கனவு தவிர்... நிஜமாய் நில்!: பேச பேச பேச்சு வரும்!
கனவு தவிர்... நிஜமாய் நில்!: பேச பேச பேச்சு வரும்!
PUBLISHED ON : ஜன 14, 2018

சில வாரங்களுக்கு முன், தன் இரட்டை பெண் குழந்தைகளை அழைத்து வந்தார், திருமணமாகி, வெளிநாட்டில் செட்டிலான பெண், விடுமுறைக்காக சென்னை வந்திருந்தார்.
பார்ப்பதற்கு ஆரோக்கியமாக, அழகாக இருந்தனர் குழந்தைகள். 3 வயது ஆன பின்னும், பேச்சு வரவில்லை என்பது தான் பிரச்னை; பரிசோதித்ததில், எந்த கோளாறும் இல்லை. அவர்களின் வாழ்க்கை முறையை கேட்ட போது, பிரச்னை புரிந்தது.
கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால், குழந்தையை, 'கேர் டேக்கர்' தான் பார்த்துக் கொள்கிறார்; கடிகாரத்தைப் பார்த்து, நேரம் தவறாமல் உணவு கொடுப்பார். குழந்தைகள், நாள் முழுவதும் மின்சாதனப் பொருட்களோடு விளையாடும்.
எனக்குத் தெரிந்த பெண் ஒருவர், 2 வயது குழந்தையை அழைத்து வந்த போது, பெருமையாக என்னிடம், 'மேடம்... என் குழந்தை லேப் - டாப், மொபைல்ன்னு எல்லாத்தையும் சூப்பரா ஹேண்டில் பண்ணுவா... லேப் - டாப்பை பார்த்தவுடன், பாஸ்வேர்ட் என்னன்னு கேட்பா' என்றார்.
இது மகிழ்ச்சியான விஷயம் இல்லை என, குழந்தைகளின் பெற்றோருக்கு, குறிப்பாக, அம்மாக்களுக்கு புரிய வேண்டும்.
கூட்டுக்குடும்பங்கள் என்பதே பெரும்பாலும் இல்லாமல் போய் விட்டது. தாத்தா, பாட்டி இருக்கும் ஒரு சில குடும்பங்களிலும், பெரியவர்களின் ஆர்வம், சீரியல் பார்ப்பது என, திரும்பி விட்டது.
குழந்தைகளுடன் அமர்ந்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி, அவர்களுடன் பேசுவது என்பது இல்லை. மொபைல் போன், லேப் - டாப் உடன் குழந்தைகள் வளர்ந்தால், பேச்சு மொழி அவர்களுக்கு எப்படி வரும்?
5 வயது வரை, குழந்தைகளின் மூளை முழுமையாக வளர்ந்திருக்காது. இந்த வயதில் எவ்வளவு தகவல்கள் மூளைக்குள் செல்கிறதோ, அதே அளவு வெளியில் வர வேண்டும்.
ஆனால், மின் சாதனப் பொருட்களையே பார்த்துக் கொண்டிருந்தால், ஒரு பக்கம் மட்டுமே தகவல்கள் செல்லும்; குழந்தையிடம் இருந்து எதுவும் வெளியில் வராது.
வெளிநாட்டில் வாழும் அம்மாவிடம் சொன்னது தான், எல்லா அம்மாக்களுக்கும் சொல்வேன்: தினமும் சில மணி நேரங்கள், குழந்தைகளிடம் பேசுங்கள்; அவர்கள் பேசுவதையும் கேளுங்கள். கதை சொல்லுங்கள். வீட்டில் என்னென்ன பொருட்கள் உள்ளதோ, அவற்றைக் காட்டி, பெயர்களை கற்றுக் கொடுங்கள்.
எளிமையான இந்த இரண்டு வழிகளையும் செய்த சில நாட்களிலேயே, நல்ல மாற்றம் தெரிவதாக, வெளிநாட்டில் வாழும் அம்மா சொன்னார்.
டாக்டர் ஜே. குமுதா
குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், சென்னை.
dr_kumutha@yahoo.com

