PUBLISHED ON : மே 19, 2019

ஐம்பது வயதான எனக்கு டென்னிஸ் விளையாடும் போது தோள்பட்டை வலிக்கிறது. மூன்று மாதங்களாக வலி நீடிக்கிறது. பலமுறை மருத்துவரை சந்தித்து சிகிச்சை மேற்கொண்டதில் 60 சதவீதம் வலி குறைந்துள்ளது. ஆனால் டென்னிஸ் விளையாடவோ, வேலை செய்யவோ முடியவில்லை. ஆர்த்ரோஸ்கோபி சிகிச்சை எடுத்துக் கொண்டால் முழுமையாக குணப்படுத்த முடியுமா?
உங்கள் வலிக்குண்டான காரணத்தை முதலில் அறிய வேண்டும். விளையாட்டு பிரியர்களுக்கு அதிகமாக ஏற்படும் பிரச்னை தோள்மூட்டின் குருத்தெலும்பு அல்லது தசைநாரில் கிழியல் ஏற்படுவது. முதலில் நீங்கள் தோள்மூட்டு மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க வேண்டும். சிறு கிழியல் இருப்பின் அதை ஆர்த்ரோஸ்கோபி மூலம் சீரமைத்தால், மீண்டும் டென்னிஸ் விளையாட முடியும்.
என் வயது 53. வலது முழங்கால் வலி மற்றும் முழங்காலுக்கு பின் ஒரு கட்டியும் இருக்கிறது. பல மாதங்களாக சிகிச்சை எடுத்தும் வலி குறையவில்லை. கட்டியின் அளவும் குறையவில்லை. எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்ததில் 'POPLITEAL CYST' எனும் ஒரு நீர்கட்டி இருப்பது தெரிய வந்தது. இதற்கு சிகிச்சை உண்டா?
'POPLITEAL CYST' எனும் நீர்க்கட்டி மூட்டில் உள்ள ஜவ்வு பழுதடைந்தால் அதிலிருந்து உருவாகலாம். பலமுறை மூட்டில் 'மெனிஸ்கஸ்' கிழிந்து இருக்கும் வாய்ப்பு உள்ளது. முன்பு 'POPLITEAL CYST' திறந்தவெளி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இப்போது நவீன தொழில்நுட்பத்தில் நுண்துளை சிகிச்சை வாயிலாக சீரமைக்க முடியும். வலியும் குணமாகும்.
மூட்டுவாத நோய் உள்ள எனக்கு இரண்டு முழங்கால் மூட்டு, முழங்கை மூட்டு மற்றும் மணிக்கட்டு மூட்டு ஆகிய இடங்களில் தீராத வலி உள்ளது. பதினைந்து வருடங்களாக வலி நீடிப்பதால், மருந்துகள் வழி சிகிச்சை பலனில்லை. இப்போது மூட்டுமாற்று சிகிச்சைக்கு சம்மதித்து உள்ளேன். இதனால் அனைத்து மூட்டு வலியும் குணமாகுமா?
மூட்டுவாத நோய் பல மூட்டுகளை தாக்கலாம். ஆயினும் மூட்டு மாற்று சிகிச்சை என்பது செய்யப்படும் மூட்டிற்கு மட்டுமே ஒரு நீண்டகால தீர்வை அளிக்கும். ஒரு மூட்டிற்கு மூட்டு மாற்று சிகிச்சை செய்தால் வேறு மூட்டினில் வலி குறையும் என்பது தவறான தகவல். மற்ற மூட்டுகளில் உள்ள நோயின் தீவிரத்தை பொறுத்து அதற்கு மருந்து வழி சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.
-கே..என்.சுப்ரமணியன்
எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்,
93442 46436