தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மன அழுத்தத்தில் நட்சத்திரங்கள் - பாலிவுட் நடிகையர் இருவரின் அனுபவங்கள்

மன அழுத்தத்தில் நட்சத்திரங்கள் - பாலிவுட் நடிகையர் இருவரின் அனுபவங்கள்

மன அழுத்தத்தில் நட்சத்திரங்கள் - பாலிவுட் நடிகையர் இருவரின் அனுபவங்கள்


PUBLISHED ON : மே 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 04, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தீபிகா படுகோனே: இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் காலையில் படுக்கையை விட்டு எழுந்தபோது, வழக்கத்தை விடவும் வித்தியாசமாக உணர்ந்தேன். நேரம் செல்லச் செல்ல ஒருவித படபடப்பும், பதற்றமும் சேர்ந்து கொண்டது. வயிற்றில் எதுவுமே இல்லாதது போன்ற ஒருவித வெறுமையான உணர்வு.

தொடர்ந்து படப்பிடிப்பு, ஓய்வே இல்லை; அதனால் ஏற்பட்ட, 'ஸ்ட்ரெஸ்' ஆக இருக்கும் என்று நினைத்தேன். அந்த எண்ணத்தில் இருந்து விடுபட, வேலையில் கவனமாக இருந்தேன். என்னைச் சுற்றி எப்போதும் யாராவது உதவிக்கு வைத்துக் கொண்டேன். எவ்வளவு தான் கவனத்தைத் திருப்பினாலும், எனக்குள் இருந்த பதற்ற உணர்வை போக்க முடியவில்லை. என் சுவாசம் கூட சீராக இல்லை. என் கவனம் நிலையாக இல்லை. நான் உடைந்து போனேன்.

நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே போனது. மும்பையில் இருந்த என்னை பார்க்க, பெங்களூரில் இருந்து என் பெற்றோர் வந்தபோது, என்னுடைய பதற்றம், படபடப்பை வெளியில் காட்டாமல் இருக்க சிரமப்பட்டேன். ஆனாலும் ஒரு கட்டத்தில், என்னால் தாங்கவே முடியாமல் உடைந்து போய் அம்மாவிடம் அழுதேன்.

என் நிலையை சரியாகப் புரிந்து கொண்ட அம்மா, மனநல சிறப்பு மருத்துவரிடம் ஆலோசனைக்கு அழைத்துச் சென்றார். மருந்து, மாத்திரைகள், மனநல ஆலோசனை என்று, முறையாக எடுத்துக் கொண்ட பின், முழுமையாக இந்தப் பிரச்னையில் இருந்து வெளியில் வர முடிந்தது.

'உனக்கென்ன... நீ நம்பர் ஒன் ஹீரோயின். வசதியான வீடு, சொகுசு கார், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர வேலையாட்கள்... இன்னும் என்னதான் வேண்டும்? உனக்கு ஏன் மன அழுத்தம்?' என்று கேட்கின்றனர். மனப் பிரச்னைகள், நம்மிடம் என்ன இருக்கிறது அல்லது இல்லை என்பதை, பார்த்து வருவது இல்லை. நாம் எல்லாருமே, உடல் நலத்தைப் பற்றி தான் அதிகமாக பேசுகிறோம்; கவலைப்படுகிறோம். அதே அளவிற்கு மனநலமும் முக்கியம் என்பது நமக்குப் புரிவதில்லை.

குடும்பத்தில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்பட்டால், அந்த குடும்பம் மொத்தமும், அதை அவமானமாக, கவுரவக் குறைச்சலாக, வெளியில் யாருக்கும் தெரிந்துவிடுமோ என்ற பதற்றத்திலேயே விஷயத்தை மறைப்பதில் கவனமாக இருக்கின்றனர். இது எந்த வகையிலும் பிரச்னைக்கான தீர்வு கிடையாது. மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு தேவை அன்பும், ஆதரவும் தானே தவிர, மூடி மறைப்பது அல்ல. மன அழுத்தம், மனப் பதற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, என்னால் ஆனதை இப்போது செய்கிறேன்.

அனுஷ்கா ஷர்மா: தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், 'நான் இப்போது மனப்பதற்றத்திற்காக சிகிச்சை எடுக்கிறேன். இதை நான் வெளியில் சொல்வதற்கு காரணம், இது மிகச் சாதாரணமான மனப் பிரச்னை. மறைப்பதற்கு ஏதுவும் இல்லை. என்னுடைய குடும்பத்தில் இதுபோன்ற மனப் பிரச்னைகள் நிறைய பேருக்கு இருந்திருக்கிறது. வயிற்று வலி வந்தால் டாக்டரிடம் போக மாட்டோமா? அதைப் போன்ற சாதாரணமான விஷயம் தான் இதுவும்!' எனக் கூறியிருந்தார்.

மனம் தொடர்பான பிரச்னைகள் வருவதற்கு, பல காரணங்கள் இருக்கின்றன. பிரச்னை இருப்போரை புரிந்து, ஆதரவாக இருப்பது, முறையான சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம் என்பது தான், நாம் தெரிந்து கொள்ள வேண்டியது.

டாக்டர் லட்சுமி விஜயகுமார்

மனநல சிறப்பு மருத்துவர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us