PUBLISHED ON : ஆக 17, 2016

கேஸ்ட்ரைடிஸ் என்றால் என்ன?
இரைப்பையின் சுவரிலுள்ள உட்தோலின் அழற்சியையே கேஸ்ட்ரைடிஸ் என்கிறோம்.
இரைப்பை அழற்சியினால் என்னென்ன பிரச்னைகள் வரும்?
பசி இருக்காது, சிறிது உணவு உண்டாலே நிறைய சாப்பிட்டது போலிருக்கும். குமட்டல், வாந்தி, ஏப்பம், வயிற்று உப்புசம் ஏற்படும்.
நீண்ட நாள் இரைப்பை அழற்சி எதனால் ஏற்படுகிறது?
ஹெலிக்கோ பாக்டர் பைலோரி எனும் பாக்டீரியா தொற்று, இரைப்பைச் சுவரை பாதிக்கிறது. மேலும், தேவையற்ற மருந்துகள் உட்கொள்வதாலும், உடலின் நோயெதிர்ப்பு செல்கள் உடல் செல்களைத் தாக்குவதாலும் நீண்ட நாள் இரைப்பை அழற்சி ஏற்படுகிறது.
தற்காலிக இரைப்பை அழற்சி பாதிப்பால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?
சில நேரம் ரத்த கசிவு ஏற்பட்டு ரத்த வாந்தி மற்றும் மலத்தில் கருப்பு நிறத்தில் ரத்தம் வருதல் போன்றவை ஏற்படும். உணவு ஜீரணமாவதில் சிக்கல் ஏற்படும்.
இரைப்பை அழற்சி இருக்கிறது என்பதை எவ்வாறு கண்டறிவது?
பேரியம் எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன், எண்டோஸ்கோப்பி பரிசோதனைகளின் மூலம்கண்டறியலாம்.
இரைப்பையின் பிரச்னைகளை துல்லியமாக அறிய எண்டோஸ் கோப்பி உதவும் என்கிறார்களே?
நிச்சயமாக. இதில் இரைப்பையின் உட்தோல் பாதிக்கப்பட்டிருக்கிறதா, ரத்த குழாய்களில் மாற்றங்கள் இருக்கிறதா, இரைப்பை எந்தப்பக்கம் பாதிக்கப்பட்டு இருக்கிறதுஅல்லது இரைப்பை முழுவதும் அழற்சியினால் பாதிக்கப்பட்டு இருக்கிறதா என, துல்லியமாக இப்பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இரைப்பை அழற்சியினால் ரத்தசோகை ஏற்படும் என்கிறார்களே?
இப்பாதிப்பால் இரைப்பை சுவர் முழுவதும் பாதிக்கப்பட்டு மெலிதாகிவிடும். இதனால் இரைப்பையில் இருக்க வேண்டிய அமிலம் சரியான அளவில் இருக்காது. இந்த அமிலம் குறைவதால் சாப்பிடும் உணவிலிருந்து இரும்புச்சத்தை உடல் எடுத்துக் கொள்ளாது இதனால் பி12 சத்து குறைபாடு ஏற்பட்டு ரத்தசோகை அதித களைப்பு போன்றவை ஏற்படும்.
மனஅழுத்தம் காரணமாக கூட இரைப்பை பாதிப்புகள் வருமா?
மன அழுத்தம் காரணமாக இரைப்பையின் உட்புற தோலுக்கு ரத்த ஓட்டம் குறையும் போது இரைப்பை அழற்சி ஏற்படுகிறது. அதுமட்டுமல்ல மூளையில் ஏதேனும் பாதிப்பு உண்டானவர்களுக்கும் இரைப்பை அழற்சி ஏற்படும்.
எவ்வகை மாத்திரைகள் இரைப்பை பாதிப்பை ஏற்படுத்துகின்றன?
ஆஸ்பிரின், இரும்புச் சத்து மாத்திரைகள், பொட்டாசியம் மாத்திரைகள், வலி நிவாரணிகள் முக்கியமாக மது அருந்துவது போன்ற காரணங்களால், இரைப்பை அதிகமாக பாதிக்கப்படுகிறது.
இரைப்பை அழற்சியை எப்படி தடுப்பது சிகிச்சைகள் என்ன?
தேவையில்லாத மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைகள் இல்லாமல் எடுக்கக்கூடாது. மது பழக்கத்தை கைவிட வேண்டும். அதிக காரணம் நிறைந்த உணவுகள் கார்பனெட்டட் பானங்களை தவிர்க்க வேண்டும். மன அழுத்தம் ஏற்படாதவாறு மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். வெளி இடங்களில் அதிகளவு உணவு உண்பதை தவிர்க்க வேண்டும். துரித உணவுகளை உண்ணக்கூடாது. இவற்றை பின்பற்றினாலே இரைப்பை பாதிப்பை தடுக்கலாம். சிகிச்சை முறைகளை இரைப்பை எந்தளவு எதனால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை பொறுத்தே மருத்துவர் தீர்மானிப்பார்.
98402 43833
