PUBLISHED ON : நவ 08, 2019

'ஸ்ட்ரோக்' வருவதற்கான காரணம் என்ன?
ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பது, 'ஸ்ட்ரோக்' எனப்படும், பக்கவாதத்தை தவிர்க்க முக்கிய வழி. 30 வயதிற்கு மேல், குறிப்பிட்ட இடைவெளியில், ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்வது அவசியம். உயர் ரத்த அழுத்தம் இருந்தால், ரத்த குழாய்களின் ஓரங்களில் தொடர்ந்து ஏற்படும் அழுத்தம், ரத்தக் குழாயை அடர்த்தியாக்கி விடும். அந்த இடத்தில் கொழுப்பு சேர்ந்து, ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போவதால், குறிப்பிட்ட பகுதி செயலிழந்து, பக்கவாதம் ஏற்படுகிறது.இரண்டாவது, சிகரெட் பழக்கம் இருக்கக் கூடாது.
குறிப்பாக, நம் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களை இந்த பழக்கத்தில் இருந்து வெளியில் கொண்டு வர வேண்டியது முக்கியம். சிகரெட் பழக்கம் இருப்பவர், குறைந்த பட்சம், 'பில்டர்'ரில் புகைப்பார். அவரின் அருகில் இருப்பவர், புகையை நேரடியாக சுவாசிப்பார். புகைப்பவரின் அருகில் இருப்பவருக்கு, பக்கவாதம் வரும் என்பதற்கு, அறிவியல் பூர்வ ஆய்வுகள் இல்லை என்றாலும், புகையை சுவாசித்தால் பாதிப்பு ஏற்படும் என்பது பொதுவான விதி.
எனவே, இருவருக்குமே பக்கவாதம் வரும் சாத்தியக்கூறுகள் உள்ளன.காற்று மாசினால், பக்கவாதம் வரும் வாய்ப்பு உள்ளதா என்பதற்கு, பல ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இந்த ஆய்வுகளின் ஆரம்பகட்ட முடிவுகளை பார்த்தால், காற்று மாசிற்கும் பக்கவாதத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
சர்க்கரை கோளாறு இருப்போருக்கு, ஸ்ட்ரோக் வந்தால், அதன் விளைவுகள், சிக்கல்கள் மற்றவர்களை காட்டிலும் அதிகம். அதனால், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பது மிகவும் அவசியம். அளவுக்கு அதிகமாக மது அருந்துவது, அதிக கொழுப்பு, உடற்பயிற்சி இல்லாதது போன்றவை, பக்கவாதம் வருவதற்கான பொதுவான காரணங்கள். இவற்றை கட்டுப்பாட்டில் வைத்தால், 80 சதவீதம் பாதிப்பு வராமல் தடுக்கலாம்.மிகவும் அரிதாக மரபியல் காரணிகளாலும் பாதிப்பு வரலாம்.
எந்த வயதில் ஸ்ட்ரோக் வரும்?
எந்த வயதில் வேண்டுமானாலும் பாதிப்பு வரலாம். 20 வயதிற்கு உட்பட்டோருக்கு வரும் பக்கவாதம், பெரும்பாலும் மரபியல் காரணங்களால் மட்டுமே வரும். பொதுவாக, 40 வயதிற்கு மேல் வரும்; பெண்களுக்கும் பக்கவாதம் வரும்.
அறிகுறிகள் என்ன?
எதிர்பாராத விதமாக, 'பேலன்ஸ்' இல்லாமல் போவது, பார்க்கும் பிம்பங்கள் இரண்டிரண்டாகப் தெரிவது, கண் பார்வை குறைவது, மங்கலாக தெரிவது, ஒரு பக்கம் வாய் கோணலாகப் போவது, கைகளை துாக்கவே முடியாமல் போவது அல்லது துாக்கிய கைகள், அதுவாகவே தானாக கீழே விழுவது, பேச முடியாமல் போவது, குழறலாக பேசுவது, பொதுவான அறிகுறிகள். நீண்ட நாட்களாக இந்த பிரச்னைகள் இருப்பது, ஸ்ட்ரோக்கின் அறிகுறிகள் இல்லை.ரத்த ஓட்டம் குறைவதால் வரும் ஸ்ட்ரோக் மிகவும் பொதுவானது.
குறிப்பிட்ட உடல் பாகத்தில் ரத்த குழாய் வெடித்து, ரத்த கசிவு ஏற்படுவதால் வருவது, இரண்டாவது வகை. இன்னொரு வகை, மினி ஸ்ட்ரோக். கை, கால் அல்லது உடலின் ஏதாவது ஒரு பகுதி எதிர்பாராமல் செயலிழந்து, அரை மணி நேரத்திற்குள் தானாகவே சரியாகி விடுவது. இது தீவிர ஸ்ட்ரோக் வருவதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.
உடனடியாக செய்ய வேண்டியது என்ன?
இதற்கென்ற சிறப்பு மருத்துவர்கள், மருத்துவ வசதிகள் உள்ள மருத்துவமனைக்கு உடனே வர வேண்டும். எவ்வளவு சீக்கிரம் மருத்துவ உதவி கிடைக்கிறதோ, அந்த அளவுக்கு பாதிப்பின் அளவும் குணமாவதற்கான சாத்தியமும் அதிகம்.
இது பொதுவான பிரச்னையா?
இது குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதாலேயே, இந்த கேள்வி வருகிறது. நான்கு பேரில் ஒருவருக்கு ஸ்ட்ரோக் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அந்த நால்வரில், நீங்கள் ஒருவராக இருக்க வேண்டாம் என்பதே, இந்த ஆண்டிற்கான விழிப்புணர்வு பிரசார கருப்பொருள்.
டாக்டர் பிரபாஸ் நாயர்
நரம்பியல் நிபுணர்,
அப்பல்லோ மருத்துவமனை
சென்னை
044 - 2653 7777
044 - 2653 7018
