* நான் தோட்ட வேலை செய்கிறேன். பூச்சி மருந்து அடிக்கும்போது எனக்கு இளைப்பு வருகிறது. மாஸ்க் போட்டால் இளைப்புக்கு தீர்வு கிடைக்குமா?
பூச்சிக்கொல்லி மருந்து மூச்சு விடும்போது நுரையீரலை பாதிக்கும் தன்மை கொண்டது. அதன் வாசம் கூட நுரையீரலுக்கு ஊறு விளைவிக்கும். மாஸ்க் பயன்படுத்துவதால் இதற்கு தீர்வு ஏற்படாது. புல் அறுக்கும் போதும், பூக்களில் உள்ள மகரந்தத் துாளினாலும், மருந்து அடிப்பதாலும் நுரையீரல் பாதிக்கக்கூடும். எனவே மருத்துவரை பார்த்து அவரின் ஆலோசனைப்படி இன்ஹேலரை பயன் படுத்துவது நலம்.
* என் மகன் சமீபத்தில் அமெரிக்கா சென்றான். அவன் சென்ற விமானத்தில் டி.பி., நோயாளி இருந்தார். இதைக் கண்டறிந்து அமெரிக்காவில் என் மகனுக்கு டி.பி., நோய் கருமி தொற்று இருக்கிறதா என பரிசோதித்தனர். இது அவசியமா?
விமானத்தில் டி.பி., நோயாளி இருந்தால், அவர் மூலம் பலருக்கும் தொற்று பரவ வாய்ப்புள்ளது. ஆகவே தான் அமெரிக்காவில் உங்கள் மகனுக்கு டி.பி., பரிசோதனை செய்துள்ளனர். இவ்வாறு பரிசோதனை செய்வது நல்லது தான். இதே போல் வீட்டிலும் யாராவது ஒருவருக்கு டி.பி., நோய் தொற்று இருந்தால், மற்றவர்களும் பரிசோதனை செய்வது நல்லது.
* என் கணவருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கிறது. இப்பழக்கத்தை விடும்படி நீண்ட காலமாக சொல்லி வருகிறேன். இதை படிப்படியாக விடுவது நலமா, உடனடியாக விடுவது நல்லதா?
புகைப்பழக்கம் மிகக்கொடியது. இது எண்ணற்ற நச்சுப் பொருட்களை கொண்டுள்ளது. இதை படிப்படியாக விட்டுவிடுவதை விட குறுகிய காலக்கெடு வைத்து நிறுத்துவது நல்லது. இதனால் மலச்சிக்கல், பொறுமையின்மை போன்ற சில பிரச்னைகள் வரலாம். உடனடியாக இப்பழக்கத்தை விட வேண்டும்.
-டாக்டர் எம்.பழனியப்பன்
நுரையீரல் நிபுணர், மதுரை
94425 24147