கனவு தவிர்... நிஜமாய் நில்! - மகிழ்ச்சி தந்த மாற்றம்!
கனவு தவிர்... நிஜமாய் நில்! - மகிழ்ச்சி தந்த மாற்றம்!
PUBLISHED ON : டிச 17, 2017

மூளையில் உள்ள நரம்பு செல்களில், மின்காந்த அலைகளால் ஏற்படும் மாற்றத்தால் வருவது, 'எபிலெப்சி' எனப்படும் வலிப்பு நோய்.
இது, இரு பாலருக்கும் வரும் என்றாலும், பெண்களில் அதிக சதவீதம் பேர், இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
பெண்ணின் வாழ்நாள் முழுவதும், ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்ந்தபடியே இருக்கும். இவை, மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம்.
வலிப்பு நோய்க்கு, தொடர்ந்து, இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை, மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வலிப்பு நோய்க்கு தரப்படும் மருந்துகள், மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறது. திருமணம் ஆவதற்கு முன், வலிப்பு நோய் மாத்திரைகளுடன், போலிக் அமில மாத்திரையும் சேர்த்தே சாப்பிட வேண்டியது அவசியம்.
திருமணம் ஆன பெண்கள், கர்ப்பத் தடை மாத்திரைகளுடன், வலிப்பு நோய் மாத்திரைகளையும் சேர்த்து எடுத்துக் கொள்வர்; இதனால், இந்த இரண்டும் சேர்ந்து, பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
வலிப்பு நோய் உள்ள பெண்கள், கர்ப்பம் தரிக்கும் போது, கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். காரணம், வலிப்பு நோய்க்கு சாப்பிடும் மருந்துகள், கர்ப்பத்தில் உள்ள சிசுவை பாதிக்கும் அபாயம் அதிகம்.
இதனால், பிறவியிலேயே, பிளவுபட்ட உதடுகள், இதய கோளாறுகள், மூளை, முதுகு தண்டுவடப் பிரச்னைகள் குழந்தைக்கு வரலாம். எனவே, கர்ப்பக் காலத்தில், மருத்துவ ஆலோசனையுடன், சில மாத்திரைகளை மாற்றவோ, அளவை குறைக்கவோ வேண்டும்.
கர்ப்பக் காலத்தில், வலிப்பு நோய் பிரச்னை, மூன்றில் ஒரு பகுதியினருக்கு அதிகரிக்கவும் வாய்ப்புகள் உண்டு; சிலருக்கு, அந்த சமயத்தில் மட்டும் குறையவும் சாத்தியங்கள் உண்டு.
என், 40 ஆண்டு நரம்பியல் மருத்துவத் துறை அனுபவத்தில், ஆரம்ப காலங்களில், வலிப்பு நோய் வந்த பெண்களுக்கு, உடல், மன அளவில் மட்டுமல்லாது, சமூக ரீதியில் நிறைய பிரச்னைகள் இருந்தன.
திருமணம் என்பது, இவர்களுக்கு மிக சவாலான விஷயம்; ஆனால், இன்று நிலைமை பெருமளவு மாறியிருக்கிறது.
30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள், தாங்கள் விரும்பும் பெண்ணிற்கு வலிப்பு நோய் இருப்பது தெரிந்தால், மருத்துவ ஆலோசனைக்கு அழைத்து வருகின்றனர்.
இது போன்ற ஆரோக்கியமான மாற்றங்கள் மகிழ்ச்சியை தருகிறது.
டாக்டர் கே.பானு
நரம்பியல் சிறப்பு நிபுணர்,
சென்னை.
kbhanu@hotmail.com

