PUBLISHED ON : செப் 23, 2014
சர்க்கரை நோய் என்பது நோயல்ல; அது ஒரு குறைபாடு அவ்வளவுதான்' என எளிதாக டாக்டர்கள் சொல்லி விடுகின்றனர். ஆனால் குறைபாடோ, நோயோ, இதனால் நோயாளிகள் படும் அவஸ்தை இருக்கிறதே...அப்பப்பா!
இந்த பிரச்னையை முதலில் நன்கு புரிந்து கொள்வது முக்கியம். நாம் உண்ணும் உணவு, உடலில் குளூக்கோஸ் (சர்க்கரை) ஆக மாற்றப்படுகிறது. பிறகு அந்த சர்க்கரை, ரத்த ஓட்டத்தில் சேர்கிறது. கணையத்தில் சுரக்கின்ற இன்சுலினும் ரத்தத்தில் சேர்கிறது. இதனால் சர்க்கரை அணுக்களின் உள்ளே செல்ல முடியும்.
பிறகு உயிரணுக்கள் சர்க்கரையை எரித்து, உடலுக்கு எரிபொருளை வழங்குகிறது. அதனால்தான் உடலுறுப்புகள் செயல்படுகின்றன. சர்க்கரை உயிரணுக்களுக்குள் செல்ல முடியாத போது, ரத்தத்திலேயே தங்கி விடுகிறது. இதுவே அதிக ரத்த சர்க்கரை நோய் எனப்படுகிறது.
முதல் வகை (டைப் 1 ) சர்க்கரை நோய்:
பாதிக்கப்பட்டவர்கள் உயிர் வாழ, இன்சுலின் ஊசி மிகவும் அவசியம். இல்லையென்றால் மயங்கிய நிலை எனும் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலைக்கு போய் விடுவர். இந்நோய் பெரும்பாலும் இளம் வயதில் இருக்கும் போது ஆரம்பிக்கிறது என்றாலும், எந்த வயதினருக்கும் இந்த வகை நோய் ஏற்படலாம்.
இரண்டாம் வகை(டைப் 2) சர்க்கரை நோய்: இவர்களுக்கு இன்சுலின் உற்பத்தி சீராக இருக்கும். ஆனால் போதுமான அளவுக்கு உற்பத்தி செய்வதில்லை. அல்லது உற்பத்தி செய்யும் இன்சுலினை போதுமான அளவுக்கு உபயோகித்துக் கொள்வதில்லை. இவ்வகை சர்க்கரை நோய்க்கு சரியான உணவு, உடற்பயிற்சி, மாத்திரை அல்லது இன்சுலின் மூலம் சிகிச்சை அளிக்கலாம். பெரும்பாலும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும்.
அறிகுறிகள் : சோர்வான உணர்வு, தோல் வறட்சி, அரிப்பு ஏற்படுதல், கைகள், அடி பாதங்கள் உணர்வு குறைந்து போதல், கை, கால் நடுக்கம், ஆறாத புண், காயம் ஆறுவதில் தாமதம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம், அதிக பசி, கண் பார்வை மங்குதல்,உடல் உறவில் குறைபாடு.
ஜி.டி.டி (குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்): வெறும் வயிற்றில் செய்யப்படும் இந்த பரிசோதனையில், ரத்த சர்க்கரை அளவு 120 மி.கி.,க்கு அதிகமாக இருந்தாலே, இன்சுலின் போதுமான அளவு சுரக்கவில்லை என்று பொருள்.
இந்த நிலையில் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி விட்டால், நோயைத் தடுக்கலாம். ஜி.டி.டி ரத்த பரிசோதனையில், இரண்டு மணி நேரம் கழித்து செய்யப்படும் சோதனையில், ரத்த சர்க்கரை அளவு 200 மில்லி கிராமுக்கு அதிகமாக இருந்தால், நோயை உறுதிப்படுத்தலாம்.
சிறுநீரக பாதிப்பு :
கண்களுக்கு அடுத்ததாக சிறுநீரகங்களை, சர்க்கரை நோய் பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்பட்டால் ரத்த அழுத்தம் அதிகமாகும். எனவே நோயாளிகள் ரத்த அழுத்த அளவையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது அவசியம்.
சிறுநீரில் மைக்ரோ அல்புமின் யூரியா சோதனை செய்தால், சிறுநீரகங்களில் பாதிப்பு ஆரம்பித்துள்ளதைக் கண்டுபிடித்து விடலாம். மருந்து சிகிச்சை மூலமே சிறுநீரக செயலிழப்பை தடுக்க முடியும். கால் வீக்கம் ஏற்பட்டால் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறி எனலாம்.

