PUBLISHED ON : ஆக 08, 2010
ரத்தத்தில் கொழுப்பு அதிகரித்தால் பார்வை பறிபோகுமா?
சில சந்தேகங்கள்... சில பதில்கள்
வே.புஷ்பமாலதி, வத்தலக்குண்டு: முகத்தில் அடிக்கடி தேமல் போன்று வெள்ளைத் தழும்புகள் தோன்றுகின்றன; பிறகு மறைகின்றன. காரணம் என்ன? போக்க என்ன வழி?
இது, 'விட்டிலிகோ' போன்ற நிரந்தர வெள்ளைப் படை இல்லை. எனவே, கவலைப்பட வேண்டாம். வெயில் நேரத்தில் வெளியில் செல்லும் போது, சூரியக் கதிர்கள் ஒவ்வாமையால் இது போன்று ஏற்படலாம்.
வெளியில் செல்லும் போது, 'சன் ஸ்கிரீன்' போடாமல் செல்லாதீர்கள். வெளியில் செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன், இந்த லோஷனை பூசிக் கொள்ள வேண்டும். இதை பூசிய பின் முகத்தை கழுவக் கூடாது. வீடு திரும்பிய பின் தான், முகத்தை கழுவ வேண்டும்.
நீங்கள் பயன்படுத்தும் பவுடர் அல்லது மேக்-அப் பொருள் கூட, இது போன்ற ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். 'பேர்நெஸ் கிரீம்' கூட, இதற்கு காரணமாக அமையலாம். எனவே, அனைத்து விதமான மேக்-அப் பொருட்களையும் பூசிக் கொள்வதை நிறுத்துங்கள்.
கோ.சுரேந்திரன், சிதம்பரம்:
என் வயது 75. எனக்கு பி.பி., சுகர் கன்ட்ரோலில் உள்ளது. பழைய கொலஸ்ட்ரால் காரணமாக, எனக்கு வலது கண் பார்வை போனது. கண் மருத்துவமனை டாக்டர்கள், 'இனி அறுவை சிகிச்சை செய்ய முடியாது; உங்கள் இதயத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்' என்றனர். ஆகவே, என்னென்ன சாப்பிடலாம், என்னென்ன சாப்பிடக் கூடாது என கூறுங்கள்...
உங்கள் பார்வைத் திறன், அதிக கொழுப்பால் போனது என சொல்வது தவறு. நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக, இது போன்ற நிலை ஏற்பட்டிருக்கலாம். கண் நரம்பு பாதிக்கப்பட்டு, பார்வைத் திறன் குறைந்திருக்கலாம். உடலில் கொழுப்பு அதிகரித்திருப்பதால், இதய ரத்தக் குழாயின் சில இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம். இதனால் தான், இதயத்தை பாதுகாக்குமாறு, டாக்டர் உங்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்.
தினமும் 1,500 கலோரி அளவுள்ள உணவு உட்கொள்வது நல்லது. உணவு அட்டவணை வைத்து கொள்ளுங்கள். அதன்படி சாப்பிடலாம். சாப்பிடும் அளவு, கலோரி அளவு குறித்து தினமும் குறிப்பெழுதி வைத்து கொள்ளுங்கள். மாதம் ஒன்றுக்கு, 500 மி.லி., எண்ணெய் தான் நீங்கள் உட்கொள்ள வேண்டும். ரத்தத்தில் கொழுப்பை குறைக்க, மாத்திரைகள் உள்ளன. தினமும் 40 நிமிட நடை பயிற்சி மேற்கொள்வது, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றை கட்டுக்குள் வைத்திருக்கும்.
எல்.வாணி, சென்னை:
என் வயது 19. இடது மார்பக காம்பில் சிறியதாக மூன்று வெள்ளை வேர்க்குருகள் தோன்றின. கிள்ளியதால் அதன் உள்ளிருந்து முக பரு போல் வந்தது. ஒரு சில நாட்களுக்கு பிறகு, திரும்ப திரும்ப அதே இடங்களில் வந்து கொண்டே இருக்கிறது. எனக்கு ஏதேனும் குறை உள்ளதா? தீர்வு என்ன?
அவை, கொழுப்புக் கட்டிகளாக இருக்கலாம். கட்டியிலிருந்து மெழுகு போன்ற பொருள் வெளிவருவதை, 'செபம்' என்றழைக்கிறோம். கட்டிகளில் இது போன்று உருவாவது சகஜம் தான். உடலைத் தேய்த்து குளிக்க, பீர்க்கங்காய் நார் அல்லது பிளாஸ்டிக் நார் பயன்படுத்தவும். சோப்பை உடலில் நேரடியாக தேய்த்து கொள்ளாமல், இந்த நாரில் சோப்பை தடவி, பின் உடலில் தேய்த்து குளிக்கலாம். தினமும் இரண்டு வேளை குளியுங்கள். டால்கம் பவுடர் பயன்படுத்த வேண்டாம்.
உடலில் உள்ள நுண்ணிய துவாரங்களை இந்த பவுடர் அடைத்து கொண்டு, இது போன்ற கட்டிகள் உருவாக வழி வகுக்கும். ஒரு மாதம் இதை பின்பற்றி பாருங்கள். உபாதை தொடர்ந்தால், தோல் நோய் சிகிச்சை நிபுணரை அணுகுங்கள்.
சில சந்தேகங்கள்... சில பதில்கள்!
தினமலர் - ஹலோ டாக்டர், 219, அண்ணா சாலை, சென்னை - 2.

