PUBLISHED ON : செப் 23, 2014
சிலருக்கு கால் தொடைக்கு கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருக்கும்.
முட்டிக்கால்களுக்கு கீழேயும், உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும். இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும், வேதனையும், குடைச்சல் போன்ற உணர்வும் ஏற்படும். கால் பகுதியின் ரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கும்.
கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள் ஏற்படக்கூடும். நாள் பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. இது பரவலாக பலருக்கும் உள்ள நோய்தான். கடுமையான வலியோ, வேதனையோ இல்லாததால் இதனை யாரும் பெரிதுபடுத்துவது இல்லை.
ஆனாலும், இது அலட்சியப் படுத்தக்கூடிய நோய் அல்ல. கை கால்கள் உட்பட உடலின் அனைத்து பாகங்களில் இருந்தும் இதயத்துக்கு அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களுக்கு, வெயின் என்று பெயர்.
வெரிகோஸ் என்றால் ரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள். இதயத்திற்கு அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளங்கள் சுருண்டு கொள்ளுதல், வீங்குதல் போன்ற நிலையை வெரிகோஸ் வெயின் என்றுஅழைக்கிறோம்.
வெரிகோஸ் வெயின் நோய் எதனால் வருகிறது?
மனிதனின் பெருங்குடல், விலங்குகளுக்கு இருப்பதைப் போல் தொங்கியபடி இல்லை. ஒரு கூட்டுக்குள் இருப்பதைப் போல மனிதனின் பெருங்குடல் அடைக்கப் பட்டுள்ளது. மலச்சிக்கல் ஏற்படும் போது, ரத்த நாளங்கள் அனைத்தும் அழுத்தப்படுகின்றன.
நாளங்கள் புடைத்தல் அல்லது வீங்குதல் போன்ற இயல்புக்கு மாறான நிலைக்கு தள்ளப்படுகின்றன. ஆக, மலச்சிக்கல்தான் இந்த நோய்க்கான மூல காரணமாக கருதப்படுகிறது.
அடுத்தபடியாக ஒரே இடத்தில் நீண்ட நேரம் அசைவற்று நின்றபடியே வேலை செய்வது, ஒரே இடத்தில் கால்களை தொங்கவிட்டபடியே அசைவற்று உட்கார்ந்திருப்பது போன்றவற்றாலும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இந்நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
ரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் பலவீனமாக இருந்தால், இந்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பாதங்களில் இருந்து ரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் போது, புவியீர்ப்பு விசைக்கு எதிராக, அதிக விசையுடன் வால்வுகள் இயங்க வேண்டி உள்ளது.
அது இயலாமல் போகும்போது, ரத்தம் மீண்டும் கீழ் நோக்கியே செல்லத் தொடங்கும். இதனால், ரத்தநாளங்களின் சுவர்கள் பாதிக்கப்பட்டு, புடைத்தும் வீங்கியும் காணப்படும். ஆக, இவை எல்லாமே, உடலுக்கு அதிக அசைவில்லாத வாழ்க்கை முறையினால் வரும் கேடுகள் என்பது புரிகிறது. உடலுக்கு குறைந்தபட்ச உழைப்பும், அசைவும் தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

