PUBLISHED ON : ஆக 24, 2016

என்னை தொலைபேசியில் அழைத்த அந்தப் பெண், 'நான் சரியாக நடந்து கொள்கிறேனா என்று தெரிய வேண்டும்' என்றார்; நேரில் வரச் சொன்னேன். அந்தப் பெண்ணை நேரில் பார்த்த போது சற்று, வியப்பாகவே இருந்தது. பெண்களை அதிகம் வெளியில் அனுப்பாத, ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவைச் சேர்ந்தவர் அவர். தன்னிடம் ஏதோ ஒரு தவறு இருக்கிறது என்று யோசித்து, அதை சரி செய்ய முன் வந்திருப்பதே பெரிய விஷயமாகப் பட்டது.
அவர் பெயர் பிரியா, 30 வயது. திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது. கணவர், குடும்பம் பற்றிச் சொன்னார். கணவர், அவரது பெற்றோருக்கு ஒரே பிள்ளை. டிகிரி தான் படித்திருக்கிறார். அவருக்கு, தாழ்வு மனப்பான்மை அதிகம். குழந்தை பிறந்த பின் அவர்களுக்குள் நெருக்கம் குறைந்துவிட்டது; கடந்த, 2 ஆண்டுகளாக தாம்பத்திய உறவே கிடையாது. கணவருக்கு யாருடனும் பழகத் தெரியாது; முன்கோபி' என, கணவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போனார். சரி, 'பிரியாவை பற்றியும் எனக்குத் தெரியணுமே' என்றேன். 'மறைக்காமல் சொல்றேன் மேடம் என்று சிரித்தவர், தன்னைப் பற்றி சொன்னார். 'நான், எம்.பி.ஏ., படித்தவள்; கொஞ்சம் முன்கோபி. என் கணவரை, கடினமான வார்த்தைகளால் அடிக்கடி திட்டுவேன். அதன்பிறகு, இப்படி பேசிட்டேனே என்று குற்ற உணர்வாக இருக்கும். கூச்ச சுபாவம் அதிகம் என்பதால் யாருடனும் மனம் விட்டுப் பழகமாட்டேன்; நிரந்தர தோழிகள் யாரும் எனக்குக் கிடையாது. கோபம், மகிழ்ச்சி, அழுகை, என்று எந்த உணர்வையும் என்னால் சரியாக கையாளத் தெரியாது. திருமண வாழ்க்கையில் நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது' என்றார். கணவரைப் பற்றியும் தன்னைப் பற்றியும் அவர்சொல்லியதில் இருந்தே தவறு யார் மேல் இருக்கிறது என்பது எனக்கு புரிந்தது. பிரியாவுக்கு, தன் மேல் சுய மரியாதை குறைவாக இருப்பதை அவர் பேச்சிலேயே உணர்ந்து கொள்ள முடிந்தது. தன்னால் இதை செய்ய முடியுமா என்ற சந்தேகம் இருப்பதால், யாருடனும் சகஜமாக பழக முடிவதில்லை. மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த ஒப்பீடு செய்யும் தன்மை தான் தன்னை விட எந்தெந்த விஷயங்களில் எல்லாம் கணவர் குறைவாக உள்ளார் என்று பார்க்கத் துாண்டி, அவரோடு நெருங்கவிடாமல் செய்துள்ளது. அவருடைய நடை, உடை, பழக்க வழக்கங்கள், உறவுகளை மேம்படுத்திக் கொள்ளும் திறன் போன்றவற்றை, Cognitive behaviour therapy (CBT) மூலம் சரி செய்தேன். கணவருடன் நட்புடன் பழகக் கற்றுக் கொடுத்தேன். 'ஒரு நண்பருடன் பேசுவது போல பேசிப் பழகு' என்றவுடன், 'எப்படி, கணவருடன் நட்பாகப் பழகுவது?' என்ற கேள்வி தான் வந்தது. அவருக்கு சாப்பாடு பரிமாறு, தேவைகளை கவனித்து செய் என்ற போது, 'நான் ஏன் சாப்பாடு போடணும்? என்று அதிர வைத்தார். உறவின் முக்கியத்துவத்தை மெல்ல புரிய வைத்த போது, குற்ற உணர்வு அவரிடமிருந்து விலகி, 'நான் ஏன் இத்தனை நாட்களாக இப்படி நடந்து கொண்டேன்? என்று அழுதார். அவருடைய எண்ணங்கள் மாறியதைத் தொடர்ந்து உணர்வுகளும் மாறின; அவர் நடவடிக்கைகளில் பெரிய மாற்றம் வந்தது. சில
மாதங்களிலேயே, கணவருக்கும் தனக்குமான உறவு இயல்பாக இருப்பதாகச் சொன்னார்.
ரமா தீனதயாள்
மனநல ஆலோசகர்
97911 32431
