முளைக் கட்டிய வெந்தயம் இன்சுலின் சுரப்பை தூண்டும்!
முளைக் கட்டிய வெந்தயம் இன்சுலின் சுரப்பை தூண்டும்!
PUBLISHED ON : ஏப் 03, 2022

கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவை சாப்பிடுவதால் மட்டும் உடல் எடை அதிகரிப்பதில்லை. கொழுப்பு சத்து நிறைந்த உணவு தான், எடை அதிகரிக்க காரணம் என்று தவறாக நினைக்கிறோம்.
தேவையை விட அதிகமாக சாப்பிடுவதும் எடையை அதிகரிக்கும். எந்த வகையான உணவை சாப்பிட்டாலும், தேவைக்கு அதிகமாக சாப்பிடும் போது, அதிகப்படியான கலோரி கொழுப்பாக மாறி, உடலில் சேமிக்கப்படுகிறது.
கொழுப்பை கரைக்க என்ன செய்யலாம்?
தேவையற்ற மற்றும் தேவையான உணவை, தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொண்டே இருந்தால், பொறுமையிழக்கும் உடல், வியாதிகளை உருவாக்கும்.
எந்த மாதிரி?
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் இன்சுலின் ஹார்மோனின் செயல்பாடு குறையும் போது சர்க்கரை கோளாறு வருவதற்கான வாய்ப்பு அதிகம். ரத்த நாளங்களில் கொழுப்பு அடைத்து, சீரான ரத்த ஓட்டம் இல்லாமல், இதய நோய்கள், பக்கவாதம் வரலாம்.
இப்படி, உடல் பருமனால் ஏற்படும் பிரச்னைகளின் பட்டியல் நீளம். சமையலுக்கு தினசரி பயன்படுத்தும் பொருட்களை கவனமாக கையாண்டாலே, கொழுப்பை குறைக்க முடியும்.
பட்டை, பூண்டு, இஞ்சி, மஞ்சள், வெந்தயம் இவையெல்லாம் மெட்டபாலிசம் எனப்படும், உடலின் உள்செயல்பாடுகளை அதிகப்படுத்தி, கொழுப்பை குறைக்கும்.
பிரியாணி, குருமாவுக்கு மட்டும் இல்லாமல், பொடி செய்த பட்டையை டீயில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்; மஞ்சளை பாலில் போட்டு குடிக்கலாம்; வெந்தயத்தை முளைக் கட்டி சாப்பிடலாம். வெந்தயம் ஊற வைத்த நீரையும் குடிக்கலாம்; இன்சுலினை சீராக சுரக்க வைக்க இது உதவும்.
- ஆயுர்வேத மருத்துவம்
