PUBLISHED ON : ஜூலை 28, 2019

என் அத்தைக்கு 3 வருடங்களுக்கு முன் மார்பக புற்றுநோய் ஏற்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்துவிட்டோம். இப்போது நுரையீரல் புற்றுநோய் வந்துவிட்டது. இவ்வாறு குணமான பின்பும் திரும்ப வருமா?
அறுவை சிகிச்சை செய்து புற்றுநோயை சரி செய்தாலும் திரும்ப வருவதற்கு வாய்ப்புண்டு. நோயின் சிறு பகுதி கண்ணுக்கு தெரியாமல் தொற்றிக் கொள்ளும். நாளடைவில் அந்த பகுதிகளில் பரவி விடும். மேலும் புதிதாக வேறு ஒரு இடத்தில் புற்று நோய் வருவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே புற்றுநோய் வந்தால் அதை அலட்சியப்படுத்தாமல் உடனே சிகிச்சை மேற்கொள்வது நல்லது. மருத்துவரின் ஆலோசனைப்படி பரிசோதனை செய்து நோய் முற்றிவிடாமல் ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டும்.
நான் என் மாமாவை திருமணம் செய்து கொண்டேன். ஒரு பெண் குழந்தை உள்ளது. அடிக்கடி நெஞ்சில் சளிக் கட்டிக் கொள்கிறது. இருதயத்தில் ஒரு சிறு துவாரம் உள்ளது. இது எதனால்?
சொந்தத்தில் திருமணம் செய்தால் சிலருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறவியிலேயே தலை முதல் கால் வரை உள்ள ஏதாவது ஒரு உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் குழந்தைக்கு வந்துள்ளதும் இந்த காரணத்தினால் தான். நீங்கள் காலம் கடத்தாமல் உடனடியாக ஒரு நுரையீரல் மற்றும் இதய மருத்துவரை சந்தித்து உங்கள் குழந்தைக்கு சிகிச்சை பெறுங்கள். பொதுவாக நாம் எல்லோரும் சொந்தத்தில் திருமணம் செய்வதை தவிர்த்தால் இது போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.
'FENO' என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?
ஒருவருக்கு ஆஸ்துமா உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள உதவும் கருவி இது. அலர்ஜி காரணமாக ஆஸ்துமா இருந்தால் அளவை அதிகரித்து காண்பிக்கும். ஆஸ்துமாவிற்கு உண்டான மருந்தை சரியாக உட்கொண்டால் அடுத்த முறை பரிசோதனை செய்யும் போது அளவை குறைத்து காண்பிக்கும். எனவே இக்கருவியின் மூலம் ஒருவருக்கு ஆஸ்துமா உள்ளதா, சரியாக மருந்து உட்கொள்கிறாரா, ஆஸ்துமா குணமாகி வருகிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம். இது உலக அளவில் சமீபத்தில் பயன்பாட்டிற்கு வந்துள்ள நவீன கருவி.
என் மகனுக்கு 6 வயதாகிறது. தண்ணீர் என்று நினைத்து மண்ணெண்ணெய்யை குடித்து விட்டான். குடிக்கும்போது இருமிவிட்டான். மருத்துவரை ஆலோசித்த போது நிமோனியா பாதிப்பு இருப்பதாக கூறினார். வயிற்றில் தானே பிரச்னை ஏற்படும்? நுரையீரலில் எப்படி வரும்?
குடிக்கும் போது மண்ணெண்ணெய் வயிற்றுக்குள் தான் செல்லும். ஆனால் இருமினால் அதன் ஒரு பகுதி நுரையீரலுக்குள் சென்றுவிடும். மேலும் வயிற்றுக்குள் சென்ற மண்ணெண்ணெய் ஆவியாகி அந்த ஆவியும் நுரையீரலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் நுரையீரலில் பிரச்னையை உண்டுபண்ணும். எனவே உங்கள் மருத்துவர் கூறியது போல் உடனடியாக சிகிச்சை மேற்கொள்வது சிறந்தது.
- டாக்டர் மா.பழனியப்பன்
நுரையீரல் சிறப்பு நிபுணர், மதுரை
94425 24147
