PUBLISHED ON : நவ 02, 2019

வயிற்றுப் புண் என்பது என்ன?
வயிற்றுப் புண் எனப்படும், 'பெப்டிக் அல்சர்' என்பது, ஜீரண அமிலம் சுரக்கும் இடத்தில் வரும் புண். பொதுவாக, வயிற்றில், உணவு குழாயின் கீழ் பகுதி, 'டியோடினம்' என்ற சிறுகுடலின் மேல் பகுதி என, வயிற்றில் அமிலம் சுரக்கும் எந்த இடத்தில் வேண்டுமானாலும், பெப்டிக் அல்சர் வரலாம்.
பெப்டிக் அல்சர் வருவதற்கான காரணங்கள் என்ன?
'ஹெலிகோ பாக்ட்ரோ பைலோரை' என்ற பாக்டீரியாதொற்றினால், வயிற்றுப் புண் வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன், என்ன மருந்து கொடுத்தாலும், வயிற்றுப் புண்ணை சரி செய்ய முடியாது; திரும்பவும் வரும்.பாக்டீரியா தொற்று தான் காரணம் என, உறுதியான பின், ஆன்டிபயாடிக் மருந்து கொடுத்து, பாக்டீரியா தொற்றை முழுவதுமாக அழிப்பதன் மூலம், வயிற்றுப் புண்ணை முற்றிலும் குணப்படுத்த முடிகிறது.
அழுக்கு, குப்பை, கூளங்கள் நிறைந்த மாசுபட்ட சுற்றுப்புறம், காற்று, சுகாதாரமற்ற உணவு, அசுத்தமான நீர், இவற்றை பயன்படுத்துவது அல்லது அந்த சூழலில் வாழும் போது, தொற்று, நம் உடலுக்குள் செல்கிறது. கைகளை சரியாக சுத்தம் செய்யாமல், உணவு சாப்பிட்டாலும், நோய் கிருமி தொற்றும் அபாயம் உள்ளது.இந்த பாக்டீரியா, வயிற்றில் பெப்டிக் அல்சரை மட்டுமல்ல, சிலருக்கு கேன்சரையும் ஏற்படுத்தலாம்.
அடுத்து, வலி நிவாரணிகளாலும், அல்சர் வரலாம். இவற்றை அதிக நாட்கள் சாப்பிட வேண்டியதில்லை. சிலருக்கு ஒரே ஒரு வலி நிவாரணி கூட, பெப்டிக் அல்சரை உண்டாக்கலாம். இது தவிர, மது பழக்கம், புகைபிடித்தல் இரண்டும், வயிற்றில் புண்ணை ஏற்படுத்தும்.
வயிற்றுப் புண் அறிகுறிகள் எவை?
மேல் வயிற்றின் நடுவில் வலி வரும். இது, சாப்பிட்டவுடன் வலி அதிகரிக்கும் அல்லது குறையும். அமிலம் சுரக்கும் நேரத்தில் வலி வருவதால், தினமும் குறிப்பிட்ட நேரத்தில் வலி வரும். நடு இரவில் துாங்கும் போது வரலாம்; நெஞ்செரிச்சல், வாந்தி, குறைவாக சாப்பிட்டாலும் வயிறு உப்புசம், வயிற்றில் எரிச்சல் இருக்கும். சிறுகுடலில் பாதிப்பு இருந்தால், சாப்பிட்டவுடன் வலி குறையும்; இரைப்பையில் புண் இருந்தால், வலி அதிகமாகும்.சிகிச்சை செய்யாமல் விட்டால், புண் அதுவாகவே சரியாகி, ஆற முயற்சித்து, தழும்பை உண்டு பண்ணி, குடல் அடைப்பை ஏற்படுத்தும். நீண்ட நாட்கள் வயிற்றுப் புண் இருந்தால், கேன்சராக மாறுமா என்றால் மாறாது. அதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்த தொற்று, அல்சரை ஏற்படுத்துவது போல, சிலருக்கு கேன்சரை உண்டாக்கும்.
அறிகுறிகள் இல்லாமலும், சிலருக்கு இருக்கலாம்.எப்படி கண்டுபிடிப்பது?
எண்டோஸ்கோபி செய்தால், அதிகபட்சம் இரண்டு நிமிடத்திற்குள் தொற்று பாதிப்பு உள்ளதா என, கண்டுபிடித்து விடலாம். பாதித்த பகுதியில் இருந்து சதை எடுத்து, தொற்று இருக்கிறதா என்பதையும், அறிய முடியும்.இரண்டு கட்டங்களாக சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். முதலில், தொற்றை அழிப்பதற்கான மருந்துகளை, இரண்டு வாரங்கள் தர வேண்டி இருக்கும். தொற்றை அழித்த பின், வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு, நான்கு முதல் ஆறு வாரங்கள் மருந்து தேவைப்படும்.சரியான நேரத்தற்கு உணவு சாப்பிட வேண்டும். காலை உணவை தவிர்க்கவே கூடாது. அமிலம் சுரப்பது நிபந்தனை விதிக்கு உட்பட்டது. எந்த நேரத்தில் சாப்பிட பழக்கப்படுத்தி இருக்கிறோமா, அந்த நேரத்தில், அமிலம் சுரக்கும். அப்போது சாப்பிடாவிட்டால், மியூக்கஸ் எனப்படும், மெல்லிய சவ்வை அமிலம் பாதிக்கும்.
காரம் சாப்பிட்டால், பெப்டிக் அல்சர் உண்டாகுமா?
காரம் மட்டுமல்ல, எந்த உணவும், பெப்டிக் அல்சரை உண்டாக்காது. சுகாதாரமற்ற உணவாக இருந்தால் தவிர. அல்சர் இருந்து, காரம், மசாலா அதிகம் உள்ள உணவை சாப்பிட்டால், அது புண்ணில் பட்டு, சளியை ஏற்படுத்தலாம்.
டாக்டர் எல். தாயுமானவன்
முன்னாள் பேராசிரியர், குடல், இரைப்பை துறை,
ராஜாஜி அரசு மருத்துவமனை, மதுரை
drthayu55@gmail.com