PUBLISHED ON : பிப் 13, 2022

கர்ப்ப காலத்தில், ஹார்மோன் சுரப்பு எல்லாமே வழக்கத்தை விட அதிகமாக சுரக்கும். குழந்தை பிறந்ததும், ஹார்மோன் சுரப்பு சட்டென்று குறையும். பிரசவத்திற்கு பிந்தைய பெண்களின் மனநிலையை, 'போஸ்ட்பார்டம் புளு' என்று சொல்வோம்.
இதில், மன அழுத்தம் போன்ற தீவிர பிரச்னைகள் இருக்காது. ஆனால், கோபம், எரிச்சல், பதற்றம், துாக்கமின்மை உட்பட சில பிரச்னைகள் இருக்கும்.
மருத்துவ ஆலோசனை
இரவில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு அடிக்கடி எழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இதனால், போதுமான நேரம் ஓய்வு எடுக்க முடியாத நிலையில், இது போன்ற மிதமான பிரச்னைகள் ஏற்படுவது இயல்பான ஒன்று.
பிரசவம் ஆன மூன்று வாரங்களில், இது தானாகவே சரியாகிவிடும். சில பெண்களுக்கு, மன அழுத்தம் போன்ற தீவிர பிரச்னைகள் இருக்கும். குழந்தையை பார்த்துக் கொள்ள முடியாது; சோர்வாக இருப்பர். நம் குழந்தை என்ற பிணைப்பு வராது; தாய்ப்பால் கொடுக்க ஆர்வம் இருக்காது; குழந்தை அழுவதை கூட கண்டு கொள்ளாமல் இருப்பர்.
குடும்ப உறுப்பினர் அல்லது செவிலியர் என்று யாரையும் உடன் வைத்துக் கொள்ள பயம். கொரோனா காலத்தில் வழக்கத்தை விட, போஸ்ட்பார்டம் மன அழுத்தம், நன்கு அதிகரித்து இருப்பதாக சர்வதேச ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பிரசவம் ஆனதும் இதுபோன்ற மாற்றங்களை கவனித்து, மனநல மருத்துவ ஆலோசனை தேவை என்று பெண்ணின் குடும்பத்திடம் சொன்னாலும், பல நேரங்கள் வேண்டாம் டாக்டர், சரியாகி விடும் என்று சொல்லி, மனநல டாக்டரிடம் செல்வதை தவிர்க்கின்றனர்.
தாயின் அரவணைப்பில் இல்லாமல் இருந்தால், என்ன தான் தாத்தா, பாட்டி அன்பாக இருந்தாலும், குழந்தைக்கு மனதளவில் நீண்ட காலத்திற்கு பாதிப்பு இருக்கவே செய்கிறது.
முன்னெச்சரிக்கை
இரண்டாவது கொரோனா அலை மிக தீவிரமாக இருந்ததால், நேரடி மருத்துவ ஆலோசனைக்கு வரவே தயங்கினர். தற்போது அந்த அளவிற்கு வைரஸ் பாதிப்பு இல்லாததால், பதற்றம் குறைந்து விட்டது.
கொரோனா வைரஸ் பாதிக்கும் என்ற பயம் இல்லாமல் அலட்சியமாக இருப்பவர்கள், எல்லா முன்னெச்சரிக்கை செய்தும் வெளியில் தலை காட்டவே பயம்... இந்த இரண்டு மிகையான நிலையிலும் மக்கள் உள்ளனர்.
டாக்டர் பிரேமலதா பாலசந்திரன்,
மகப்பேறு மற்றும் மகளிர் நல சிறப்பு மருத்துவர், மதர் ஹூட்
மருத்துவமனை, சென்னை.
அலைபேசி: 080 -67 23 88 66
