PUBLISHED ON : டிச 25, 2011

எனது நண்பரின் 10 வயது மகனுக்கு இருதயம் பிறவியில் இருந்தே நெஞ்சின் வலதுபுறம் உள்ளது. இதனால் பாதிப்பு வருமா?
எஸ். அபராஜிதன், கோவை
இருதயம் பொதுவாக அனைவருக்கும் இடதுபுறம்தான் இருக்கும். ஆனால் மிகச்சிலருக்கு வலதுபுறம் இருக்க வாய்ப்புள்ளது. உடலின் வலது புற பாகங்கள் இடதுபுறத்திலும், இருதயம் உட்பட இடதுபுற பாகங்கள் வலது புறத்திலும் இருந்தால் அதை, 'Mirror Image Dextro Cardia' என்பர். இப்படி இருந்தால் இருதயத்தில் எந்தக் கோளாறும் இருக்காது.ஆனால் மற்ற உறுப்புகள் நார்மலாக இருந்து, இருதயம் மட்டும் வலதுபுறம் இருந்தால், இருதயத்தில் பல்வேறு நோய்கள் - ஓட்டைகள், இருதய அறைகள் மாறி இருப்பது, முக்கிய ரத்தநாளங்கள் மாற்றி இருப்பது, வால்வுகளில் கோளாறுகள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் உங்கள் இருதய நிபுணரை சந்தித்து, எக்கோ பரிசோதனை செய்து, இருதயம் எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை பெற வேண்டும்.
எனக்கு இருதயத்தில் பிரச்னை இல்லை. திடீர் நெஞ்சுவலி வந்தால், இருதய நோயாளிகள் எடுக்கும், 'சார்பிட்டரேட்' மாத்திரையை எடுக்கலாமா?
பி.சங்கரபாண்டியன், மதுரை
இது மிகத் தவறான கருத்து. சார்பிட்டரேட் மாத்திரையை டாக்டரின் ஆலோசனை இன்றி எடுப்பது மிகமிகத் தவறு. அந்த மாத்திரை, இருதய ரத்தநாளங்களில் அடைப்பு உள்ளவர்கள், நடக்கும்போது நெஞ்சில் வலி வந்தால், நாக்கின் அடியில் வைப்பதற்கு பயன்படுத்துவதாகும். இதை யார் வேண்டுமானாலும் எடுக்க முடியாது. ஏனெனில் இந்த மாத்திரையை யார் எடுத்தாலும் ரத்தஅழுத்தம் குறைந்து பாதிப்பு ஏற்பட்டுவிடும். அதுதவிர சில வகையான மாரடைப்புகளில் இந்த மாத்திரையால் பாதிப்புதான் ஏற்படும்.
எனக்கு ஈஸ்னோபீலியா உள்ளது. இருமும்போது நெஞ்சவலியும் உள்ளது. இது இருதய வலியாக இருக்குமா?
ஆர்.ரேவதி, திண்டுக்கல்
பொதுவாக இருமும்போது ஏற்படும் நெஞ்சுவலி இருதய வலியாக இருக்க வாய்ப்பு இல்லை. இருதயத்தால் ஏற்படும் நெஞ்சுவலி, நடந்தால் ஏற்படும். ஓய்வெடுத்தால் போய்விடும். இது சில நொடிகள்தான் நீடிக்கும். நடுநெஞ்சில் பாரமாக அழுத்துவது போல இருக்கும். அத்துடன் வியர்வையும், மூச்சுவிட சிரமமும் இருக்கும். எனவே இருமும்போது ஏற்படும் வலி, நெஞ்சுவலியாக இருக்க வாய்ப்புகள் இல்லை.
எனது முப்பத்து இரண்டு வயது நண்பர் திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டார். இது எப்படி சாத்தியம்?
கே. குருசாமி, ராமநாதபுரம்
உலகில் நம் இந்தியர்களுக்குத்தான் அதிக மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பொதுவாக இந்தியருடைய 'ஜீன்'கள் மிகவும் மோசமானவை. எனவே இந்தியராக பிறந்துவிட்டாலே, மாரடைப்பு வரும் தன்மை அதிகம் உள்ளது என கருதப்படுகிறது. நம்முடைய தவறான வாழ்க்கை முறை, அதிக புகை பழக்கம், அதிக மனஅழுத்தம், உணவில் அதிக எண்ணெயை பயன்படுத்துதல், உடற்பயிற்சி இன்மை, உடல் பருமன், மிகஅதிகமாக சர்க்கரை, ரத்தஅழுத்தம் காணப்படுவது போன்ற காரணங்களால், 20களிலேயே மாரடைப்பு ஏற்படுவது கொடூரமான உண்மை. இதைத் தவிர்க்க சரியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, தொடர் மருத்துவ ஆலோசனை பெறுதல் மிகவும் முக்கியமானது.
-டாக்டர் சி.விவேக்போஸ்
மதுரை.
