PUBLISHED ON : ஆக 24, 2016

விபத்தின்போது ஏற்படும் தலைக் காயம் ஆபத்தானது. ஆனால், இரண்டாவது தலைக் காயம் என்பது உயிரைப் பறித்துவிடும். இரண்டாவது தலைக் காயம் என்பது என்ன?
இது தலையில் ஏற்படும் இன்னொரு காயம் கிடையாது. விபத்தின்போது தலையில் பலமாக அடிபட்ட அடுத்த சில நிமிடங்களில், மூளையில் ஏற்படும் வேதியியல் மற்றும் உயிரி வேதியியல் (Bio Chemical) மாற்றங்கள் தான் இரண்டாவது தலைக் காயம்.
இரண்டாவது தலைக் காயம் உண்டாகக் காரணம் என்ன?
சுவாசப் பாதை அடைபடுதல், காயங்களில் இருந்து அதிக அளவு ரத்தம் வெளியேறுவது, வாந்தி எடுப்பதால் நுரையீரல் அடைத்துக் கொள்வது போன்றவை.
இரண்டாவது தலைக் காயம் ஏற்படுவது எந்த அளவு ஆபத்தானது?
விபத்தின்போது தலையில் அடிபட்டால், பொதுவாக சுயநினைவை இழக்கும் நபர்களின் மூளைக்கு ஆக்சிஜன் செல்வது தடைபடும். அதிகபட்சம் ஐந்து நிமிடங்களுக்குள் மருத்துவ உதவி கிடைக்காவிட்டால் உயிருக்கு ஆபத்தாக முடியும்.
இரண்டாவது தலைக் காயம் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
விபத்து நடக்கும் இடத்தில் இருப்பவர் யாராக இருந்தாலும், அந்த வினாடியே ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதுதான் உடனடியாக செய்ய வேண்டியது.
ஆம்புலன்ஸ் வருவதற்கு காத்திருக்கும் நேரத்தில்செய்ய வேண்டியது என்ன?
அடிபட்டவரின் நிலையை, அதாவது, சீராக மூச்சு விடுகிறாரா, ரத்தம் எந்த அளவிற்கு வெளியேறுகிறது போன்றவற்றை கவனித்து, அதற்கு ஏற்ப செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம்.
அடிபட்டவர் மயக்க நிலையில் இருந்தால் செய்ய வேண்டியது என்ன?
முதலில் அவரின் சுவாசத்தைப் பரிசோதிக்க வேண்டும். அடிபட்டவரின் நாக்கு உள்ளே மடங்கி சுவாசப் பாதையை அடைத்து, நுரையீரலுக்குச் செல்லும் ஆக்சிஜனைத் தடுத்துவிடும். இதனால், மூளை பாதிப்படையும் நிலை உண்டாகும். இதைத் தடுக்க, தலையைப் பின்னோக்கிச் சாய்த்து தாடையை உயர்த்த வேண்டும்.
ரத்தம் வெளியேறுவதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
ரத்தம் அதிகமாக வெளியேறினால், ரத்த அழுத்தம் குறைந்து மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதைத் தடுக்க, சுத்தமான துணியால் ரத்தம் வெளியேறும் இடத்தில் அழுத்தமாகவும், இறுக்கமாகவும் கட்டுப் போட வேண்டும்.
சுய நினைவு இல்லாமல் இருக்கும்பட்சத்தில் செய்ய வேண்டியது என்ன?
சுய நினைவு இல்லாமல் இருந்தால், குறிப்பாக குடி போதையில் இருப்பவர், வாந்தி எடுக்கக் கூடும். இந்த வாந்தி, நுரையீரலில் நுழைந்து சுவாசப் பாதையை அடைத்து மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனைத் தடுக்கும். இதைத் தடுக்க, அடிபட்டவரை பக்கவாட்டில் தலை கீழே இருக்குமாறு படுக்க வைக்க வேண்டும்.
இரண்டாவது தலைக் காயத்தைத் தடுக்க என்ன வழி?
தலைக் காயத்திற்கு மருந்து, தலையில் காயம் வராமல் தடுப்பது ஒன்று தான் ஒரே வழி.
பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?
இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், பின்னால் அமர்ந்திருப்பவர்கள் தலைக்கவசம் அணிவது, காரில் செல்பவர்கள் பெல்ட் அணிந்து கொள்வது, மது அருந்திவிட்டு வண்டி ஓட்டாமல் இருப்பது, சாலை விதிகளை மதிப்பது என, நடைமுறையில் நமக்கு தெரிந்த விதிகளை அலட்சியம் செய்யாமல் இருப்பது தான் பாதுகாப்பு. வருமுன் காப்பது, உங்களைக் காக்கும்.
டாக்டர் ஆர்.ஆர்.ரவி
மூளை, தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்,
கே.ஜி.மருத்துவமனை, கோவை
0422 221 21 21, 0422 2219192
