PUBLISHED ON : ஜூலை 01, 2015

01. எது வலிப்பு நோய்?
ஒருவருக்கு வலிப்பு வரும்போது, கையும் காலும் வெட்டி வெட்டி இழுக்கும். வாயில் நுரை தள்ளும். கண்கள் மேலே சுழன்று, நாக்கு, பற்களுக்கிடையில் சிக்கி, கடிபட்டு, வாயிலிருந்து ரத்தம் வழிந்து, சுயநினைவை இழந்து தரையில் கிடப்பார். சில நிமிடங்களில் இது சரியாகி, பாதிக்கப்பட்டவர் கொஞ்சம் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார். இதற்கு பெயர் வலிப்பு. ஒருவருக்கு இரண்டு முறைக்கு மேல் வலிப்பு வந்திருக்குமானால், அவருக்கு வலிப்பு நோய் இருப்பதாக கொள்ள வேண்டும்.
02. எப்படி ஏற்படுகிறது?
மூளை மற்றும் நரம்பு செல்களில், தகவல் பரிமாற்றம் செய்வதற்கு அந்த செல்களுக்கிடையே, இயல்பாகவே மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் மூளையில் உண்டாகும் அதீத அழுத்தத்தால், இந்த மின்சாரம் அபரிமிதமாக உற்பத்தியாகி, ஒரு மின்புயல் போல் கிளம்புகிறது. அது நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு, கை, கால்கள் உதறத் துவங்குகின்றன. அது தான் வலிப்பு.
03. என்ன காரணம்?
தலையில் அடிபடுதல், பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடு, மூளையில் கட்டி, ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல், கிருமி தொற்று, புழுத் தொல்லை, மூளை காய்ச்சல், மூளை உறை அழற்சி காய்ச்சல், டெட்டனஸ் போன்றவை வலிப்பு வருவதற்கு முக்கியமான காரணங்கள். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள் போன்றவையும் வலிப்பு வருவதைத் தூண்டக் கூடியவையே.
04. இவை தவிர வேறு காரணங்கள் உள்ளனவா?
பரம்பரையாகவும் வலிப்பு வரலாம். கர்ப்பிணிகளுக்கு ரத்தக்கொதிப்பு இருந்தால், பிரசவ காலத்தில் வலிப்பு வரலாம். பக்கவாதம், மூளையில் ஏற்படும் ரத்தக் குழாய் மாற்றங்கள், 'அல்சைமர்' நோய், ரத்தத்தில் தட்டணுக்கள், சோடியம் அளவு குறைதல் போன்ற காரணங்களால், வயதானோருக்கு வலிப்பு ஏற்படக் கூடும்.
05. குழந்தைகளுக்கு வலிப்பு வருமா?
பிறக்கும்போது ஏற்படும் ஆக்சிஜன் குறைபாடுகள், குறைப் பிரசவம், பிரசவ காலத் தொற்றுநோய்கள், பிரசவத்தின்போது தலையில் அடிபடுதல் போன்றவற்றால், குழந்தைகளுக்கு வலிப்பு வருகிறது. குழந்தைகளுக்கு காய்ச்சல் காரணமாக வலிப்பு வருவது தான் அதிகம்.
06. தொடர்ந்து வலிப்பு நோய் வருமா என கண்டறிய பரிசோதனைகள் உள்ளனவா?
சில அடிப்படை ரத்தப் பரிசோதனைகளோடு மூளையின் மின்னோட்டத்தை அளவிடும், 'ஈ.ஈ.ஜி., வீடியோ ஈ.ஈ.ஜி., சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன், பெட் ஸ்கேன், ஸ்பெக்ட் ஸ்கேன்' முதலியவற்றைச் செய்து, காரணத்தை அறிந்து, வலிப்பின் வகை தெரிந்து, சிகிச்சை பெற வேண்டும்.
07. சிகிச்சைகள் என்ன?
இன்றைய நவீன மருத்துவத்தில் வலிப்பைக் குறைக்கவும், மீண்டும் வராமல் தடுக்கவும், நிறைய மாத்திரைகள் உள்ளன.
08. வலிப்பு நோய்க்கான மருந்தை, வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டுமா?
அவ்வாறு அஞ்ச தேவையில்லை. மருந்து சாப்பிட துவங்கி, மூன்று ஆண்டுகள் வரை வலிப்பு வரவில்லை என்றால், சிறிது சிறிதாக குறைத்து, நிறுத்திவிடலாம். மாத்திரைகளை நேரம் தவறி உட்கொள்வதோ, விட்டுவிட்டுச் சாப்பிடுவதோ, உடனடியாக நிறுத்துவதோ கூடாது. இதுதான் முக்கியம்.
09. அறுவை சிகிச்சை பலனளிக்குமா?
மூன்று முதல் ஐந்து சதவீத நோயாளிகளுக்கு மட்டும், மருந்துகள் பலன் அளிப்பதில்லை. அவர்களுக்கு, 'எம்.ஆர்.ஐ., ஸ்கேன், பெட் ஸ்கேன்' மூலம் மூளையில் எந்த இடத்தில் வலிப்பு நோய் துவங்குகிறது என்று கண்டுபிடித்து, அந்த இடத்தில் உள்ள திசுவை மட்டும் அகற்றும் 'மைக்ரோ' அறுவை சிகிச்சை, தற்போது நடைமுறையில் உள்ளது. இதன் மூலம், வலிப்பு நோயிலிருந்து அவர்கள் முற்றிலும் விடுபட முடியும்.
10. குழந்தைகளுக்கு வலிப்பு வராமல் தடுப்பது எப்படி?
குழந்தைக்குக் காய்ச்சல் வராமல் பார்த்துக் கொள்வது; காய்ச்சல் வந்தால் உடனடியாகக் காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகளைக் கொடுப்பது; காய்ச்சல் கண்ட குழந்தையின் உடலில், ஈரத் துணியால் ஒத்தடம் கொடுப்பது; வலிப்பு மருந்துகளைத் தொடர்ந்து கொடுத்து கண்காணிப்பதன் மூலம், குழந்தைக்கு மீண்டும் வலிப்பு வருவதைத் தவிர்த்து விடலாம்.
- அருணன்,
நரம்பியல் நிபுணர், பேராசிரியர்.
அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், சென்னை
99411 04391

