PUBLISHED ON : நவ 07, 2019

உடல் பருமன் அதிகரிக்க காரணம்?
மன அழுத்தம், கோபம், பதற்றம், கவலை என, எந்த மனநிலையில் இருந்தாலும், ஒன்று, உணவை தவிர்க்கிறோம் அல்லது அதிகமாக சாப்பிடுகிறோம். பசித்து சாப்பிடுவதை விட, ருசிக்காக சாப்பிடுவோரே அதிகம். இப்படி, கண்டதையும் சாப்பிட ஆரம்பிப்பதால், உடல் பருமன் அதிகரிக்கிறது. இதில், வருத்தப்படும் விஷயம் என்னவென்றால், கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து, குழந்தைகளையும் உடல் பருமனில் கொண்டு விடுகின்றனர் பெற்றோர். உடல் பருமன் என்பது, ஒரு நோய் என்றே, உலக சுகாதார மையம் அறிவித்து விட்டது. தனி நபர் முயற்சி எடுத்தால் தவிர, இப்பிரச்னையை சரி செய்யவே முடியாது.
இயற்கை உணவு தீர்வை தருமா?
எந்த உணவு, நல்ல உணவு; எதில், என்ன சத்து இருக்கிறது; ஆர்கானிக் முறையில் விளைந்த காய்கறியா, பழமா என, தேர்வு செய்து சாப்பிடும் பழக்கம் அதிகரித்து உள்ளது. இது நல்லது, அது நல்லது என்று தேர்வு செய்து சாப்பிட்டாலும், நோய் பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளாமல், உணவை தேர்வு செய்வதில் பலன் இல்ல.
செரிமான ஆரோக்கியத்தை எப்படி அறிவது?
நம் முன்னோர், நம்மை போல் தேர்வு செய்து சாப்பிடவில்லை. உடம்பின் தேவையை அறிந்து சாப்பிட்டனர். பசி, தாகம், துாக்கம் போன்ற இயற்கையான, இயல்பான உணர்வுகள், உடம்பு நம்மோடு தொடர்பு கொள்ளும் தகவல் தொடர்பு அம்சங்கள். இந்த தகவல் தொடர்பை, நாம் உணர்வதே இல்லை.வெளியில் சென்று, வீடு திரும்பும் நம் தாத்தா, பாட்டிகள், ஒரு சொம்பு நிறைய தண்ணீரை அப்படியே குடித்து, அடுத்த வேலையை பார்க்க போய்விடுவர். ஆனால், தாகம் எடுக்கிறதோ, இல்லையோ, ஒரு நாளைக்கு, இத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்; மூன்று வேளை சாப்பிடுவதை, ஆறு வேளையாக பிரிக்க வேண்டும் என, ஆராய்ச்சி முடிவுகளைக் கொண்டு, நாம் செயல்படுகிறோம். தண்ணீர் குடிக்கும் நேரம், துாங்கும் நேரத்தை எல்லாம், மொபைல் போனில் உள்ள செயலி நினைவுப்படுத்துகிறது. உடம்பு என்ன சொல்கிறது என்பதை, நாம் உணர்வதே இல்லை. அமிர்தத்தையே சாப்பிட்டாலும், செரிமான அக்னி ஆரோக்கியமாக இல்லாவிட்டால், உணவு நஞ்சாகி விடும். எல்லா நோய்களுக்கும், அது தான் அடிப்படை.
உணவு பழக்கம் எப்படி இருக்க வேண்டும்?
செரிமானத்திற்கு தேவை, பித்தம். இதை, அக்னி என்று சொல்வோம். அக்னிக்கு ஆதாரமான சூரியன், மேலே வர வர, நன்கு பசிக்கும். காலையில் இருந்து, சாப்பிடாமல் காத்திருந்து பார்த்தால், இது புரியும். மாலையில், சூரிய அஸ்தமனத்திற்கு முன்னும், நன்கு பசிக்கும். சூரியன் மறைந்த பின், பசி உணர்வு குறைந்து விடும். பகலில், பசி உணர்வு வரும் நேரங்களில், சாப்பிட வேண்டும். இரவில், கூழ், கஞ்சி, பழரசம், சூப் போன்ற திரவ உணவுகளை உண்ண வேண்டும். உடம்பு என்ன சொல்கிறது என்பதை, கவனிக்க வேண்டும். இயந்திரம் போல் செயல்படக் கூடாது.
உணவோடு பழங்கள் சாப்பிடலாமா?
சமைத்த உணவை செரிப்பதற்கும், சமைக்காத உணவை செரிப்பதற்கும், தனித்தனி செரிமான அமிலங்கள் சுரக்கும். இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால், செரிமான கோளாறுகள் வரும். உடல் பருமன் அதிகரிக்கும்.
டாக்டர் ரேச்சல் ரேபேகா பிலிப்
ஆயுர்வேத மருத்துவர்,
சென்னை.
94895 50936
