PUBLISHED ON : ஆக 24, 2016

ஜூலை 17, 2016
மூன்று வயது குழந்தை ஜெசிகாவை பார்த்த நிமிடம், எனக்குள் ஒரு பயம் வந்தது. காரணம், அவள் வந்த சூழல் அப்படி. அன்று, அவள் வீட்டிற்கு வந்த விருந்தினர்கள், கூல்டிரிங்சை குடித்துவிட்டு, காலி பாட்டில்களை நாற்காலிக்கு அருகே வைத்துவிட்டிருக்கின்றனர். இதை கவனித்த ஜெசிகா, பாட்டில் ஒன்றை வெளியே எடுத்து வந்து விளையாட ஆரம்பித்திருக்கிறாள். எதிர்பாராத நேரத்தில் ஜெசிகாவின் அழுகுரல் கேட்கவே, அனைவரும் வெளியே ஓடிவந்து பார்த்த போதுதான் நடந்த விபரீதம் புரிந்திருக்கிறது. விளையாடிக் கொண்டிருக்கையில் கீழே விழுந்து நொறுங்கியிருக்கிறது பாட்டில். அதன் மேல் ஜெசிகா தவறி விழுந்திருக்கிறாள். விழுந்த வேகத்தில், பாட்டிலின் உடைந்த கூர்மையான பகுதி குத்தியதால், இடதுபக்க மார்புக்கூடு கிழிந்து, நுரையீரல் வெளியே வர ஆரம்பித்திருந்தது. நம் உடலின் உள்ளே எதிர்மறையான காற்றழுத்தமும், சுற்றுச்சூழலில் நேர்மறையான காற்றழுத்தமும் இருக்கும். இது போன்ற நிலையில் வெளியில் உள்ள நேர்மறையான காற்றழுத்தம், நுரையீரலின் உள்ளே செல்ல செல்ல, இதயம் தன் நிலையிலிருந்து இடம் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உடனே, அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றதும் அங்கே முதலுதவி செய்து, எங்களிடம் அனுப்பினர். கண்ணாடி சில்லுகள், நுரையீரலைத் தாண்டி இதயத்தின் ஒரு பகுதியான பெரிகார்டியத்தையும் பாதித்திருந்தது. குழந்தைக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்தது. உடனே அறுவை சிகிச்சை செய்து பெரிகார்டியத்திலும், நுரையீரலிலும் இருந்த சிதைந்த கண்ணாடிச் சில்லுகளை அகற்றியதோடு, கிழிபட்ட மார்புக்கூட்டை இணைத்தோம். ஜெசிகா மூன்றாவது நாள் வீட்டிற்கு சென்றுவிட்டாள். ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டாள். உடைந்த கண்ணாடித் துகள்கள் மேலும், 2 மி.மீ., இதயத்தின் உள்ளே துளைத்திருந்தால் கூட, பெற்றவர்களின் கண்முன்னே குழந்தை மரணத்தை தழுவி இருப்பாள். ஜெசிகாவின் விஷயம் நமக்கு கற்று தரும் பாடம், பாதுகாப்பற்ற பொருட்களை வைத்து விளையாட குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது என்பது தான். அதோடு, வீட்டில் தினமும் பெரியவர்கள் பயன்படுத்தும் மாத்திரைகளை, குழந்தைகள் கைகளுக்கு எட்டாத இடங்களில் வைக்க வேண்டும். காரணம், அவற்றை சாக்லேட் என நினைத்து சாப்பிட்டு, குழந்தைகள் உயிருக்கு ஆபத்தாக முடிந்த சில சம்பவங்களும் உண்டு. அதே போன்று, பாத்ரூம் கிளீனர் உட்பட கெமிக்கல்களையும் குழந்தைகளின் கைகளுக்கு எட்டாதவாறு வைக்கவேண்டும். குளிர்பானம் என நினைத்து அவர்கள் குடித்துவிட்டால், உயிருக்கே ஆபத்தாக முடியும். எல்லா பொருட்களுமே குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கோவினி பாலசுப்ரமணி
இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர். சென்னை
94449 32999
