PUBLISHED ON : ஆக 03, 2016

கொப்புளங்கள் என்றால் என்ன?
சருமத்தில் ஏற்படும் பாதிப்பினாலோ, உடலின் உள்ளே ஏற்படும் சில நோய்களினாலோ தோலின் மேல் ஏற்படும் சீழ், ரத்தம், சீரஸ்(நீர்) நிறைந்த கட்டிகளை கொப்புளங்கள் என்கிறோம்.
கொப்புளங்கள் வரக்காரணம் என்ன?
பிறக்கும் போதே கூட, சில குழந்தைகளுக்கு உடம்பில் கொப்புளங்கள் இருக்கும். தீக்காயங்கள், பொருந்தாத காலணிகள் அணிவது, பூச்சி கடி, கொசுக்கடி, சோப், டிடர்ஜென்ட், அழகு சாதனப் பொருட்களால் கூட கொப்புளங்கள் வரலாம்.
அடிக்கடி கொப்புளங்கள் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
நீரிழிவு, புற்றுநோய், எய்ட்ஸ் உள்ளதா என்று தெரிந்து, அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடலில் எங்கெங்கு கொப்புளங்கள் வரலாம்?
சிலருக்கு கை, வாய் என, உடம்பில் ஏதாவது ஒரு பகுதியில் மட்டும் வரலாம். ஒரே நேரத்தில் உடம்பில் பல இடங்களில் கொப்புளங்கள் வந்தால், அது தீவிர பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்.
தீக்காயங்களால் ஏற்படும் கொப்புளங்களுக்கு தீர்வு என்ன?
உடலில் எந்த இடம், எவ்வளவு பெரிய காயம் என்பதை பொறுத்து, சிகிச்சை அமையும். தீக்காயத்தினால் பாதிக்கப்பட்டவர், அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் உடல் சீரமைப்பு நிபுணரின் ஆலோசனை மூலம் சிகிச்சை பெற்றால், தீர்வு உண்டு.
குடும்பத்தில் ஒருவருக்கு கொப்புளங்கள் இருந்தால், மற்றவருக்கு பரவுமா?
வாய்ப்புகள் அதிகம். கொப்புளங்களில் உள்ள தொற்று நீர், மற்றவர்கள் மீது படும்பொழுது வீட்டில் மட்டுமல்ல; பள்ளிகளில் ஒரு குழந்தைக்கு கொப்புளங்கள் இருந்தால், நெருங்கிப் பழகும் மற்ற குழந்தைகளுக்கும் வரலாம்.
எவ்வகை நோய் தொற்றுகளால் கொப்புளங்கள் வரும்?
சின்னம்மை, சொறி, சிரங்கு, ஸ்கேபிஸ் எனும் சருமநோய், புற்றுநோய், அக்கி என்று எந்த நோய் பாதிப்பு வந்தாலும், கொப்புளங்கள் வரலாம். அக்கி காரணமாக கொப்புளங்கள் வந்தால், கடுமையான வலி இருப்பதோடு, குணமடைய இரண்டு வாரங்கள் ஆகும்.
நீரிழிவு நோயால் பாதித்தவர்களுக்கு கொப்புளங்கள் ஏற்படுமா?
நீரிழிவினால் ஏற்படும் கொப்புளங்களைத் தடுக்க, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பான காலணியை அணிய வேண்டும்.
தடுப்பது எப்படி?
சுய சுகாதாரம் முக்கியம். தவிர, பூச்சி கடிக்காமல் கவனமாக இருப்பது, ரசாயனப் பொருட்களை பயன்படுத்தும்போது, கையுறைகளை அணிந்து கொள்வது, குறிப்பிட்ட மருந்துகளால் ஒவ்வாமை ஏற்பட்டால், அதை தவிர்ப்பது நல்லது.
சிகிச்சைகள் என்னென்ன?
சில கொப்புளங்கள் தானாகவே சரியாகிவிடும் என்பதால், மருந்துகள் தேவைப்படாது. சீழ்கோர்த்துள்ள கொப்புளங்களுக்கு கட்டாயம் மருத்துவரின் அறிவுரைப்படி, ஆன்டிபயாடிக் மருந்தை பயன்படுத்த வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு, உடலில் கொப்புளங்கள் சிறிதாக தென்படும் போதே, மருத்துவரை அணுக வேண்டும்.
கே. ஆர். விஜய் சக்ரவர்த்தி
பொதுநல மருத்துவர்,
அப்பல்லோ மருத்துவமனை, வளசரவாக்கம்,
சென்னை.
97513 10211
