PUBLISHED ON : டிச 21, 2016

1. பெண்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் எவை?
அதிக உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், புகை, மது பழக்கம், அதிக கொழுப்பு, மன அழுத்தம், இவை தவிர, சமீப காலத்தில் பெண்களுக்கு புகை, மது பழக்கம் அதிகமாகி உள்ளதால் இவையும், மாதவிடாய்க்கு பின் ஏற்படும் ஹார்மோன் கோளாறுகளும் காரணமாக உள்ளது.
2. உடல் பிரச்னைகள் தவிர வேறு காரணங்கள் உள்ளதா?
பரம்பரையாக வரலாம். வயோதிகமும் ஒரு காரணம். வாழ்க்கை முறை மாற்றத்தினால் இளம் வயதினருக்கும் இதயநோய் சமீப காலத்தில் வருவது அதிகரித்து உள்ளது.
3. ரத்த அழுத்தம் இதயத்தை எப்படி பாதிக்கிறது?
ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, உடலில் உள்ள ரத்த நாளங்களில் வேறுபாடு நிகழ்கிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம், உடலின் முக்கிய நாளங்களில் வெடிப்பு, ஆகியவை நிகழ்கின்றன. இவை உயிருக்கு ஆபத்தாக முடியலாம்.
4. இதய கோளாறு அறிகுறிகள் ஆண்களிடமிருந்து மாறுபட்டதா?
மாரடைப்பிற்கான அறிகுறிகள் சிலசமயம் பெண்களிடம் மாறுபட்டு தெரியலாம். லேசான வலி, வயிறு தொடர்பான உபாதைகள் என்று இருக்கும். மார்பு அல்லது வயிறு தொடர்பான பிரச்னை என்று நினைத்து மருத்துவ ஆலோசனை பெறாமல் போகலாம்.
5. இதய கோளாறு இருந்தால் கர்ப்பம் தரிக்கலாமா?
இதயத்தில் எந்த மாதிரியான கோளாறு என்பதை முறையான மருத்துவ பரிசோதனையில் அறிந்து, மருத்துவரின் ஆலோசனையை இந்த விஷயத்தில் பின்பற்றுவது பாதுகாப்பானது.
6. இதய கோளாறு உள்ள பாலூட்டும் பெண்கள் செய்ய வேண்டியது என்ன?
ஒருசில மருந்துகள் சப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதுபற்றி அவர்களின் மருத்துவரிடம் முறையான ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
7. பெண்களுக்கான சிகிச்சை முறையில் வேறுபாடு உள்ளதா?
பெரிய வேறுபாடு எதுவும் கிடையாது. ஆண்களுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சை முறைதான் பெண்களுக்கும். ரத்த நாளங்கள் சிறியதாகவும் மெல்லியதாகவும் இருந்தால் சிகிச்சை வேறுபடும்.
8. இதய கோளாறு வருவதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
சர்க்கரை, கொழுப்பு, உப்பு மிகுந்த உணவை தவிர்க்க வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் தினமும் அரைமணி நேரம் நடைப் பயிற்சி அல்லது ஜாகிங் அல்லது நீச்சல் பயிற்சி செய்வதும் இதயத்திற்கு நல்லது மன அழுத்தம் இல்லாமல் இருப்பது மிகவும் அவசியம்.
9. எந்த வயதில் பெண்கள் இதய கோளாறுகளால் பாதிக்கப்படலாம்?
எந்த வயதிலும் பெண்களுக்கு இதய நோய்கள் வரலாம்.
10. பெண்களை மட்டும் பாதிக்கும் இதயப் பிரச்னைகள் என்ன?
கர்ப்ப காலங்களில் வரும் இதய நோய்கள்தான் பெண்களை மட்டும் பாதிப்பவை.
டாக்டர் கே.ஜெயந்தி, இதய நோய் சிறப்பு நிபுணர்,
சிம்ஸ், சென்னை
98400 95083
