PUBLISHED ON : டிச 11, 2011
)சில சமயங்களில், சிறிய பிரச்னைகள் தவறான முறையில் கண்டறியப்படுவதால், நோயாளிக்கும், அவர் குடும்பத்தினருக்கும், தேவையற்ற உபாதையை தோற்றுவிக்கும்.
குழந்தைகளின் வயிற்றில், கிருமிகள் தோன்றுவது சகஜம். இதற்கு, குழந்தைகளின் உணவுப் பழக்க வழக்கங்கள், ஒரு முக்கிய காரணம். ஐந்து வயது குழந்தை ரவி, கடந்த நான்கு மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதியுற்றான். ஒரு குழந்தை நல மருத்துவர், அவனுக்கு, 'அப்பெண்டிசைட்டிஸ்' நோய் என்று கூறினார். இரண்டு மாதங்களுக்கு, அந்நோய்க்கான சிகிச்சை, ஒரு நவீன மருத்துவமனையில் அளிக்கப்பட்டது. எந்தவித முன்னேற்றமும் இருக்கவில்லை.
மற்றொரு பிரபலமான குழந்தை நல மருத்துவமனையில், மேலும் இரண்டு மாதங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மறு
படியும், 'ஸ்கேன்' மற்றும் பேரியம் சோதனைகள் மூலம்
'அப்பெண்டிசைட்டிஸ்' தான் என்று முடிவு செய்தனர். அம்மருத்துவர்கள், லேப்ராஸ்கோபி சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர். வயிற்றைத் திறந்து பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறினர்.
மறு அபிப்ராயத்துக்காக இன்னொரு மருத்துவமனையை நாடினர். மருத்துவ அறிக்கைகளை எல்லாம் பார்த்தபின், அம்மருத்துவர்கள், 'அப்பெண்டிக்ஸ்... உடனே அகற்றப்பட வேண்டும். காலதாமதம் நல்லதல்ல' என்றும் எச்சரித்தனர். இக்காலக்கட்டத்தில் அச்சிறுவனுக்கு குடற்புண், மலச்சிக்கல் போன்ற இதர நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருந்துகள் எதற்கும் பலன் ஏற்படாததால், சில மருத்துவர்கள் மனவியல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுமாறும் அறிவுறுத்தினர்.
சிறுவனின் வயிற்று வலியில், எந்த மாற்றமும் இல்லாததால், லேப்ராஸ்கோபி சிகிச்சைக்கு, தாய் ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், தாயாருடைய நண்பி, ஆயுர்வேதத்தை நாடுவது பற்றி அறிவுறுத்தினார்.
சஞ்சீவனிக்கு வந்த போது, அவனுக்கு ஒருநாளில் பலமுறை தீவிரமான வயிற்றுவலி இருந்தது. கிருமி அகற்றும் மருந்துகளும், எடுத்துக் கொண்டிருந்தான். ஆனால், அதே சமயத்தில் சாக்லேட், பழச்சாறுகள், மில்க்ஷேக் போன்றவை, அவன் பழக்கத்தில் இருந்தன. அவனுடைய உணவுப் பழக்கங்கள், கிருமிகள் புழங்குவதற்கு ஏற்றதாக இருந்தன. அக்குழந்தை கிருமியினால் அவதிப்படுவதை கண்டறிந்தோம். உணவுக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கீரை வகைகள், மில்க்ஷேக், சாலட், குளிர்பானங்கள், இனிப்பு பண்டங்கள் பகலுறக்கம் ஆகியவை தடை செய்யப்பட்டன.
ஆயுர்வேத மருந்துகள் கொடுக்கப்பட்டன. இம்மருந்துகள், கிருமிகளை அகற்றுவதுடன், ஜீரண சக்தியை மேம்படுத்தும் குணங்கள் உடையவை. இரண்டே வாரங்களில், அவன் பிரச்னை தீர்ந்தது. சமைக்காத உணவு, வெல்லம், மாவு, முரண்பாடான உணவு (பாலுடன் பழவகைகளைச் சேர்ப்பது), பால், தயிர், இனிப்பு, புளிப்பு நிறைந்த உணவு, பழரசம், குளிர்பானம் போன்ற திரவமான உணவு, பகலுறக்கம், உடற்பயிற்சி இன்மை போன்றவை, வயிற்றில் கிருமிகள் உருவாக காரணம் ஆகின்றன.
கிருமிகள் வயிற்றில் உருவானால், சில முக்கிய அறிகுறிகள் தென்படும். ஜுரம், தோலில் நிறமாற்றம், பசியின்மை, வயிற்று வலி, இதயப் பகுதியில் நோய், பேதி இவை தோன்றும். உணவுப் பழக்கங்களை மாற்றாமல், வெறும் வயிற்றுப் புழுக்களை அகற்றும் மருந்துகளை மட்டும் உட்கொண்டால், அது பயனளிக்காது.
- டாக்டர் பி.எல்.டி.கிரிஜா, சஞ்சீவனி ஆயுர்வேத யோகா மையம்.
