PUBLISHED ON : செப் 17, 2017
வாரம் ஒருமுறை வெளியில் சாப்பிட்ட நிலை மாறி, இன்று வாரம் ஒரு நாள் வீட்டில் சமைத்து சாப்பிடும் நிலை உள்ளது. வீட்டு சாப்பாடு
ஆரோக்கியமானதாகவும், ஓட்டல் சாப்பாடு ருசியானதாகவும் இருக்கிறது.
தற்போது, ஓட்டலில் சாப்பிடும் பழக்கம், பெருநகரங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் சாதாரணமாகிவிட்டது. நாம் வெளியே சாப்பிடும்போது கவனிக்க மற்றும் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. உணவு உண்ட பிறகு, வெதுவெதுப்பான நீரை குடிப்பது நல்லது. வெது
வெதுப்பான நீர் உணவு எளிதாக செரிமானமாக உதவும்.
கை கழுவும் இடத்தில் லிக்விடு சோப் வைத்திருக்கிறார்களா. அது பயன்படுத்தத்தக்கது தானா, கைகழுவும் இடம் சுத்தமாக இருக்கிறதா என்பதையெல்லாம் பார்த்துப் பயன்படுத்த வேண்டும்; கைகளை வெதுவெதுப்பான நீரில் கழுவுவது சிறந்தது.
டிஷ்யூகளைப் பயன்படுத்துபவராக இருந்தால், ரோல் வடிவில் உள்ள டிஷ்யூக்கள் அல்லது தனித்தனியாக இருப்பவற்றைப் பயன்படுத்துவது நல்லது. மற்றவரின் கைப்பட்டு நமக்கு வரும் டவல்களில் தொற்றுக் கிருமிகள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
உணவு பரிமாறும் தட்டுகள், கப்புகள், ஸ்பூன்கள் அனைத்தும் சுத்தமாக இருக்கின்றனவா என்பதை உறுதிசெய்துவிட்டுப் பயன்படுத்தவும். ஓட்டலில் நாம் சாப்பிடத் தேர்ந்தெடுக்கும் உணவு, அதிக எண்ணெயில் தயாரிக்கப்படாததாக இருப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது. அசைவ உணவுகளில் குறைந்த அளவு கொழுப்பு உள்ள இறைச்சியை சாப்பிடலாம்.
அவற்றில் கொழுப்புச் சத்து குறைவாக இருக்கும். செரிமானமும் எளிதாகும். சாப்பிடும் உணவு, 500 கலோரிக்கும் குறைவாக இருக்க வேண்டும். எனவே, சாலட் மற்றும் சூப் வகைகளை முதலில் உட்கொள்வது சிறந்தது.
ஓட்டலில் தயாரிக்கும் உணவில் சுவையைக் கூட்ட வெண்ணெய், எண்ணெய், வினிகர், உப்பு போன்றவற்றை அதிக அளவில் சேர்த்துச் சமைப்பர். எனவே, ஆர்டருக்கு முன், உணவில் என்னென்ன சேர்க்கப்பட்டிருக்கின்றன என கேட்டுத் தெரிந்து கொண்டு நமக்கு ஏற்றதை ஆர்டர் செய்யலாம்.
சாப்பிட்ட பிறகு, சிலருக்கு ஏதாவது பானங்களைக் குடித்தால்தான் திருப்தி கிடைக்கும். அவர்கள், பிரெஷ் ஜூஸ் பருகுவது நல்லது. கடைசியாகச் சாப்பிடும் இனிப்பு மற்றும் ஐஸ் கிரீம்களைத் தேர்வு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும்.
அதிகக் கொழுப்பு இல்லாதவாறு, செயற்கை நிறமிகள் இல்லாதவற்றைத் தேர்ந்தெடுப்பது உடலுக்கு நல்லது. பால் உணவைச் சேர்த்துக்கொள்ள விரும்புபவர்கள், ஆடை நீக்கிய பால் அல்லது ஜூஸ் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம்.

