PUBLISHED ON : மே 12, 2019

எனக்கு பல் கூச்சம் உள்ளது. குளிர்ந்த மற்றும் சூடான உணவு வகைகள், இனிப்புகள் உண்ணும்போது கூச்சம் அதிகமாகிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும்?
பற்களின் மேல் பகுதி எனாமல் எனப்படும். இந்த எனாமல் தேய்ந்து பற்களின் உள்பகுதி வெளியே தெரியும்பொழுது பல் கூச்சம் ஏற்படுகின்றது. இதற்கு மிக அழுத்தமாக பல் தேய்ப்பது, குளிர் பானங்கள் அதிகமாக குடிப்பது, பல் கடிப்பது போன்ற பல காரணங்கள் உள்ளன. சிலருக்கு வயதாகும்போது இயற்கையாகவே எனாமல் தேய்ந்து பல் கூச்சம் வரும். இதற்கு முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பற்பசை மற்றும் 'கிரீம்'கள் உபயோகிப்பது தற்காலிகமான பலன் தரும். பற்சிதைவுக்கேற்ப பல் அடைத்தல், வேர் சிகிச்சை செய்து பல்லுக்கு 'கேப்' போட வேண்டும். ஈறு நோயால் கூச்சம் வந்திருந்தால் ஈறுகளை பலப்படுத்தும் சிகிச்சை செய்ய வேண்டும். கவனிக்காமல் விட்டால் வலி மற்றும் வீக்கம் வரும் வாய்ப்பு உள்ளது. ஆரம்ப நிலையிலே இதற்கு சிகிச்சை எடுத்து கொள்வது நல்லது.
என் பற்களில் சிலவற்றை சொத்தை காரணமாக எடுத்துப் பல வருடங்கள் ஆகின்றன. இப்போது நிலையான பல் கட்டுவதற்கும் 'இம்ப்ளான்ட்' பொருத்துவதற்கும் தேவையான அளவு தாடை எலும்பு இல்லை. தாடை எலும்பு வளர்வதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிடலாமா அல்லது வேறு ஏதாவது வழி உள்ளதா?
பொதுவாக பற்களின் வேர்கள் தாடை எலும்பு தேயாமல் கெட்டியாக பிடித்துக் கொள்ளும். பற்கள் விழுந்தோ அல்லது அகற்றியோ பல் இல்லாத இடத்தில் எலும்பு மெதுவாக தேய ஆரம்பிக்கும். நாளடைவில் பற்கள் இல்லாத இடத்தில் மட்டும் எலும்பு மிகக் குறைந்த அளவே காணப்படும். அப்படி கட்டாமல் விட்டு எலும்பு தேய்ந்து போனவர்களுக்கும் இன்றைய நவீன சிகிச்சை முறையில் கண்டிப்பாக நிலையான பல் கட்டலாம்.
முன்பெல்லாம் எலும்பு இல்லாவிட்டால் நிலையான பற்கள் கட்ட முடியாமல் கழட்டி மாட்டும் பல் செட் கட்டுவதே சிகிச்சை முறையாக இருந்தது. ஆனால் இப்போது 'க்ராப்டிங்' என்னும் சிகிச்சை முறையின் மூலம் எலும்பு இல்லாத இடங்களில் செயற்கை முறையில் எலும்பை உண்டாக்க முடியும். அதற்குப்பின் அந்த இடத்தில் நிலையான பல் கட்டுவது சுலபம். எனவே பெரிய அறுவை சிகிச்சை எதுவும் இல்லாமல் இந்த சிகிச்சையை செய்து இயற்கை பற்களைப் போல் நிலையான பற்களை பெறலாம்.
எனக்கு வயது 42. எனது பல் வரிசை சீராக இல்லை. ஈறுகள் வீக்கமாக உள்ளன. அவ்வப்போது தாடையில் வலியும் வருகிறது. இந்த வயதில் பல் சீரமைப்பு சிகிச்சை செய்து கொள்ள முடியுமா?
பல் சீரமைப்பு சிகிச்சை அனைத்து வயதினருக்கும் செய்யகூடிய சிகிச்சை முறையாகும். பல் வரிசையை சீராக்குதல் பார்வைக்காக மட்டும் அல்லாமல் ஆரோக்கியமான ஈறுகள் மற்றும் நன்றாக உணவு உண்பதற்கும் அவசியமான ஒன்று. பல் வரிசை சீராக இல்லையெனில் பற்களை சரியாக சுத்தம் செய்ய முடியாது. பல் சொத்தை மற்றும் ஈறு நோய்கள் வர வாய்ப்பு அதிகம். கோணலான பற்களால் சரியாக கடிக்க முடியாது. இதனால் தாடை எலும்பில் வலி வரக்கூடும். இத்தகைய பிரச்னைகளை தவிர்க்க அனைத்து வயதினரும் பல் சீரமைப்பு சிகிச்சை செய்து கொள்ளலாம். பற்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது.
எனக்கு சில வருடங்களாக ரத்தக்கொதிப்பு உள்ளது. நான் பல் சிகிச்சை செய்து கொள்ளலாமா?
தாராளமாக பல் சிகிச்சை செய்யலாம். ஆனால் சில பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். சிகிச்சை நாளன்று காலையில் வழக்கமாக சாப்பிடும் மாத்திரைகள் அனைத்தையும் சாப்பிட வேண்டும். காலை உணவு உட்கொள்ள வேண்டும்.
சிகிச்சைக்கு முன் ரத்த அழுத்தத்தை பரிசோதிக்க வேண்டும். ஒரே நாளில் அனைத்து சிகிச்சையும் செய்யக் கூடாது. ஏனெனில் நீண்ட நேரம் சிகிச்சை பெரும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். எனவே இரண்டு அல்லது மூன்று நாட்களாக பிரித்து செய்யலாம். அதே போல் பல் எடுத்ததும் அவ்விடத்தில் ரத்தக்கசிவு முற்றிலும் நின்றுவிட்டதை உறுதிப்படுத்த வேண்டும்.
- ஜெ. கண்ணபெருமான், பல் மருத்துவர் மதுரை, 94441 54551
