணர்வு, தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிதாக அறிமுகமாகியுள்ள, நீங்கள் பேசுவதை நீங்களே கேட்கும் வகையிலான கருவிகளும், கம்ப்யூட்டர் பேச்சுப் பயிற்சி தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தலாம்.

பேச்சுப் பயிற்சி வல்லுனர்களைத் தேடிக் கண்டுபிடிக்க, சிரமம் ஏற்படுவதால், திக்குவாய் கொண்டவர்கள், தாங்களே பயிற்சி செய்து கொள்கின்றனர்.

பேசும் போது ஏற்படும் திக்குவாய், பாடும் போது ஏற்படுவதில்லை. சிந்தனைகளை மனதிலேயே ஒழுங்குபடுத்தி, பாடல்கள் மூலமாக வெளிப்படுத்துங்கள். வார்த்தைகளை மெதுவாக உச்சரிக்கப் பழகினால், 'த் த் த்' என்ற சத்தம் வருவது குறையும். சில வார்த்தைகளுக்கு சமிக்ஞைகள் பயன்படுத்தினால், கவனம் அதில் திரும்பி விடும்; திக்குவாய் மறையும்.



பொதுவான சில பயிற்சிகள்:

* பாட்டு மூலம் உங்கள் வார்த்தைகளை விவரிக்கலாம்.

* சொல்ல விரும்பும் வார்த்தைகளை, முதலில் மனதில் நிலைநிறுத்திக் கொள்ளுங்கள்.

* பேசத் துவங்கும் முன், மூச்சை நன்கு இழுத்து வெளிவிடுங்கள்.

* வார்த்தைகளை வேகமாக உச்சரிக்காமல், மெதுவாக உச்சரிக்கப் பழகுங்கள்.

* அதிக சத்தமாகவோ, மிகக் குறைந்த சத்தத்திலோ பேசும் போது, திக்குவாய் அதிகம் வெளியில் தெரியாமல் தடுக்கலாம்.

விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தினால், திக்குவாய் குறைபாட்டால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையை, மன அழுத்தத்தை விலக்கிக் கொள்ளலாம். யோகா செய்வது மனதை அமைதிப்படுத்தும்; குறு மூச்சை சீராக்கும். நாளடைவில் திக்குவாயும் குறையும்.



எம்.எஸ்.இப்ராகிம், சென்னை:

64 வயதாகும் என் மனைவிக்கு, ஆரம்ப நிலை தைராய்டு உள்ளதாக டாக்டர் கூறினார். மனைவி சற்று உடல் பருமனானவர். தைராய்டிற்கும், உடல் பருமனுக்கும் சம்பந்தம் உண்டா? இதன் பின் விளைவுகள் என்ன? இது பரம்பரை வியாதியா? அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா?

'ஹைபோதைராய்டிசம்' என்பது, ஹார்மோன் குறைவாகச் சுரக்கக் காரணமாவதற்கான அறிகுறி. இதனால் உடல் எடை அதிகரிக்கும். தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யவில்லையெனில், உடலின் வளர்சிதை மாற்றமும் குறையும். இதனால், உடல் வீங்கும். இதற்கு சிகிச்சை எடுக்காமல் விட்டால், மனதில் மாற்றங்கள் ஏற்பட்டு, இதயம் செயலிழக்கும். பெண்களிடையே இந்த பாதிப்பு அதிகம் உள்ளது. பாரம்பரிய பாதிப்பு இது.

தைராய்டு சுரப்பி வீங்கினால், மூச்சுக் குழலில் அழுத்தம் ஏற்பட்டு, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். தொண்டை வீங்கும். எனவே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். எனினும், பெரும்பாலானோருக்கு, மாத்திரைகள் மூலமே இதை குணப்படுத்தி விடலாம்.



சி.சாவித்ரி, கோவை:

52 வயதுடைய என் கணவருக்கு மூலநோய் மற்றும் சர்க்கரை நோயும் உள்ளது. உளுந்து, பாசிப்பயிறு, கொள்ளு போன்ற தானியங்களை உட்கொண்டால், உடலில் பல பகுதிகளில் ஒவ்வாமை காரணமாக தடிமன் ஏற்படுகிறது. இதை எவ்வாறு சரிப்படுத்தலாம்?

உங்கள் கணவரின் உடலில் ஏற்படும் தடிமனுக்கு இந்த பருப்புகளே காரணமாக இருக்கலாம். மூல நோய், நீரிழிவு நோய் ஆகியவற்றுக்கும், இந்த ஒவ்வாமைக்கும் தொடர்பு இல்லை. பருப்புகளின் நிறத்தைக் கூட்டப் பயன்படுத்தப்படும் நிறமேற்றிகள் மற்றும் ரசாயனங்களால் இந்த பாதிப்பு ஏற்படலாம். சில வியாபாரிகள், தானியங்களை வளர்க்க பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்துகின்றனர். எனவே, பருப்பை நன்கு கழுவிய பின் பயன்படுத்தவும். பருப்பு வாங்கும் கடையை மாற்றிப் பாருங்களேன்!

மருந்துகளின் பெயர்களைசரியாக எழுதுங்கள்!

மருத்துவ ரீதியான உங்கள் சந்தேகங்களுக்கு, நீங்களும் கடிதம் எழுதலாம். நீங்கள் சாப்பிடும் மருந்துகளின் பெயர்களை, சரியான உச்சரிப்புடன் எழுதுங்கள்.

சில சந்தேகங்கள்... சில பதில்கள்!

தினமலர் - ஹலோ டாக்டர், 219, அண்ணா சாலை, சென்னை - 2.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us