கனவு தவிர்... நிஜமாய் நில்! - அதிக கால்ஷியம் ஆபத்து!
கனவு தவிர்... நிஜமாய் நில்! - அதிக கால்ஷியம் ஆபத்து!
PUBLISHED ON : ஆக 19, 2018

கடந்த, 10 ஆண்டுகளில், பெண்களுக்கு, 30 வயதிலேயே கால்ஷியம் குறைபாடு வர ஆரம்பித்து விட்டது.
பிரசவத்தின் போது, அதிக ரத்தப்போக்கால், கர்ப்பப்பை, கருக்குழாய் எடுக்க வேண்டிய நிலை. 'மெனோபாஸ்' உட்பட பல்வேறு காரணங்களால், மாதவிடாய் நின்று விடும். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பது குறைந்து, கால்ஷியம் சத்து போதுமான அளவு இல்லாமல் போகலாம்; இதனால், எலும்பு தேய்மானம் வர ஆரம்பிக்கும்.
மாதவிடாய் சுழற்சி சீராக உள்ளது; ஆனால் எலும்புகளில் பலவீனம் இருக்கிறது எனில், மாத்திரைகள் கொடுத்தால் போதும். மாதவிடாய் நின்று விட்டபின், ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையோ ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும்.
உடம்பில் குறிப்பிட்ட சில இடங்களில், எலும்பின் வலிமையைப் பார்த்து, எந்த அளவு பலவீனமாக இருக்கிறது என்பதை தெரிந்து, அதற்கு ஏற்ப மாத்திரையோ, ஊசியோ போடலாம்.
கால்ஷியம் குறைபாடு உள்ளது என்று தெரிந்தவுடன், நிறைய பேர் அதற்கான மாத்திரைகளை அவர்களாகவே சாப்பிடுகின்றனர். இரண்டு மாதத்திற்கு சாப்பிட டாக்டர் சொன்னால், அதன்பின், டாக்டரை பார்க்காமல், இரண்டு ஆண்டுகளுக்கு சாப்பிடுபவர்களும் உண்டு; இது பெரிய தவறு.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. அதிகப்படியான கால்ஷியம், வேறு பல உடல் பிரச்னைகளுக்கு வழி செய்யும்.
சமீபத்தில், ஐரோப்பாவில் செய்த ஆய்வில், 'கால்ஷியம் மாத்திரை, மாரடைப்பை ஏற்படுத்தலாம்' என கூறுகிறது.
இந்த மாத்திரைகளை, அதிகபட்சம் ஆறு மாதங்களுக்கு மேல் சாப்பிட வேண்டாம். வைட்டமின் டி குறைபாடு இருந்தால், கால்ஷியம் உடம்பில் போதுமான அளவு சேராது. தினமும், அரைமணி நேரம் உடற்பயிற்சி, இரண்டு டம்ளர் பால், சூரியஒளியில் அரை மணி நேரம் இருப்பது போன்றவை, கால்ஷியம், வைட்டமின் டி குறைபாடு வருவதை தடுக்கும்.
டாக்டர் கே.முகுந்த்
எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை.
mukunth23@yahoo.co.om

