கனவு தவிர்... நிஜமாய் நில்!: ஒரு கிலோவிற்கு ஒரு கிராம் புரதம்!
கனவு தவிர்... நிஜமாய் நில்!: ஒரு கிலோவிற்கு ஒரு கிராம் புரதம்!
PUBLISHED ON : செப் 16, 2018

உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்பது எல்லாருக்கும் தெரியும்; ஆனால், எடைக்கு ஏற்ற புரதம் சாப்பிட வேண்டும் என்பது தெரிவதில்லை.
உயரம், 150 செ.மீ., இருந்தால், உடல் எடை, 50 கிலோவாக இருக்க வேண்டும்.
1 கிலோவுக்கு 1 கிராம் என்ற அளவில், 50 கிராம் புரதம் தினமும் சாப்பிட வேண்டும்; ஆனால், 10ல், 9 பேர் சராசரியாக, 20 - 25 கிராம் தான் சாப்பிடுகின்றனர்.
உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல், கூடுதல் அல்லது குறைவாக இருந்தாலும், சரியான எடைக்கு புரதம் சாப்பிட வேண்டும்.
கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் நேரில் சென்று நடத்திய ஆய்வில், குழந்தைகளின் அம்மாக்களிடம், ஒரு நாளைக்கு எவ்வளவு புரதம் சாப்பிடுகின்றனர் என்று பார்த்ததில், புரத உணவு பற்றிய தெளிவே, அவர்களிடம் இல்லை; பல பெண்கள் தினமும், 18 சதவீதம் தான் சாப்பிடுகின்றனர்.
ஏழு பேரில், இரண்டு பேருக்கு, புரதச் சத்து குறைபாடு உள்ளது.
சரியான அளவு புரதம் சாப்பிடாவிட்டால், போதுமான அளவு வளர்ச்சி இல்லாமல், வயதானவர்களை விடவும், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர்.
சரியான அளவு கொடுத்தால், குழந்தைகள் உயரமாக வளர்வர். கர்ப்பிணி பெண் தேவையான அளவு புரதம் சாப்பிடாவிட்டால், வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்காது.
கிராமப்புறங்களில் இருப்பவர்களின் சராசரி உயரம், ஐந்து அடிக்கும் குறைவாகவே உள்ளது; காரணம், போதிய அளவு புரதச்சத்து இல்லை.
நம் வழக்கத்தில் உள்ள பாசிப் பருப்பு, சோயா, கொண்டைக் கடலை உட்பட, 16 வகையான பருப்பு வகைகள், பால், தயிர், முட்டை, மீன், சிக்கன் போன்றவற்றில் பாதுகாப்பான புரதம் உள்ளது.
இரும்புச் சத்து குறைபாடும் நம்மிடம் அதிகம். இதற்கும் ஒரு முக்கிய காரணம், புரதச் சத்து குறைவு.
வளர் இளம் பருவத்திற்கு முந்தைய குழந்தைப் பருவத்தில், உடல் உறுப்புகளின் வளர்ச்சி, 90 சதவீதம் முழுமையடைந்து விடும். போதுமான புரதம் இல்லாவிட்டால், உயரம் மட்டுமல்ல, உடல் உள் உறுப்புகளின் வளர்ச்சியும் சரியாக இருக்காது.
கருப்பை சிறியதாக இருப்பது, கருக்குழாய் சரியின்மை, இளம் வயதிலேயே மூட்டுகளில் பிரச்னை... இவற்றுக்கு முக்கிய காரணம், புரதச்சத்து குறைபாடு.
புரதம் என்பது, பல விதங்களிலும் நமக்குத் தேவை. ஒரு வயதிற்கு பின், வளர்ச்சி நின்று விடும் என்று நினைக்கிறோம்; அப்படி இல்லை. நம் எலும்பு, ரத்தம், தோல், என்சைம்கள், ஹார்மோன்கள் என்று அனைத்திலும், தினமும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடலின் இந்த உள்செயல்பாட்டிற்கு புரதம் அவசியம்.
தினமும் உணவின் வாயிலாகவே, புரதம் சாப்பிட வேண்டும்; செயற்கையான, 'டின்'களில் விற்கப்படும் உணவை, கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளிடம் என்ன வேணும் என்று கேட்டு சமைப்பதே, தவறு என்று தான் சொல்வேன். குழந்தைகள் ஆசைப்படுகின்றனர் என்று கேட்டதெல்லாம் வாங்கி, சமைத்துக் கொடுப்பதால், ஊட்டச்சத்து குறைபாடுள்ள தலைமுறையை உருவாக்க காரணமாகிறோம்.
டாக்டர் தாரிணி கிருஷ்ணன்,
நியூட்ரிஷனிஸ்ட், சென்னை.
dhar.krish@gmail.com
