PUBLISHED ON : அக் 07, 2015

1 உடல் பருமன் எதனால் அதிகரிக்கிறது?
தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதால், கட்டாயம் உடல் எடை கூடும். நேரம் தவறி சாப்பிடும் போதும், உடலுக்கு ஒவ்வாத உணவை சாப்பிடும் போதும் எடை கூடும்.
2 உடலுக்கு ஒவ்வாத உணவு முறை என்றால் என்ன?
பொதுவாக, ஒவ்வொரு நாட்டிலும், அந்தந்த நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றபடியே, உணவு முறைகள் உள்ளன. உதாரணமாக, குளிர் பிரதேசங்களில், உடலின் வெப்ப நிலையை பராமரிக்க, அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த ஆற்றல், உணவுகளிலிருந்துதான் பெறப்படுகிறது. அசைவ உணவுகளில், அதிக புரதம் மற்றும் கொழுப்பு சக்தி உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, அரிசி, கோதுமை மற்றும் சிறுதானிய உணவுகளோடு கூடிய காய், கனிகளிலிருந்து கிடைக்கும் ஆற்றல் போதுமானது. எனவே, இங்குள்ள சூழலில், அசைவ உணவு சாப்பிடும் போது, அதிலிருந்து கிடைக்கும் ஆற்றல், கொழுப்பாக உடலில் சேர்கிறது. இதுவே, உடலுக்கு ஒவ்வாத உணவு முறை.
3 அப்படியென்றால், அசைவ உணவை உண்ணவே கூடாதா?
அசைவ உணவுகளில் இருந்து, உடலுக்கு கிடைக்கும் ஆற்றல் மிக அதிகம். எனவே, அசைவ உணவை சாப்பிடும்போது, வழக்கமான உணவை பாதியாக குறைக்க வேண்டும். ஒருவேளை ஆசைக்காக சாப்பிட்டால், மூன்று அல்லது நான்கு மணிநேரம் கழித்து, உடற்பயிற்சி செய்வது நல்லது.
4 உப்பின் அளவிற்கும், உடல் பருமனுக்கும் தொடர்பு உண்டா?
ஓரளவிற்கு தொடர்பு உண்டு. உடலில் அதிக அளவு உப்பு தேங்கியிருந்தால், தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்ளும். எனவே, உடல் பருமன் அதிகரிக்கும்.
5 சிலர், அதிகமாக அசைவ மற்றும் உப்பு மிக்க உணவை உட்கொண்டாலும், உடல் மெலிந்தே காணப்படுகின்றனர். இது எதனால்?
உணவு செரிமானம் ஆவதும், அதிலிருந்து ஆற்றலை பெறுவதும், அவ்வாற்றலை செவ்வனே செலவழிப்பது அல்லது கொழுப்பாக சேமித்து வைப்பதும், கொழுப்பில் சேமித்து வைத்த ஆற்றலை, தேவைப்படும் போது, மீண்டும் கரைத்து எடுத்துக் கொள்வதும், மரபணுக்களின் செயல்பாட்டைப் பொறுத்து அமைகிறது. மரபணுக்கள் கொழுப்பை கரைக்கும் பணியை, முழுமையாகச் செய்துவிடும். அதேபோல், உப்பு அளவுகோலை நிர்மாணிப்பதும் மரபணுக்களே. உடலின் தேவை போக, அதிகப்படியான உப்பை, சிறுநீரகம் வடிகட்டி, சிறுநீரில் கரைத்து வெளியேற்றிவிடும். மரபணு திறனைப் பொறுத்தே இந்த பணிகளும் அமைகின்றன.
6 உடல் பருமனுக்கும், பசியின் தன்மைக்கும் தொடர்பு உண்டா?
உடல்வாகைப் பொறுத்து, உடலுக்கு தேவையான உணவை உட்கொள்ள, பசி ஏற்படுகிறது. அரிதாக சிலருக்கு, பசியின் அளவுகோலை நிர்மாணிக்கும் மரபணுவில் குறைபாடு இருக்கும். இவர்களுக்கு பசியின் தன்மை, மிக அதிகமாக இருக்கும் என்பதால், அதிகமாக உண்பர்.
7 வயது அதிகரிக்க அதிகரிக்க உடல் எடை கூடுமா?
உடற்பயிற்சியின் அளவைப் பொறுத்து, உணவு முறையை அமைத்துக் கொண்டால், எந்த வயதிலும், உடல் எடை சீராக இருக்கும்.
8 மரபணு பரிசோதனைகள் உடல் பருமனைக் குறைக்க எவ்வாறு பயன்படும்?
ஒருவருடைய உடல் தன்மைக்கு ஏற்ப, இவ்வளவு கொழுப்பு சத்து, இவ்வளவு உப்பு, இவ்வளவு உடற்பயிற்சி தேவை என்பதை மரபணு பரிசோதனை மூலம் அறியலாம். அதை வைத்து, உடல் எடையை குறைப்பது எளிது.
9 மரபணு பரிசோதனை எவ்வளவு முக்கியம்?
வாழ்வுமுறை சார்ந்த நோய்களான நீரிழிவு மற்றும் இதயக் கோளாறு போன்றவை, அதிக உடல் எடை கொண்டோரை, எளிதாக தாக்கும் என்பதால், இந்த மரபணு பரிசோதனை முக்கியம் என கூறலாம்.
10 மரபணு பரிசோதனை எங்கு செய்யலாம்? எவ்வளவு செலவாகும்? எவ்வளவு நாளாகும்?
மரபணு பரிசோதனையை சென்னையிலேயே செய்துகொள்ளலாம். 3,000 முதல் 4,000 ரூபாய் வரை ஆகலாம். மூன்று நாட்களுக்குள் பரிசோதனை முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

