தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/யாராவது பரிவாக நாலு வார்த்தை பேசுங்களேன்!

யாராவது பரிவாக நாலு வார்த்தை பேசுங்களேன்!

யாராவது பரிவாக நாலு வார்த்தை பேசுங்களேன்!


PUBLISHED ON : ஜூலை 04, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 04, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாமோதரன், கோவையில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருந்தவர். நுாற்றுக்கணக்கான ஊழியர்களிடம், கண்டிப்பாக இருந்து, அந்நிறுவனத்தை சிறந்த முறையில் வழி நடத்தியவர்.பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், தனியார் நிறுவனம், அவருடைய சேவையை, மேலும் சில ஆண்டுகள் பயன்படுத்திக் கொண்டது. சில மாதங்களுக்கு முன், தொடர்ந்து தன்னால் வேலை செய்ய இயலாது எனக் கூறி, பணியில் இருந்து விடுவித்துக் கொண்டார்.

தனியார் நிறுவனத்தின் முதலாளி, பெரும் மதிப்புடன், அவரை வீடு வரை அழைத்து வந்து, வாழ்த்தி விட்டு சென்றார்.அதன் பின், 'ஏண்டா வேலையை விட்டோம்' என்று வருந்தும் அளவுக்கு, வீட்டில் மகன் இல்லாதபோது, மருமகளின் வார்த்தைகளில் அனல் பறந்தது. நாளடைவில், மகன், பேரப்பிள்ளைகளின் முன்பும் வெளிப்படையாக மருமகள் திட்ட ஆரம்பித்தாள்.

இதனால் தாமோதரனுக்கு உயர் ரத்த அழுத்தமும், சர்க்கரையும் அதிகமானது. அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த மகன் ராஜேந்திரன், தந்தைக்கு என்ன தேவை என புரிந்து கொண்டார்.நவீன் மனநல மருத்துவமனையின் மூத்த மனநல மருத்துவர் ராதாகிருஷ்ணனிடம் அழைத்துச் சென்றார். குடும்பத்தினருக்கு கவுன்சிலிங் அளித்த டாக்டர், தாமோதரனுக்கு மருத்துவம் மற்றும் உளவியல் சிகிச்சையும் அளித்தார். தற்போது, தாமோதரன் குடும்பத்துடன் நலமாக உள்ளார்.

மனநல மருத்துவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

முதுமை என்பது வாழ்க்கையில், யாரும் விரும்பாமல் வருவதுதான். ஆனால், தவிர்க்க முடியாது. நாமும் முதுமை அடைந்து விட்டோம் என்று தங்கள் நிலையை கண்டு, அஞ்சும் நபர்கள் பலர் உள்ளனர். இதை, மருத்துவ உலகில் (GERENTOPHOBIA) என அழைக்கின்றனர்.

நம் நாட்டில், 60 வயதுக்கு மேல் உள்ளவர்களில், 8 முதல், 10 பேர் ஏதோ ஒரு மனநல பாதிப்பில் சிக்கியுள்ளனர். இதை போக்க, இளவயதினர், அவர்களுக்கு தேவையான உதவிகளை மனமகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். எதிர்பார்ப்பது மரியாதை மட்டுமே!முதியவர்கள், இளைய தலைமுறையினரிடம் எதிர்பார்ப்பது மரியாதை மட்டுமே. குடும்பத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் போது, முதியவர்களிடம் கலந்து ஆலோசித்து எடுத்தால், அவர்கள் உற்சாகமடைவர்.

உணவு உண்டார்களா, மருந்து உட்கொண்டார்களா, நிம்மதியான துாக்கம் இருந்ததா என, பரிவுடன் விசாரிக்க வேண்டும். குடும்பத்துடன் வெளியில் செல்லும் போது, முடிந்தவரை அவர்களையும், அழைத்து செல்வதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

வாழ்நாள் முழுவதும், நமக்காக உழைத்தவர்கள், நம்மை வளர்த்து, படிக்க வைத்து, ஆளாக்கியவர்கள் என, தங்கள் பெற்றோரை, பிள்ளைகள் நினைக்க வேண்டும். முடிந்தவரை தங்களுடன் அவர்களை தங்க வைத்து, வேண்டிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

இது, முதியவர்களுக்கு!

முதுமை என்பது காலச்சக்கரத்தின் ஒரு கட்டாயம் என்பதை உணர வேண்டும். தங்கள் வயதுக்கு ஏற்ப, நடந்து கொள்ள வேண்டும். மகன், மருமகள் பிரச்னையில் தலையிட்டு பெரிதுபடுத்தக்கூடாது. மகன், மகள், மருமகன், மருமகள், பேரக்குழந்தைகளின் அல்ப சந்தோஷத்துக்கு முட்டு கட்டை போடக்கூடாது.

மனதில் உள்ள கவலையை போக்க, தன் பால்ய நண்பர்களுடன் நடைப்பயிற்சி, மொபைல் போனில் உரையாடுவது, பழைய கால நினைவுகளை அசைபோடுவது ஆகியவற்றை மேற்கொள்ளலாம். வாய்ப்பு கிடைத்தால், சமூக பணிகளில் ஈடுபடலாம்.மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக, மனச்சோர்வு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதற்கான மருத்துவம் குறித்து, மனநல மருத்துவரிடம் ஆலோசனையும் பெற வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில், குடும்ப மருத்துவரை அணுகி, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், மூட்டுவலி மாத்திரை தவறாமல் உட்கொள்வது அவசியம்.இவ்வாறு, டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

முதுமையில் மனநோய்

இதுவே அறிகுறிபொதுவாக, 60 வயதுக்கு மேல், மனவருத்தம், பதட்டம், படபடப்பு, புலம்பல், துாக்கமின்மை, காரணமற்ற கற்பனை, எண்ணங்கள், குற்ற உணர்வு, மதிப்பு இழந்ததாய் உணர்வு, எதிலும் விருப்பமின்மை, சமூகத்திலிருந்து ஒதுங்கும் முடிவு, நாம் இருந்தும் பயன் இல்லை என்ற உணர்வு, சுமையாய் இருக்கின்றோம் என்ற எண்ணம், உடல் கோளாறுகள் இருப்பது போன்ற உணர்வு, சோர்வு, தலைவலி, உடல்வலி, இடுப்பு வலி, கை கால் குடைச்சல், மரண பயம் இருக்கலாம்.

மன வருத்த நோய்

அவர்களுக்கு தனியாய் இருப்பது போன்ற உணர்வு, விரக்தி, தன் மேலே பரிதாபம் கொள்ளுதல், தன்னுடைய குழந்தைகளுக்கு உரிய கல்வி கொடுக்கவில்லை என்ற உணர்வு, சொந்த வீடு கட்டவில்லை. வாரிசுகளுக்கு சொத்து சேர்த்து வைக்கவில்லை. ஒரு குழந்தை நன்றாக வாழ்கிறது. இன்னொரு குழந்தை கஷ்டப்படுகிறது என்ற எண்ணம், இவை யாவும் முதியோருக்கு மனவருத்த நோயை உருவாக்கலாம். இவற்றையெல்லாம் பெரிதுபடுத்தாமல், மீதமுள்ள நாட்களை மகிழ்ச்சியுடன் கழிக்க, கற்றுக் கொள்ள வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us