கனவு தவிர்... நிஜமாய் நில்! - கண்ணான கண்ணே... கண்ணான கண்ணே...!
கனவு தவிர்... நிஜமாய் நில்! - கண்ணான கண்ணே... கண்ணான கண்ணே...!
PUBLISHED ON : மே 12, 2019

பச்சிளங் குழந்தைக்கும், தாய்க்கும் இருக்கும் பிணைப்பு குறித்து, நான் செய்த ஆய்வுக் கட்டுரை ஒன்றை, ஐரோப்பாவில் நடந்த மருத்துவக் கருத்தரங்கில் வெளியிட்டேன்.
பச்சிளங் குழந்தையோடு, தாய் செலவிடும் நேரத்தைப் பொறுத்தே, குழந்தையின் உடல், மன ஆரோக்கியம் இருக்கிறது என்பது தெளிவாகி உள்ளது.
குறைப் பிரசவத்தில் பிறந்த அல்லது உடல் நிலை சரியில்லாத பச்சிளங் குழந்தையை, அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை தரும் போது, அம்மா உட்பட யார் உள்ளே வந்தாலும், குழந்தைக்கு தொற்று ஏற்பட்டு விடும் என, பல கட்டுப்பாடுகளை வைத்திருந்தோம்.
காலையில், அரை மணி நேரம்; மாலையில், அரை மணி நேரம் வந்தால் போதும் என்று சொல்லுவோம். இந்த நேரத்திலும், குழந்தையைச் சுற்றிலும் இருக்கும் ஒயர், குழாய், மானிட்டர், ஆக்சிஜன் மாஸ்க், சிகிச்சை பெறும் பிற குழந்தைகள் என்று இருக்கும் சூழ்நிலையைப் பார்த்து பயந்து, உள்ளே வரவே தயங்குவர்.
தற்போது, நான் செய்த ஆய்வின் முடிவில், உடல் நிலை மோசமாகி சிகிச்சை பெறும் குழந்தை, வெண்டிலேட்டரில் இருக்கும் குழந்தை, உயிர் காக்கும் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள குழந்தை, குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை என்று எதுவாக இருந்தாலும், தினமும் குறைந்தது, நான்கு - ஆறு மணி நேரம், தாய் அருகில் இருந்து, தடவிக் கொடுத்து, குழந்தையுடன் பேசுவது என்று இருந்தால், குழந்தையின் உடல் நிலையில், விரைவான முன்னேற்றம் தெரிகிறது; உள் உறுப்புகளின் செயல்பாடு, சீராக இருக்கிறது; தொற்று ஏற்படுவது குறைகிறது.
தாய், எட்டு மணி நேரம், இப்படி குழந்தையின் அருகிலேயே இருப்பது, குழந்தை வெகு விரைவில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, வெளியில் வர முடிகிறது. என் ஆய்வில், இரண்டு, நான்கு, ஆறு, எட்டு மணி நேரம் என, ஒவ்வொரு குழந்தையின் அருகில், குறிப்பிட்ட நேரம், தாயை இருக்கச் செய்தேன்.
எட்டு மணி நேரம், குழந்தையின் அருகில் தாய் இருந்தால், எதிர்பார்த்ததை விட, விரைவாக குழந்தையிடம் முன்னேற்றம் தெரிகிறது.
குழந்தை உடன் எல்லா நேரமும் தாய் இருப்பது, குழந்தையின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது.
பிறந்த சில தினங்கள் அல்லது வாரங்கள் ஆன, 'இது தன் அம்மா' என்று புரியாத நிலையிலும், கண்களைத் திறந்து நேருக்கு நேராக பார்க்காத நிலையிலும், தாயின் அரவணைப்பு இருந்தால், மருத்துவ சிகிச்சை வியப்பான பலனைத் தருகிறது. குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையும் கூட, இதற்கு விதிவிலக்கல்ல.
தற்போது, வெளிநாடுகளில் கட்டப்படும் நவீன மருத்துவனைகளில், குழந்தையின் அருகிலேயே, எல்லா நேரமும் அம்மாவும் இருக்கத் தேவையான வசதிகளுடன் கட்டுகின்றனர்.
சிகிச்சையில், இது மிகவும் முக்கிய அம்சம் என்று தெரிய வந்துள்ளது. தாய்ப்பால் கொடுத்தால், குழந்தையின் எதிர்ப்புத் திறன் அதிகமாகும் என்பதையும் தாண்டி, அம்மாவின் அரவணைப்பு, மனதளவில் மாற்றத்தை தருகிறது.
தாயின் இதே மாதிரியான அரவணைப்பை, நர்ஸ் அல்லது டாக்டர் கொடுத்தாலும், இந்த அளவிற்கு முன்னேற்றம் தெரிவதில்லை.
அம்மா அருகிலேயே இருந்தால், அவசர பிரிவில் இருக்கும் நாட்களும் வெகுவாகக் குறைகிறது; தொற்று ஏற்படுவதில்லை; குழந்தையின் ரத்த எதிர்ப்பணுக்களின் திறன், செயல்பாடு அதிகரிக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது. தைரியமாகவும், சந்தோஷமாகவும் தாய் இருப்பது முக்கியம்.
டாக்டர் தீபா ஹரிஹரன்,
பச்சிளங் குழந்தைகள் சிறப்பு மருத்துவர், சென்னை.
98410 71435