PUBLISHED ON : செப் 17, 2017
கண்ணும் கருத்தா வேலை செய்யணும்பா.! எனும் முதியோர் சொல்லும் அறிவுரையை, இந்த காலத்தில் சிலர் தவறாக புரிந்து கொண்டு, சதா கம்ப்யூட்டர்
ஸ்கிரீனை பார்த்துக் கொண்டே மணிக்கணக்கில் வேலை பார்ப்பதால், கண்ணை பராமரிக்கத் தவறி விடுகின்றனர். இதனாலே, பெரும்பாலனோர் கண் எரிச்சலால் அதிகம் அவதிப்படுகின்றனர்.
கண்களில் இருந்து கண்ணீர் வடிவதுடன், எரிச்சலும் உண்டாகிறது. கூடவே சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக, அதிகப்படியான தூசிகள் கண்களில் படுவதோடு, பாக்டீரியாக்கள் மற்றம் வைரஸ்கள் கண்களை தாக்கி, புண், எரிச்சல் மற்றும் வலி போன்றவற்றை உண்டாக்குகின்றன. மேலும் வெயிலில் நீண்ட நேரம் சுற்றினாலும், கண்கள் எரிச்சலுடன் இருக்கும்.
இவ்வாறு கண்கள் எரிச்சல் வந்தால், அலட்சியமாக விடக்கூடாது. குளிர்ந்த நீரில் கண்களை அலசினால், கண்களில் எரிச்சலை உண்டாக்கும் தூசிகள் நீங்கி, எரிச்சல் குணமாகும். குறிப்பாக, இவ்வாறு செய்யும் போது, கைகளை முதலில் நன்கு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அழுக்கான கையால் கண்களை எப்போதும் தொடக்கூடாது.
சிறிது காட்டனை எடுத்து, அதை ரோஸ் வாட்டரில் நனைத்து, கண்களை மூடி அதன் மேல் வைத்தால், உடனே கண் எரிச்சல் குணமாகும். மேலும் கண்களில் புண் இருந்தால், இந்த முறையை செய்யும் போது, புண்ணால் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி, அதை கண்களின் மேல் 15 நிமிடம் வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவினால், கண்களில் ஏற்படும் எரிச்சல் நீங்கும். வேண்டுமெனில், உருளைக்கிழங்கை ப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து கூட உபயோகிக்கலாம். இந்த முறையால் கருவளையம் இருந்தாலும் போய்விடும்.
வெள்ளரிக்காயை சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து, பின் அதனை வட்டமாக வெட்டி, கண்களின் மேல் 15 நிமிடம் வைத்து உட்கார்ந்தால், கண் எரிச்சல் குணமாவதோடு, கண்களைச் சுற்றியுள்ள கருவளையமும் நீங்கும். மேலும் இதில் உள்ள குளிர்ச்சி தன்மையால் கண்களும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
டீ பேக் கண் எரிச்சலைத் தடுக்கும் இயற்கை வைத்தியங்களில் ஒன்று தான். டீ பேக்குகளை கண்களில் வைப்பது. அதாவது, 2 டீ பேக்குகளை குளிர்ந்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனை கண்களின் மேல் 1520 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். இந்த முறையை ஒரு நாளைக்கு பல முறை செய்து வந்தால், கண் எரிச்சல் நீங்குவதோடு, கண்களும் அழகாக இருக்கும்.
கற்றாழையை சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து, பின் அதை எடுத்து, அதில் உள்ள ஜெல்லை காட்டனில் நனைத்து, கண்களின் மேல் வைக்க வேண்டும். சீமைச்சாமந்தி பூக்களை உலர வைத்து, பின், அதை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரைக் கொண்டு, கண்களை கழுவினால், கண்களில் ஏற்படும் எரிச்சல் குறைவதோடு, கண்களில் உள்ள அழுக்குகள் நீங்கி, சுத்தமாக வைத்துக் கொள்ளும்.
நல்ல சுத்தமான ஐ ட்ராப்பரை எடுத்துக் கொண்டு, அதில் விளக்கெண்ணெயை எடுத்து, கண்களில் ஒரு துளி விட்டு, கண்களை சிறிது நேரம் மூடினால், கண் எரிச்சல் நீங்கும். மேலும், இம்முறையை, அதிகளவில் கண் எரிச்சல் உள்ளவர்கள், தினமும் 34 முறை செய்து வந்தால், கண்களில் உள்ள எரிச்சல் குறைவதோடு, கண்கள் புத்துணர்ச்சியுடனும் அழகாகவும் இருக்கும். கண் பாதிப்பு உள்ளவர்கள், இம்முறையில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தினால் நிவாரணம் கிடைக்கும்.

