PUBLISHED ON : பிப் 13, 2022

'கொரோனா' வைரஸ் தொற்றுக்கு பின், கட்டுக்குள் இருந்த தோள்களில் இறுக்கம், முதுகு வலி, மூட்டு வலி உட்பட எலும்பு, மூட்டு பிரச்னைகள் அனைத்தும் பழையபடி திரும்பவும் வருகின்றன. இதற்கு காரணம், கொரோனா தாக்கத்திற்கு முன், சரியான மருந்து, உடற்பயிற்சி என்று மருத்துவ ஆலோசனைப்படி நடந்து, பிரச்னை இல்லாமல் இருந்தனர். இந்த இரண்டு ஆண்டுகளில், சரியான நேரத்திற்கு மருத்துவ ஆலோசனை பெறவில்லை.
ரத்த ஓட்டம்
இன்னொரு காரணம், வைரஸ் தொற்று, உடல் முழுதும் உள்ள ரத்த குழாய்களில் அழற்சியை ஏற்படுத்துகிறது. இதனால் ஆங்காங்கே ரத்த ஓட்டம் தடைபடும்; இதனாலும் பிரச்னை வருகிறது.
கொரோனாவுக்கு முன் என்னவெல்லாம் பிசியோதெரபி, உடற்பயிற்சி செய்தனரோ, அதை விடாமல் செய்ய வேண்டும். பிரச்னை அதிகமாவதற்கு முன், டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். கொரோனாவிற்கு பயந்து மற்ற உடல் பிரச்னைகளை அலட்சியம் செய்யக் கூடாது.
ஏற்கனவே இருந்த மற்ற உடல் கோளாறுகள் மேலும் தீவிரமாவதற்கு முன், டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும். டாக்டர்கள் மத்தியில் இருக்கும் அச்சம், கொரோனா கட்டுக்குள் வந்த பின், ஏற்கனவே இருந்த நோய்கள் அதிகமாகி விடுமோ என்பது தான்.
வைரஸ் பாதிப்பு வந்து சரியான பின், அறிகுறிகள் இல்லாத பாதிப்பாக இருந்தால், வழக்கமான உடற்பயிற்சியை உடனடியாக செய்யலாம். மிதமான அறிகுறிகள் என்றால், இரண்டு வாரங்களுக்கு பின், 'டி டைமர்' என்ற ரத்தப் பரிசோதனை செய்து, ரத்த உறைவு இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
இதுவே, தீவிர பாதிப்பு இருந்து, சரியான பின், ஆறு வாரங்களுக்கு உடற்பயிற்சி செய்யக் கூடாது. ரத்தப் பரிசோதனை செய்து, டாக்டரின் ஆலோசனை அவசியம் பெற வேண்டும். 'டெல்டா' அளவுக்கு 'ஒமைக்ரான்' வீரியமான வைரஸ் தான். ஆனால், 50 சதவீதத்திற்கும் மேல் தடுப்பூசி போட்டு விட்டோம்; தடுப்பூசி நன்றாக வேலை செய்துள்ளது.
இன்னொரு புறம், 'வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள், தடுப்பூசி போட்டால் வரும் நோய் எதிர்ப்பு சக்திக்கு இணையான எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது' என்று உலக சுகாதார மையம் கூறியுள்ளது. அப்படி பார்த்தால், நம் நாட்டில், 95 சதவீதம் பேருக்கு, தடுப்பூசி அல்லது வைரஸ் பாதிப்பால், இயற்கையான முறையில் எதிர்ப்பு சக்தி இருக்கிறது.
அதே நேரத்தில், எந்த வகையில் எதிர்ப்பு சக்தி கிடைத்தாலும், அது ஆறு மாதங்கள் வரை தான் பலன் தரும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆறு மாதங்களுக்கு பின், 'ஆன்டிபாடீஸ்' எந்த அளவு இருக்கிறது என்று பரிசோதனை செய்து பார்த்தால் தான் தெரியும். ஒமைக்ரான் போன்று மரபணு மாற்றம் ஆன வைரஸ் தொடர்ந்து வரும். பெரும்பாலான நேரங்களில் அறிகுறி இல்லாமல் போய்விடலாம்.
அவசர சிகிச்சை
நுாறு ஆண்டுகளுக்கு முன், 50 லட்சம் பேரை கொன்ற 'ஸ்பானிஷ் புளூ' தான், இப்போது ஆண்டுதோறும் வருகிறது. இத்தனை ஆண்டுகளில் அது சாதாரணமாகி விட்டது. புளூவை பார்த்து பயப்படுவதில்லை.
தடுப்பூசி இருப்பதால், கொரோனாவை வெல்ல, 100 ஆண்டுகள் ஆகாது. ஐந்து ஆண்டுகளில் சாதாரணமாகி விடும். இரண்டாவது அலையில், என்னிடம் ஆலோசனை பெறும் ஐந்து பேரில், மூன்று பேருக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டது.
இந்த முறை, 100 அழைப்பு வந்தால் இரண்டு பேருக்கு மட்டுமே அவசர சிகிச்சை தேவைப்படுகிறது. கொரோனா மருந்து சீட்டு எல்லாரிடமும் இருக்கிறது. லேசான அறிகுறிகள் இருந்தால், அவர்களாகவே, டோலோ 650 போட்டுக் கொள்கின்றனர்.
இது மிக நல்ல மாத்திரை. மருத்துவ கண்காணிப்பில் இருந்தால், ஒரு நாளைக்கு, 4 கிராமிற்கு மேல் போடக் கூடாது. நீங்களாகவே போடுவதாக இருந்தால், 650 கிராம் மாத்திரை அதிகபட்சம் நான்கு எடுக்கலாம். அதிக 'பாரசிட்டமால்' எடுத்தால், கல்லீரல் பாதிப்பு வரலாம்.
டாக்டர் சந்தோஷ் ஜேக்கப்,
இயக்குனர்,
பி வெல் ஆர்த்தோபீடிக்ஸ் ஸ்போர்ட்ஸ் அண்டு ஸ்பைன் மெடிசின்,
சென்னை.
