PUBLISHED ON : செப் 23, 2014
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்க தவறினால் சிறுநீரகம், இதயம் உட்பட உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும் என்கின்றனர் மருத்துவர்கள். அது எப்படி?
உடலில் உள்ள கொழுப்பைப் பிரிக்கும் செயல்பாட்டிற்கு, இன்சுலின் ஹார்மோன் உதவுகிறது. உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிமாக இருந்தால், கொழுப்பு பிரியாமல் கெட்ட கொழுப்பு சத்து (எல்டிஎல்) அதிகமாகி, ரத்தக் குழாய்களை அடைக்கும். இதற்கு 'அதிரோஸ்கிளிரோசிஸ்' என்று பெயர். இதனால் சீரான ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதய ரத்த குழாய்களிலும் இத்தகைய பாதிப்பு ஏற்படும்.
கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோய் காரணமாக, இதய நரம்புகள் பாதிக்கப்பட்டு வலி உணர்வைத் தெரிவிக்கும். இதய ஆற்றலில் பாதிப்பு ஏற்படும். நோயாளியின் வயதை பொருத்து, ரத்த கொழுப்பு சத்து அளவுகள் அதிகமாக இருக்கும் நிலையில், இதயத்தைக் காக்கும் சிகிச்சையும் சேர்த்து செய்யப்படும்.
சரியான காலணி : ஒரு சிலருக்கு கால் விரல்களின் நுனி பாதத்தில் குத்தல் அல்லது எரிச்சல், பஞ்சு மெத்தையில் நடப்பது போன்ற உணர்வு ஆகிய அறிகுறிகள் இருக்கும். கால் நரம்பு, ரத்த குழாய் பாதிப்பு காரணமாக இத்தகைய அறிகுறிகள் தெரியலாம்.
சார்க்கரை நோயாளிகளின் கால் நரம்பு ரத்தக்குழாயின் தன்மையை அறிய பரிசோதனைகள் உள்ளன. பாதத்தின் அழுத்தப் புள்ளிகளை ஆய்வு செய்து, எம்.சி.ஆர் (மைக்ரோ செல்லுலார் ரப்பர்) அல்லது எம்.சி.பி (மைக்ரோ செல்லுலார் பாலிமர்) சிறப்புக் காலணிகளை அணிவது நல்லது. கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோயினால் கால் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும்.
சர்க்கரை நோயைக் கண்காணித்து மருத்துவ ஆலோசனை பெறுவது, சர்க்கரை உள்ளவரின் குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு உணவுமுறை, உடற்பயிற்சிகளைக் கடைப்பிடிப்பது, மருந்துகளை சரியான அளவில் சரியான நேரத்தில் கொடுத்து விழிப்புடன் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது ஆகியவை மிக முக்கியம்.
சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இதய நோய் உள்ளவர்களுக்கு ரத்தக்குழாயின் நிலையைப் பொருத்து சிகிச்சையும் மாறுபடும். முன்பே பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்கள், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள், கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், வாரத்தில் ஒரு நாள் கோழி வேகவைத்து சாப்பிடலாம்.
ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படக் காரணங்கள்:
* வயது ஆக ஆக இரத்தக்குழாய் சுருங்கி அடைப்பு ஏற்படலாம்.
* பாரம்பரியம்
* பெண்களை விட ஆண்களுக்கு ரத்தக் குழாய் அடைபடும் வாய்ப்பு அதிகம்.
* புகைப்பிடித்தல்
* அதிக ரத்த அழுத்தம்
* அதிக கொலஸ்ட்ரால்
* சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாதது
* உடல் பருமன்
* அதிகமாக மது அருந்துதல்
இந்த காரணங்களில் இரண்டுக்கு மேல் இருந்தால், அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகின்ற வாய்ப்பு இருக்கலாம். இவர்கள் மாரடைப்பு தடுப்பு மருந்துகளைச் சாப்பிடுவது நல்லது. சர்க்கரை உள்ளவர்கள் வருடத்திற்கு ஒரு முறை விழித்திரையில் பாதிப்பு உள்ளதா என்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

