கனவு தவிர்... நிஜமாய் நில்! - கருப்பையும் சதைக் கட்டிகளும்!
கனவு தவிர்... நிஜமாய் நில்! - கருப்பையும் சதைக் கட்டிகளும்!
PUBLISHED ON : நவ 03, 2019

கருப்பையில் ஏற்படும், 'பைப்ராய்டு' எனப்படும் சதைக் கட்டி குறித்து, பொதுவான சந்தேகங்கள் உள்ளன. இந்தக் கட்டி, மரபியல் காரணங்கள், வாழ்க்கை முறை மாற்றங்களால் வரலாம்.
இது தவிர, 'ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்' அதிக அளவில் சுரந்து, கருப்பையில் உள்ள செல்களில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், செல்கள் வளர ஆரம்பிக்கும்.
இதுவும், சதைக் கட்டி வருவதற்கான காரணம். இது போன்ற கட்டிகள், கேன்சராக மாறுவதற்கான சாத்தியங்கள், 1 சதவீதம் மட்டுமே.
அறுவை சிகிச்சை
கருப்பை வாயில், கருப்பையின் உள்ளே, வெளி, மேல், கீழ், உள் அடுக்கில் என, எந்த இடத்தில் வேண்டுமானாலும், சதைக் கட்டி வளரலாம். முதலில், அரிசி அளவில் இருக்கும் கட்டி, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் தாக்கத்தால் பெரிதாக வளரும். அறிகுறிகள், பாதிக்கப்பட்டவரின் வயது இரண்டையும் கவனத்தில் வைத்தே, சிகிச்சை தர முடியும். சிலருக்கு, கட்டியின் அளவு பெரிதாக இருக்கும்; ஆனால், அறிகுறிகள் தெரியாது.
அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்கள், குழந்தை பெற விரும்பினால், மருந்து கொடுத்து கட்டியை சுருங்கச் செய்யவோ, அறுவை சிகிச்சை செய்து எடுக்கவோ, அவரவரின் உடல் தன்மை, கட்டி இருக்கும் இடத்தைப் பொருத்து, முடிவு செய்ய வேண்டியிருக்கும்.
கருப்பையின் வாயில் வரும் சதைக் கட்டியை விடவும், கருப்பையின் உள்ளே, மேல், உள் அடுக்கில் சதைக் கட்டி இருந்தால், மாதவிடாய் சமயத்தில், ரத்தப் போக்கு அதிகம் இருப்பதுடன், வலியும் இருக்கும்.
'அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்' பரிசோதனை செய்திருந்தால், அதற்கடுத்த நிலையான, எம்.ஆர்.ஐ., எடுக்க வேண்டியது அவசியம். இதில், கட்டியின் அளவு, கட்டி உயிர்ப்புடன் இருக்கிறதா போன்ற விபரங்களை தெளிவாகப் பார்க்க முடியும்.
சதைக்கட்டியில், ரத்த ஓட்டம் சீராக இருந்தால், கட்டி உயிர்ப்புடன் இருக்கிறது என்று பொருள். உயிர்ப்புடன் இருக்கும் சதைக் கட்டிகளுக்கு மருந்து கொடுத்தால், சுருங்கத் துவங்கும். ரத்த ஓட்டம் இல்லாமல், செயலிழந்த கட்டியாக இருந்தால், மருந்து கொடுத்தாலும், எந்த பலனும் இருக்காது.
கட்டியின் அளவு, 3 செ.மீ.,க்கு மேல் இருந்தால், வலி, ரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் தெரியும். கருப்பையின் வாயில் இருக்கும் சதைக் கட்டியை, அறுவை சிகிச்சை செய்து எடுத்தால் தான், ரத்தப் போக்கு நிற்கும். அறுவை சிகிச்சை செய்ய விரும்பாதவர்களுக்கு, 'ஹிஸ்டரோஸ்கோபிக்' அறுவை சிகிச்சை செய்து, கருப்பையின் வாயில் உள்ள சதைக் கட்டியை மட்டும் நீக்கி விடலாம். 3 செ.மீ.,க்கு மேல் இருந்தால் மட்டுமே இதை செய்ய முடியும்.
'மெனோபாஸ்' எனப்படும் மாதவிடாய் முடிந்த பின், இயல்பாகவே ரத்த ஓட்டம் குறைந்து, சதைக் கட்டி உயிரிழக்கலாம்.
மருந்துகள் கொடுத்து, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன், சதைக் கட்டியின் மேல் ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைத்து, செயலிழக்கச் செய்யலாம்.
ஆயுர்வேத மருந்துகள் உட்பட, மாற்று மருத்துவ முறைகள் எதுவும், கட்டியை சுருங்கச் செய்யவோ, அறிகுறிகளை குறைக்கவோ பலன் தராது. இதில் கவனிக்க வேண்டியது, கருப்பையின் உள்ளே குழந்தை உருவாகி வளரும் பகுதி, கர்ப்பப்பையின் வாய் பகுதியில் வரும் சதைக் கட்டிகள், 'மெனோபாஸ்' நின்ற பிறகும், உயிர்ப்புடனேயே இருப்பது தான்.
மரபியல் காரணம்
இதனால், மாதவிடாய் முடிந்த பின்னும், ரத்தப் போக்கு இருக்கும். இந்த நிலையில், சதைக் கட்டியை மட்டுமாவது அகற்ற வேண்டும். அதிகபட்சமாக, 30 செ.மீ., அளவுள்ள சதைக் கட்டியை அகற்றி உள்ளோம்.
இது போன்று, அளவில் பெரிய சதைக் கட்டியாக இருந்தால், முதுகெலும்பில் அழுத்தம் ஏற்பட்டு, முதுகு வலி வரலாம். சிறுநீர் குழாயில் அழுத்தி, சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கும்.
பரிசோதனைக்கு மட்டுமே பயன்பட்ட, எம்.ஆர்.ஐ., ஸ்கேன், தற்போது, நவீன முறை சிகிச்சைக்கும் பயன்படுகிறது. அறுவை சிகிச்சை வேண்டாம் எனில், இதன் மூலம் கட்டியை உயிர்ப்பில்லாமல் செய்து விடலாம்.
சராசரியாக, 45 - 55 வயதில், மாதவிடாய் நிற்கும். ஆனால், உடல்வாகு, மரபியல் காரணங்களால், ஒவ்வொரு பெண்ணிற்கும் இது மாறுபடும். 'இந்த வயதில் மாதவிடாய் நிற்கும்' என்று உறுதியாக சொல்ல முடியாது.
டாக்டர் ரம்யா ஜெயராம்
மகளிர் மையம், மதர்ஹூட்,
கோவை. 94437 93931