தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/உறவு மேலாண்மை: பொறுப்புகளை ஏற்பதே கம்பீரம்

உறவு மேலாண்மை: பொறுப்புகளை ஏற்பதே கம்பீரம்

உறவு மேலாண்மை: பொறுப்புகளை ஏற்பதே கம்பீரம்


PUBLISHED ON : டிச 21, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 21, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இருபத்தியேழு வயது வருணுக்கு அவர் பெற்றோர், திருமணம் நிச்சயம் செய்தனர். நிச்சயம் செய்த ஓரிரு நாட்களிலேயே, 'எனக்கு இந்தத் திருமணம் வேண்டாம்' என, பெற்றோரை நச்சரிக்க ஆரம்பித்து விட்டார். பெற்றோர் தான் இவரை என்னிடம் அழைத்து வந்தனர். இந்த சமயத்தில் இன்னொருவர் என்னிடம் வந்தார். அவர் பெயர் ஹரீஷ். 30 வயது. ஐ.டி., துறையில் வேலை செய்கிறார்.

அவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகி சில நாட்களே ஆகியிருந்தது. அவரும் தனக்கு இந்தத் திருமணம் வேண்டாம் என, பிடிவாதமாக இருந்தார். இருவரும் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள். நிச்சயித்த திருமணம் நின்றால், தங்களின் குடும்ப கவுரவம் என்ன ஆவது என்ற பதற்றம் அவர்களுக்கு இருந்தது. இருவருக்கும் தனித்தனியாக கவுன்சிலிங் செஷன் ஆரம்பித்தேன். வருண் முதலில் என்னிடம் எதுவும் பேசவில்லை. 3வது செஷனில் தான், தனக்கு திருமணம் என்றாலே பயமாக இருக்கிறது; நிச்சயம் செய்த பின், எந்த வேலையிலும் தன்னால் கவனம் செலுத்த முடியவில்லை; துாங்க முடியவில்லை; பதற்றமாகவே உள்ளது என்றார். 'இந்த முடிவிற்கு நீங்கள் வர என்ன காரணம்? யாராவது ஏதாவது சொன்னார்களா' என, கேட்டபோது, 'ஆமாம், என் பக்கத்து வீட்டில் இருக்கும் நண்பர், 'திருமணம் என்றால் எல்லாரும் நினைப்பது போல மகிழ்ச்சியான விஷயம் இல்லை. நம்மால் சுதந்திரமாகவே இருக்க முடியாது. தினமும் ஏதாவது ஒரு பிரச்னை. நமக்கென்று ஒன்றும் இருக்காது. மனைவி, குழந்தைகளுக்காகவே வாழ வேண்டும்' என்று சொல்கிறார். என்னால் இத்தனை பொறுப்புகளை செய்ய முடியாது' என்றார். ஹரீஷிடம் தனியாகப் பேசியபோது, 'என்னைவிட குறைந்த சம்பளத்தில், சாதாரண பதவிகளில் இருப்பவர்களின் மனைவியர் எல்லாம் மிக அழகாக இருக்கின்றனர். எனக்கு சுமாரான பெண்ணை முடிவு செய்து என் வாழ்க்கையை வீணாக்கப் பார்க்கின்றனர். என் பெற்றோரின் விருப்பத்திற்காக நான் இவளோடு, 45 ஆண்டுகள் வாழ வேண்டுமா?' என, கேட்டார்.

இந்த இருவரின் மன நிலைக்கும், 'ரியாக்டிவ் டிப்ரஷன்' என்று பெயர். இருவருக்குமே நடத்தை மாற்று சிகிச்சை மூலம் திருமண வாழ்க்கை

குறித்த நேர்மறையான விஷயங்களைப் புரிய வைத்தேன். எப்படி தனி மனிதனாக இருக்கும்போது, பொறுப்புகளை ஏற்கிறோமோ, அதுபோலத்தான் திருமண பந்தத்திலும். புதிதாக ஒன்றும் இல்லை, என்பதை வருணுக்கும், அழகு என்பது நம் மனநிலையைப் பொறுத்தது. வெறும் வெளித் தோற்றம் மட்டுமே திருமண வாழ்க்கை இல்லை; பரஸ்பரம் அன்பு, புரிதல், விட்டுக் கொடுத்தல் இவைதான் திருமண பந்தம். வாழ்க்கையின் அடுத்த பரிமாணம் திருமணம். சரியான வயதில் அதை செய்யாவிட்டால், வாழ்க்கை ஒரு கட்டத்தில் வெறுமையாகத் தோன்றும், என்று விளக்கினேன்.

'என் திருமண வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கப் போகிறது. என் மனைவி, கடவுள் எனக்குக் கொடுத்த வரம். என்னுடைய மிகச் சிறந்த தோழி அவள். என்னையும் என் மனைவியையும் நேசிக்கிறேன்' என, தினமும் காலையில், வாய்விட்டுச் சொல்லச் சொன்னேன்.

இப்போது இருவருமே திருமணம் செய்து வாழ்க்கையை புதிதாக ஆரம்பித்து இருக்கின்றனர்.



பா.இளையராஜா


மனநல ஆலோசகர்

99623 46966

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us