PUBLISHED ON : ஜன 08, 2020

பற்சொத்தை ஏற்படுவது எப்படி?
உண்ணும் உணவு பொருட்களை பொறுத்தே ஆரோக்கியம் அமைந்துள்ளது. உண்ணும்
உணவில் பற்களில் ஒட்டக்கூடிய பொருட்கள் பற்களுக்குஇடையே தங்கி அமிலங்களை
உற்பத்தி செய்கின்றன. இவை பல்லின்'எனாமலை' கரைத்து பற்சொத்தையை ஏற்படுத்துகிறது.
பற்சொத்தை ஏற்பட காரணம் என்ன?
குழந்தை பிறந்த ஒரு சில மணி நேரத்திற்குள் குழந்தையின் வாயில் பல வகையான பாக்டீரியா தொற்றுகின்றன. இவைகளுள் ஒன்று 'ஸ்டெப்டோ காக்கஸ் மியூட்டன்ஸ்'. இவை
எனாமலில் ஊடுருவதற்கு 5 முதல் 6 நாட்கள் ஆகும். நார்ச்சத்து குறைவான மற்றும் பற்களில் எளிதில் ஒட்டக்கூடிய உணவுகள், இனிப்பு வகைகளால் பற்சொத்தை ஏற்படுகிறது.
பற்குழி, பிளவு ஏற்பட்டால் அடைக்க முடியுமா?
பற்களின் மேல்பகுதியில் காணப்படும் குழி மற்றும் பிளவான பகுதிகள் அதிகமான சொத்தை ஏற்படும் பகுதி. பொதுவாக இவை முன்கடைவாய்ப்பல் மற்றும் கடைவாய்ப்பல் ஆகியவற்றில் காணப்படும். பற்சொத்தைகளை முறையான கருவிகளை கொண்டு நீக்கிய பின் குழி மற்றும் பிளவுகளை அடைப்பானை கொண்டு அடைக்கலாம்.
பற்சொத்தையை தவிர்ப்பது எப்படி?
சாப்பிட்ட பின் வாய் கொப்பளித்தல் மற்றும் இரவில் துாங்குவதற்கு முன் பல் துலக்குதல், பச்சிளங்குழந்தைகள் பால் குடித்தவுடன் வாயை சுத்தம் செய்தல் போன்ற பழக்கங்களை கடைபிடிப்பது நல்லது. பல் சொத்தையாவதற்கு உணவே காரணம். பாட்டில் மற்றும் பேப்பர் கப்களில் அடைத்து விற்கும் பானங்களை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்.
குழந்தைக்கு பால் கொடுக்கும் போது ஒவ்வொரு முறையும் பாட்டில் மற்றும் ரப்பரை நன்றாக வெந்நீரில் கொதிக்க வைத்த பிறகு பயன்படுத்த வேண்டும். அதிகநேரம் பால்புட்டியை வாயில்
வைத்திருந்தபடி குழந்தைகள் துாங்கினால், பற்சொத்தை ஏற்பட வாய்ப்பு உண்டு. பால் கொடுத்த
பின் குழந்தையின் ஈறுகளை சுத்தமான பருத்தி துணிகளை கொண்டு நீரில் நனைத்து துடைக்க வேண்டும்.
பல் துலக்கும் முறை என்ன ?
டூத்பிரஷ் வாய் சுகாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பற்களின் இடையில் சிக்கிக்கொண்ட உணவு பொருட்களை எடுப்பதற்கும், சொத்தை பல் ஏற்படுத்தும் வாய்ப்பினை குறைப்பதற்கும் நாக்கினை சுத்தம் செய்வதற்கும், பற் சொத்தை ஏற்படுவதை குறைப்பதற்கும் சிறிய பட்டாணி அளவு பற்பசையை பிரஷ்ஷில் வைத்து பயன்படுத்தவும். மெல்லிய நைலானால் ஆன
'பிளாசினை' பயன்படுத்தி பற்களுக்கு இடையில் உள்ள உணவு துகள், பல்சொத்தையை
நீக்கலாம்.
மாற்றுப்பல் கட்டினால் பாதிப்பு ஏற்படுமா?
பற்கள் இல்லாத போது உதடு, கன்னம் உள்ளே சென்று விடுகின்றன. குழி விழுகிறது. முகத்தின்
உயரம் குறைந்து விடுகிறது. சருமத்தில் சுருக்கம் உண்டாகின்றன. பல் இல்லாததால் நார்ச்சத்து உள்ள உணவுகளை தவிர்க்கின்றனர். நன்றாக உண்ணாத காரணத்தால் அஜீரண கோளாறு ஏற்படுகின்றன.
பல் இல்லாதவர்கள் பேசும்போது உச்சரிப்பில் சிரமம் ஏற்படுகிறது. பல் இல்லாத போது எதிர் பல் கீழே, மேலே செல்ல வாய்ப்பு உண்டு. பல் எண்ணிக்கை குறைந்தால் பாதிப்பு ஏற்படும். எனவே பல் எடுத்த பகுதியில் இரண்டு வாரங்களுக்குள் செயற்கை பல் பொருத்த வேண்டும்.
பல்லை பராமரிக்கும் முறைகள் என்ன?
உணவு உண்ட பின் வாய் கொப்பளிக்க வேண்டும். தினமும் இருமுறை பல் துலக்க வேண்டும். மென்மையான டூத் பிரஷ் பயன்படுத்துங்கள். தேவைப்பட்டால் மவுத் வாஷ் பயன்படுத்தலாம். புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதலை தவிர்க்க வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.

