PUBLISHED ON : மே 04, 2016

ஏப்ரல் 6, 2016
சில மாதங்களுக்கு முன், 'தினமலர்' நாளிதழில், நலம் பகுதியில் இதய வால்வுகள் சம்பந்தமாக கூறியிருந்தேன். அந்த கட்டுரையின் நகலை எடுத்துக் கொண்டு என்னை சந்திக்க வேண்டும் என்று, ராமு என்பவர், திருச்சியிலிருந்து, சில வாரங்களுக்கு முன் முயற்சித்து இருக்கிறார். ஆனால், நான் வெளியூரில் இருந்தால், நான் பணிபுரியும் மருத்துவமனையில் அவரை இரண்டு வாரங்கள் கழித்து வரச் சொல்லியிருக்கின்றனர்.
இரண்டு வாரங்கள் கழித்து, காலை, 8:00 மணிக்கெல்லாம் என்னை சந்திக்க வந்திருந்தார். ராமுவிற்கு மனைவி, கல்லூரியில் படிக்கும் இரண்டு பெண் குழந்தைகள்; விவசாயம் பார்க்கிறார்.
திடீரென்று, சில மாதங்களாக அதிகப்படியான மூச்சுத்திணறல் இருந்திருக்கிறது.
அதனால், இதய செயல்பாடு எவ்வாறு இருக்கிறது என்று, தெரிந்து கொள்ள நினைத்தார். அவரை சந்தித்த போது, 'சாகும் வரை விவசாயம் பார்க்கணும் சார்' என்றார். அந்த வார்த்தையில் நெகிழ்ந்து போனேன். அவருடைய இதய செயல்பாட்டை அறிந்து கொள்ள, 'எக்கோ' பரிசோதனை செய்யச் சொன்னேன்.
பரிசோதனை முடிவில் இதயத்திலுள்ள, 'மைட்ரல்' வால்வில் ரத்தக் கசிவு இருப்பது தெரிந்தது. ராமுவிற்கு, பிரச்னையை தெளிவாக விளக்கினேன். மைட்ரல் வால்வில் ஏற்பட்டிருக்கும் ரத்தக் கசிவை, இரண்டு வழிகளில் சரி செய்யலாம்.
ஒன்று மைட்ரல் வால்வில் பாதிப்படைந்த திசுக்களை சரிசெய்வது அல்லது மைட்ரல் வால்வுகளை முழுமையாக மாற்றுவது. முதல் வழியில் நோயாளிக்கு நிறைய பயன்கள் உண்டு. காரணம் திசுக்களை சீர் செய்வதால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது.
இதய செயல்பாடும் நன்றாக இருக்கும். ஆனால் செயற்கையாக மைட்ரல் வால்வை பொருத்தினால், 'ஆன்ட்டிகோயாகுலேஷன்' எனும் ரத்த உறைவு மாத்திரையை வாழ்நாள் முழுவதும் எடுத்துக் கொள்ள வேண்டும். ரத்தம் தன் நிலையிலிருந்து இன்னும் இலகுவான நிலையிலிருப்பதற்கு இம்மாத்திரை தேவைப்படுகிறது.
இதை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், ரத்தம் இறுகி வால்வுகளில் உறைந்து பக்கவாதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதே சமயம், 'ஆன்ட்டிகோயாகுலேஷன்' மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொண்டால், ரத்தம் நீர்த்துப் போய் உடலுக்குள்ளேயோ அல்லது வெளியிலோ ரத்தக் கசிவு ஏற்படலாம். இந்நிலை ஏற்பட்டால் நோயாளியின் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
நோயாளியின் பழுதடைந்த மைட்ரல் வால்வை சீர் செய்தால், இம்மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. எனவே ராமுவிற்கு, இதய நுண்துளை அறுவை சிகிச்சை முறையில், 6 செ.மீ., அளவில் சிறியதுளையிட்டு, மைட்ரல் வால்வை சீர் செய்தேன். சில வாரங்களில் உடல்நிலை தேறிவிட்டார்.
ஏப்., 5ம் தேதி அளவில்லா மகிழ்ச்சியில் இருந்தேன். காரணம், ராமுவின் மகள் என்னை தொலைபேசியில் அழைத்திருந்தார். 'சார், அப்பாவின் உடல் நன்றாக தேறிவிட்டது. அவர் இன்று டிராக்டர் ஒட்டிக் கொண்டு வயலுக்கு சென்றிருக்கிறார். இது உங்களால் தான் சாத்தியப்பட்டது' என்றார் நன்றிப் பெருக்கோடு.
எம்.எம்.யூசுப்
நுண்துளை இதய அறுவை சிகிச்சை நிபுணர்.
குளோபல் மருத்துவமனை.
சென்னை.
82206 69911
