PUBLISHED ON : செப் 17, 2017
கண்ணாடி மோகம், இன்று பலரையும் ஆட்டிப் படைக்கிறது. பார்வை பாதிப்பு இல்லாவிட்டாலும், அழகுக்காக சிலர் கண்ணாடி அணிந்துக் கொள்கின்றனர். கண்ணாடியின் கலர், லென்ஸ், பிரேம் போன்றவற்றை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம். இவையே பிரச்னைகள் ஏற்பட காரணமாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருக்க வேண்டும்.
சன்கிளாஸ்: சன்கிளாஸ் வாங்கும்போது, அடர் நிறமாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் தான் பார்த்து வாங்குவார்கள். ஆனால், யூவி புரொடெக் ஷன் உள்ள கண்ணாடியாக வாங்குவது தான் முக்கியம். அடர் நிற கண்ணாடி வழியாகப் பார்க்கும் போது, சரியாகத் தெரியாது என்பதால் உற்றுப் பார்க்க வேண்டியிருக்கும். அதனால் கண்ணில் உள்ள ப்யூபிள் அதிகமாக விரியும். அப்போது யூவி., கதிர்கள் சுலபமாகக் கண்களுக்குள் சென்று விடும். எனவே, சன்கிளாஸ் வாங்கும்போது சன்கிளாஸ் சி.ஆர்.9, பாலிகார்பனேட் சன்கிளாஸ் போன்ற யு.வி., புரொடெக்ஷன் உள்ள கிளாஸ்களாக பார்த்து வாங்க வேண்டும்.
பவர்லெஸ் கிளாஸ்: வாகனம் இயக்கும் போது, தூசுகளில் இருந்து கண்களைப் பாதுகாக்கவும், பேஷனுக்காகவும் பவர்லெஸ் கிளாஸ் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இந்த பிளெய்ன் கிளாஸில், ப்ரிஸ்மாடிக் எபெக்ட் இருந்தால், நிச்சயமாக தலைவலி வரும். எனவே, பிரிஸ்மாடிக் எபெக்ட் இல்லாததாக பார்த்து வாங்க வேண்டும். கண்ணாடியில் கீறல் விழாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். கீறல் விழுந்ததைப் பயன்படுத்தினால், பார்வை பாதிப்புக்குள்ளாகும்.
கான்டாக்ட் லென்ஸ்: கான்டாக்ட் லென்ஸை, கண்டிப்பாக, மருத்துவ ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தக் கூடாது. லென்ஸ் சரியாக பொருத்தப்பட வேண்டும் என்பது முக்கியம். கழற்றி மாட்டும் போது சரியாக சுத்தம் செய்து மாட்ட வேண்டும். அதேபோல அதிக நேரம் தொடர்ந்து அணிந்திருக்கவும் கூடாது. இதையெல்லாம் சரிவர கடைப்பிடிக்கவில்லை என்றால், கண்களில் பாதிப்பு வரும். இதன் தொடர்விளைவாக, பார்வை இழப்பு வரை ஏற்படலாம். கான்டாக் லென்ஸைப் பொறுத்தவரை, மருத்துவரின் ஆலோசனைப்படி தேவையான நேரம் மட்டுமே அணிய வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை அவசியம்.
கலர் லென்ஸ்...! கலர் லென்ஸை தவிர்ப்பதே நல்லது. கலர் லென்ஸ்களில் உள்ள லேயர், பிக்மென்டால் ஆனது. இதற்குள் காற்று நுழைய வழி இருக்காது. கருவிழிக்கு கிடைக்க வேண்டிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். விளைவாக, கருவிழிக்குள் ரத்தக்குழாய் வளரும். கலர் லென்ஸ் தவிர்த்து, க்ளியர் லென்ஸ் பயன்படுத்தலாம். இதில் ஆக்ஸிஜன் உட்செல்ல முடியும். இதிலும் டி.கே., 90 எனும் அளவுக்கு மேல் வரும் கிளியர் லென்ஸ் பயன்படுத்துவது
நல்லது. தரம் குறைவான லென்ஸ் பயன்படுத்தினால், இமையின் உட்பகுதியில் கொப்புளம் வரும்.
கிளார் கோட்டிங் லென்ஸ்: கம்ப்யூட்டரில் அதிகமாக வேலை செய்பவர்கள், கிளார் கோட்டிங் லென்ஸ் பயன்படுத்தலாம். இண்டோர், அவுட்டோரில் வேலை செய்பவர்களும், இரவு, வாகனத்தை இயக்குவோரும், போட்டோ க்ரோமிக் லென்ஸ் பயன்படுத்தலாம். ஒவ்வொரு லென்ஸூக்கும் பிரேம் மாறும். அதை சரியாகத் தேர்வு செய்ய வேண்டியது அவசியம். பிரேம் பற்றிய ஆலோசனையையும் டாக்டரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். பார்வை பற்றிய விஷயங்களில், அக்கறை இல்லாமல் இருக்கக் கூடாது. இதனால், பின்னாளில் தொந்தரவு வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

