PUBLISHED ON : டிச 13, 2015

ஆரோக்கியமான உடலுக்கு புரத சத்து மிக அவசியம். உடலில் அழிந்த திசுக்களுக்கு பதிலாக, புதிய திசுக்களை உருவாக்க, புரத சத்தின் தேவை அவசியம். மாமிச உணவில் உள்ள புரத சத்துக்கு இணையாக, தாவர உணவுகளில் சோயா பீன்சில்தான் அதிக புரதம் உள்ளது. பருப்பு வகைகளில், 100 கிராமுக்கு, 20 சதவீதம் என்றால் சோயாவில், 40 சதவீதம் புரதம் உள்ளது. இதில் நல்ல கொழுப்பு சத்தும் அதிகம் உள்ளது. சோயா என்பது ஒரு வகையான பயறு. அதை பயறாக உட்கொள்வது தான் சிறந்தது. நம் உணவில் வாரத்தில் இரண்டு முறை, சோயாவை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
சோயாவில் லேசான கசப்பு தன்மை இருப்பதால், பலர் அதை சமையலில் சேர்த்துக் கொள்வதில்லை. அந்த கசப்பு தன்மையில்தான் புரதம் இருக்கிறது. சோயாவை நேரடியாக சமைக்க விரும்பாதவர்கள், ஒரு கிலோ கோதுமை மாவுக்கு, 100 கிராம் சோயா வீதம் சேர்த்து, அரைத்து பயன்படுத்தலாம். சூப் செய்யும் போதும், கெட்டியாக்க சோயா மாவை, ஒரு டீஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ளலாம்.
உடலிலுள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, எடையைக் குறைக்க விரும்புபவர்கள் சோயாவை விரும்பி சாப்பிடலாம். இதயத்துக்கும் நல்லது. சோயாவிலிருந்து பெறப்படும், ப்ரோபயாட்டிக் தயிரில் உள்ள ஈஸ்ட் , செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. விளையாட்டு வீரர்கள், பாடி பில்டர்கள் சோயாவை உணவில் சேர்த்து கொண்டால், புரதச்சத்து அதிகம் கிடைக்கும்.
மாதவிடாய் காலகட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு, ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைய ஆரம்பித்து, சினைப்பைகளின் செயல்திறனும் மங்கும். இப்பிரச்னைக்கு தீர்வு காண வாரத்தில், 5 நாட்கள் சோயா மில்க் எடுத்துக் கொண்டால் போதுமானது.
சோயாவை ஊற வைத்து, முளைகட்டச் செய்து, சுண்டலாகச் செய்து சாப்பிட்டால், ஈஸ்ட்ரோஜென் மற்றும் வைட்டமின் இ சத்து கிடைக்கும். பச்சைப்பயறில், 56.7 சதவீதமும், ராஜ்மாவில், 60 சதவீதமும் உள்ள கார்போஹைட்ரேட், சோயாவில் மட்டும்தான், 20.9 சதவீதம் உள்ளது. அதனால்தான் உடல் எடையை குறைப்பதில், சோயா முக்கிய உணவாக உள்ளது.
இந்த இரண்டும் இதய நோய் பாதித்தவர்கள், குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டோர், கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு அவசியம் தேவை. இரும்புச் சத்தும் மற்ற பருப்புகளை விட, சோயாவில் அதிகம். ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகம்
என்பதால், ஆண்கள், சோயா அதிகம் எடுத்துக் கொள்ளக்கூடாது.
தசைகளை பில்டப் செய்ய, ஜிம் செல்பவர்களை தினமும், 100 கிராம் சோயா எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அப்படி எடுப்பது செரிமானத்தைப் பாதிக்கும். காலையில், 25 கிராம் அளவு எடுத்துக் கொள்ளலாம்.
இரவில் தவிர்க்க வேண்டும். வயதானவர்களுக்குக் கொடுக்கும் போதும், சோயாவாக அரைத்துக் கொடுப்பதற்கு பதில், சோயா உருண்டைகளை சமையலில் சேர்த்துக் கொடுக்கலாம்.

