PUBLISHED ON : செப் 17, 2017
கிழங்கு வகைகளில் மருத்துவ குணமுள்ள கிழங்காக, சேனைக்கிழங்கு விளங்குகிறது. இதன் மகத்துவம் தெரியாததால், தமிகத்தில் பலர் இதை வாங்கி உட்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. கிழங்கு வகைகளுள் நீண்டகாலம் வைத்திருந்து பயன்படுத்தக் கூடிய கிழங்கு, சேனைக்கிழங்கு. ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை இக்கிழங்கு கெட்டுவிடாமல் இருக்கும். குளிர் பிரதேசங்களில் இன்னும் அதிகமான நாட்கள் இருக்கும். இது பெரிய தோற்றம் கொண்டதாகவும், தோல் தடிமனான இளஞ்சிவப்பு நிறத்துடன் காணப்படும்.
இக்கிழங்கின், 100 கிராம் எடையில், புரதம், 1.2 கிராமும், தாது உப்புகள், 0.8 கிராமும், மாவுச்சத்து, 18.4 கிராம், ரைபோபிளவின், 0.07 மி.கிராம், கால்
சியம், 50 மி.கிராம், இரும்பு, 0.6 மி.கிராம், தயாமின் 0.06 மி.கிராம், நிகோடினிக் 0.07 மி.கிராம் உள்ளன. கிடைக்கும் கலோரி அளவு, 79 ஆகும். சேனைக்
கிழங்கில் மிகக்குறைந்த அளவே பீட்டா கரோட்டின் மற்றும் கர்போஹைட்ரேட் அடங்கி உள்ளது.
அதனால் இதை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதில், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அடங்கி உள்ளது.
கிழங்கை, காய்கறியாகவும், கட்லெட், சிப்ஸ் தாயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர். கீல்வாதம், நீரிழிவு, தொழுநோய், மூலநோய், உடம்பு வறட்சி, உடல் பலவீனம், ஆஸ்துமா ஆகியவற்றை இது குணமாக்குகிறது. இப்பிரச்னை உள்ளவர்கள், வாரம் ஒருமுறை மருந்து போல் நினைத்து சேனைக்கிழங்கை சாப்பிட்டு வந்தால், நோய் அண்டாது. உடல் களைப்பின்றி வலுவாகவும், திடமாகவும் இருக்கும்.
பெண்கள் சேனைக்கிழங்கை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், மாதவிடாய் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உணவு செரிமானமாகி நன்கு பசி எடுக்கும். ஆப்ரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், தென் அமெரிக்கா, தெற்கு பசிபிக், தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் தவிர்க்க முடியாத உணவாக சேனைக்கிழங்கு இருந்து வருகிறது. லட்சக்கணக்கான ஆப்ரிக்கர்களின் பசியைப் போக்கும் முக்கிய உணவாக சேனைக்கிழங்கு இருந்து வருகிறது.
உடலை வலுவடைய செய்யும் சத்து இதில் நிறைய உள்ளது. இதில் உள்ள கால்சியம் சத்து, வயதானவர்களின் எலும்பு பலவீனமடைந்து விடாத படி பாதுகாக்கிறது. பித்தக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகளை குணமாக்குகிறது. பஞ்சகாலத்தில் பெண்கள், சேனைக்கிழங்கு உண்பதன் மூலம், எலும்பு அடர்த்தி குறைபாடும் ஆஸ்டியோ பெராசிஸ், இதய நோய்களும் தவிர்க்கப்படுகின்றன. பூரித கொழுப்பு குறைவாக இருப்பதும் நல்லதே.
இருதயம் பாதுகாக்கப்படும். உருளை ரகங்களை விட, சேனைக்கிழங்கு வகைகள் சர்க்கரை குறைந்தவை. குறைந்த கிளைசமிக் அளவுகள் உள்ளவை. நீடித்து இருக்கும் சக்தியை கொடுப்பது மட்டுமன்றி, நீரிழிவு, அதீத உடல் பருமன் ஏற்படாமல் பாதுகாக்கும்.
உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கிறது. உணவில் உள்ள நச்சு கலவையை சமன் செய்கிறது. இதனால் புற்று நோய் ஏற்படும் தன்மையை குறைக்கிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதிகளவிலான வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சத்துகளை கொண்டு இருக்கிறது. வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை அதிகரிக்கிறது.
வைட்டமின் சி சத்து இருப்பதால், எலும்புகளை வலுவாக்கும் மற்றும் நுரையீரல் நோய்களை குணப்படுத்தும். ரத்த அழுத்ததை குறைக்கும் தன்மை கொண்டது. மேலும் ரத்த சிவப்பணு உற்பத்திக்கு உதவுகிறது. இதனால் ரத்த சோகை குணமாகிறது. பசியை தூண்ட உதவுகிறது.

